வியர்வை சிந்தும் விவசாயிகள்... கொண்டாடுவோம் இவர்களை!

டிசம்பர் 23: தேசிய உழவர் நாள்!
National Farmers Day
National Farmers Day
Published on

இந்தியாவில் உழவர்களின் நலனுக்காகவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் நாளன்று, ‘தேசிய உழவர் நாள்’ (Indian Farmer's Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14 வரை பணியாற்றிய சவுதாரி சரண் சிங் பிறந்த நாளே தேசிய உழவர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் பதவிக்காலத்தில், ஜமீன்தாரி ஒழிப்புமுறைச் சட்டத்தை கொண்டு வந்தார். அதே வேளையில் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தார். அவருடைய ஆட்சியின்போதே உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதைப் போன்றே அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டுவந்தார்.

2001 ஆம் ஆண்டில், அவரது விவசாயிகளின் நலனுக்கான பங்களிப்பைப் போற்றிடவும், ஒரு விவசாயி நாட்டின் பிரதமராக மாறியதைச் சிறப்பிக்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான டிசம்பர் 23 ஆம் நாளை, 'தேசிய விவசாயிகள் நாள்’ எனக் கொண்டாடுவதாக இந்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் தேசிய உழவர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

வேளாண் துறையின் சமீபத்திய கற்றல்களுடன் சமூகத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் யோசனையை இந்த நாள் குறிக்கிறது. இந்நாளில், விவசாயிகள் செய்த பணிகளைப் பாராட்டும் விதத்தில் பல்வேறு நிகழ்வுகள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை ஏற்பாடு செய்யப்பட்டு இந்த நாள் கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் பழைமையான ஆலமரம் எங்கே உள்ளது தெரியுமா?
National Farmers Day

நமது அன்றாட வாழ்க்கையில் விவசாயிகளின் பங்களிப்புகள் மகத்தானவை மற்றும் கணக்கிட முடியாதவை. இந்த நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் உணவளிக்கவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும் விவசாயிகள் தங்களது பங்களிப்பினை நாள்தோறும் விடுப்பு எடுக்காமல் செய்தாக வேண்டும். விவசாயிகளின் உழைப்பில்தான், நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்பெற்று மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றன. விவசாயிகளின் பணி முடங்கிப் போனால், உணவுப் பற்றாக்குறையுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும்.

இதையும் படியுங்கள்:
14 அடி சுற்றளவு கொண்ட தண்டு; இலைகளோ இரண்டே இரண்டு! என்ன இது?
National Farmers Day

விவசாயிகளின் உழைப்பில் வாழும் நாம், விவசாயிகளைப் பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை. இந்தத் தேசிய உழவர் நாளிலாவது அவர்களை நினைத்துப் பார்க்கலாம், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர்களைப் பாராட்டி மகிழலாம். அவர்களது தேவைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com