

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தது மட்டுமின்றி, நான்கு ஆண்டுகளில் மூன்று ஆயிரத்துக்கும் அதிகமான புதியக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்து, கணித மேதை என்ற அடையாளத்தையும் பெற்றவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் (Srinivasa Ramanujan).
ஈரோடு மாவட்டத்தில் கோட்டை எனும் பகுதியில் வசித்து வந்த சீனிவாசன் - கோமளம் இணையர்களுக்கு 1887 ஆம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று பிறந்த ராமானுஜன் மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறனில்லாமல் இருந்தார். இவருக்குப் பின்பு பிறந்த மூன்று குழந்தைகளும் ஓரிரண்டு ஆண்டுகளிலேயே இறந்து போயினர். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையிலேயே இருந்து வந்ததால், 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்துக்கும் இடம் பெயர்ந்தது. 1892 ஆம் ஆண்டில் ராமானுஜன் தொடக்கக் கல்வியில் சேர்க்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1894 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணத்திற்குச் சென்றது. கும்பகோணத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தொடக்கக் கல்வியைத் தொடர்ந்த ராமானுஜன் 1897 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
1897 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட ராமானுஜன், அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார். கணிதப் பாடத்தை ஆர்வத்துடன் படித்த ராமானுஜன் 12 வயதில், லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) பாடப்புத்தகத்தைப் பக்கத்து வீட்டில் படித்த கல்லூரி மாணவர் ஒருவரிடமிருந்து வாங்கிப் படித்தார். அந்தப் பாடப்புத்தகத்தை முழுமையாகப் படித்த இராமானுஜர் அதிலிருந்த கணக்குகள் அனைத்தையும் சரியாகப் போட்டு முடித்துவிட்டார். அதைக் கண்ட கல்லூரி மாணவர் ஆச்சரியமடைந்து போனார்.
லோனி எழுதிய முக்கோணவியல் பாடம் மட்டுமின்றி, கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ராமானுஜன் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர் கொண்ட அந்தப் புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்தது. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; அதில் இருந்தவையும் நிறைவற்றதாக இருந்தன. ராமானுஜன், அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் தனக்குத் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைக்கத் தொடங்கினார். அந்த ஆய்வில் புதியதாகத் தேற்றங்களும் தோன்ற, அவைகளையும் குறிப்பேட்டில் எழுதி வைத்தார். இப்படியே 16 வயதுக்குள் கணிதமேதை என்ற தகுதியைத் தனக்குள் அடைந்தார். ஆனால், வெளி உலகத்துக்கு அது தெரியாமல் இருந்தது.
1903 ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக, கும்பக்கோணம் அரசுக் கல்லூரியில், தற்போதைய 11 மற்றும் 12 ஆவது வகுப்பிற்குச் சமமான கல்வியில் சேர்ந்ததுடன், அக்கல்விக்கான ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ எனும் உதவித்தொகையும் பெற்றார். கல்லூரியில், ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானியக் கிரேக்க வரலாறு மற்றும் வடமொழிப் பாடங்கள் இருந்த போதிலும், கணிதப் பாடத்தில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தினார். அதனால், கணிதம் தவிர மற்ற பாடங்கள் அனைத்திலும் தோல்வியடைந்தார். அதனால், அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த உபகாரச் சம்பளம் எனும் உதவித்தொகையை இழந்தார். அதன் பிறகு, கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு ஆந்திராவுக்குச் சென்று விட்டார்.
ஓராண்டு காலத்திற்குப் பின்பு, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே மீண்டும் வந்து சேர்ந்தார். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்குத் தேவையான வருகைச் சான்று கிடைக்காததால் அவரால் தேர்வு எழுத முடியாமல் போனது. அதன் பின்னர், சென்னை, பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார். அங்கு எஸ்.பி. சிங்காரவேலு முதலியார் என்பவரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து பல கணக்குகளுக்கு விடை கண்டனர். இந்நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னையிலிருந்து மீண்டும் கும்பகோணம் திரும்பினார்.
1910 ஆம் ஆண்டில் இந்தியக் கணிதக் கழகத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராமானுஜன் அதனைத் தொடங்கிய பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரைச் சந்தித்து, அவரது உதவியை வேண்டித் திருக்கோவிலூருக்குச் சென்றார். அவருடைய அறிமுகத்தில் பேராசிரியர் சேஷு அய்யர் என்பவர் மூலம், நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திவான் பகதூர் ஆர். ராமச்சந்திரராவை அணுகினார். அவர், ராமானுஜன் கணிதத்தில் சாதனை செய்யக்கூடியவர் என்று அறிந்து கொண்டு இராமானுஜனுடைய செலவுகளைச் சிறிது காலத்திற்குத் தானே ஏற்றார். இந்நிலையில், சென்னைத் துறைமுக அலுவலகத்தில் எழுத்தர் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும், கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
1911 ஆம் ஆண்டில் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை வெளியானது. அதனைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1913 ஆம் ஆண்டு மே 1 ஆம் நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்தில் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு, 1913 ஆம் ஆண்டு ஜனவரியில் பேராசிரியர் சேஷு அய்யரும் அவருடன் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜி.ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுத வைத்தனர். ராமானுஜன் கடிதத்துடன், அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பி வைத்தார். அதனைப் பார்த்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இராமானுஜரைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வரும்படி தெரிவித்தனர்.
1914 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கேம்பிரிட்ஜ் சென்ற ராமானுஜன் நான்கு ஆண்டுகள் அங்கு இருந்தார். அப்போது அவர், 27 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருந்தார். அதில் 7 கட்டுரைகள் பேராசிரியர் ஹார்டியுடன் சேர்ந்து எழுதப்பட்டதாகும். 1918 ஆம் ஆண்டில் அவருக்கு F.R.S (Fellow of the royal Society) என்ற சிறப்பு அளிக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்வ்ய் செய்யப்பட்டார். இந்த இரண்டு சிறப்புகளையும் பெற்ற முதல் இந்தியர் அவர்தான். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கிருந்து இந்தியா திரும்பினார். அவருடைய உடல் நிலை சீரடையாத நிலையில் 1920 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26 அன்று 32 வயதிலேயே கும்பகோணத்தில் காலமானார்.
இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிகவும் வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆம் ஆண்டுக்கும், 1918 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டறிந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரையிலான பல்வேறு துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சீனிவாச இராமானுசனின் 125 ஆவது பிறந்த நாளான 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று கூகுள் தனது தேடுபொறியின் முகப்பு பக்கத்தில் அவரின் டூடுலை வெளியிட்டு சிறப்பு செய்தது. இவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ராமானுஜன் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஞான ராஜசேகரன் எழுதி இயக்கிய இப்படம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் படமாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.