

1889ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அலகாபாத் நகரில் ஆனந்த பவன் மாளிகையில் புகழ் பெற்ற வழக்கறிஞர் மோதிலால் நேரு - சொரூபா ராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் ‘ஜவஹர்.’ அதற்கு ‘ரத்தினம்’ என்று பொருள். பெயருக்கேற்ப அவர் மனிதர்களுள் மாணிக்கமாகத் திகழ்ந்தார். 11 வயதில் ஹாரே பள்ளியில் பட்டம் படிக்கச் சேர்ந்த நேரு, டிரினிட்டி கல்லூரியிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்து முடித்து 1912ல் பாரிஸ்டர் நேருவாக தாயகம் திரும்பினார். 1916ல் கமலாவின் கணவரானார் நேரு.
நேரு நினைத்திருந்தால் புகழ் பெற்ற வக்கீலாக வலம் வந்திருக்க முடியும். ஆனால், இந்திய சுதந்திர வேட்கையில் ஆர்வம் கொண்டு, தனது தந்தையுடன் காந்திஜி தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கு கொண்டார். அதற்காக பல முறை சிறை சென்றார். அவர் சுதந்திரத்துக்காகச் சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய சுயசரிதம், உலக வரலாறு, மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களாயின.
இந்திய நாட்டையும், இந்திய நாட்டு மக்களையும் தனது உயிரினும் மேலாக நேசித்தார் நேரு. தனது வாழ்வின் வளங்களை எல்லாம் இதற்காகவே அர்ப்பணித்தார் நேரு. தனது கடுமையான இந்திய சுதந்திரப் பணி, நாட்டுப் பணிகளுக்கு இடையே அவர் குழந்தைகளிடம் மாறாத அன்பு கொண்டு அவர்களுடன் ஒரு குழந்தையாகவே பழகி வந்தார். நேருவின் திறமை கண்டு பிரிட்டிஷ் அரசு அவரை 1946ம் ஆண்டு இடைக்கால பிரதமராக அமர்த்தி அழகு பார்த்தது. தனது பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி தவறாமல் காந்திஜியிடம் ஆசி பெறுவார். அப்படித்தான் அந்தாண்டும் புதுடெல்லியில் உள்ள பங்கி காலனியில் இருந்த காந்திஜியிடம் ஆசி பெறச் சென்றார்.
அந்த நேரத்தில் காந்தியடிகள் ஏதோ அலுவல் காரணமாக பிசியாக இருந்தார். அந்த நேரத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட அருகில் உள்ள பங்கி காலனி குழந்தைகளிடம் விளையாட ஆரம்பித்துவிட்டார். அந்த நேரத்தில் அங்கே கவிக்குயில் சரோஜினி நாயுடு வந்தார். காந்தியடிகளும் அங்கு வந்து சேர்ந்தார். நேரு குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்ததை காந்திஜியும் சரோஜினி நாயுடுவும் ரசித்தனர்.
அப்போது சரோஜினி நாயுடு, காந்திஜியிடம் "நேரு பிறந்த நாளை நாம் ஏன் குழந்தைகள் தினமாகக் கொண்டாடக் கூடாது?” என்று கேட்டார். “ஆம்! நேரு குழந்தை உள்ளம் கொண்டவர். இது மிகவும் பொருத்தமான யோசனை” என்று காந்தியடிகளும் ஆமோதித்தார்.
அன்றே நவம்பர் 14 பங்கி காலனியில் குழந்தைகள் தினம் முதன் முதலாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளிடம் எந்தவிதமான தயக்கமும் இன்றி சகஜமாகப் பழகுவார் நேரு, குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து விளையாடுவார்.
நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947ம் ஆண்டு ஆனார். அதிலிருந்து 17 ஆண்டுகள் இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமராக இருந்து இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தார். உலக சமாதானத்துக்கு வழி காட்டும் ஒளிச் சுடராகத் திகழ்ந்தார்.
அடிமை நாடுகளின் சுதந்திரம் தட்டிப் பறிக்க முற்படுகிற போதெல்லாம் ஓங்கி ஒலித்தது நேருவின் குரல்தான். மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி கண்டது இவரது உழைப்பால்தான்.
எவ்வளவு வேலைப் பளு இருந்தாலும் சரி, புதுடெல்லியில் நேஷனல் அரங்கில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு தானும் ஒரு குழந்தையாகி விடுவார். பலவிதமான போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு தனது கைப்பட பரிசுகள் கொடுத்து மகிழ்வார். இது 1957ம் ஆண்டு வரை தவறாமல் நடந்தது. அதன் பின்னர் தான் கலந்து கொள்வதால் தனக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டேன் என்கிறார்கள் என்று இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்தார். இந்த காரணங்களினால்தான் குழந்தைகள் அவரை ‘நேரு மாமா’ என்று அழைத்தனர்.
1949ம் ஆண்டு இந்தியப் பிரதமராக நேரு இருந்தபோது ஜப்பான் நாட்டு குழந்தைகள் தாங்கள் யானையை இது வரை கண்டதில்லை என்று நேருவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். உடனே ஜப்பான் நாட்டிற்கு ஒரு குட்டி யானையை பரிசாக அனுப்பி வைத்தார். அதற்கு தனது மகள் ‘இந்திரா’வின் பெயரையே வைத்தார்.
இதனைக் கண்ட மற்ற நாட்டு குழந்தைகளும், நேருவிடம் உரிமையுடன் யானையை பரிசாகக் கேட்டனர். அவரும் வருடம் ஒரு நாட்டிற்கு குழந்தைகளுக்காக யானை குட்டிகளை பரிசாக வழங்கினார், அப்படி யானை குட்டிகளை நேருவிடம் பரிசாகப் பெற்ற நாடுகள் ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஹாலந்து.
1957ம் ஆண்டு ஒரு நாள் மாலை பிரதமர் நேரு, தனது அலுவலகத்திலிருந்து யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றமடைந்து விட்டனர். பின்னர்தான் தெரிந்தது, நேரு அருகிலுள்ள ஒரு பூங்காவில் குழந்தைகளுடன் ஆடி, பாடி விளையாடிக் கொண்டிருந்தது. அத்தனை பிரியம் குழந்தைகள் மீது அவருக்கு. இந்தியாவின் மேன்மையை கருதியே வாழ்ந்த, குழந்தைகளின் மனம் கவர்ந்த ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27ம் தேதி காலமானார்.