
கல்வியும், இலக்கியமும், சுயமரியாதையும் ஒரு மனிதனுக்கு எதற்காக இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கிறார் தந்தை பெரியார்!
இந்நாட்டிற்கு வேண்டியது மக்களை ஒழுக்கத் துறையில், நாணயத் துறையில், தன்னல மறுப்புத் துறையில், அன்புத் துறையில் செலுத்துவதற்கேற்ற நெறிகளும் திட்டங்களுமேயாகும். மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதுபோலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீர வேண்டியது அவசியமாகும்.
அன்பையும், சத்தியத்தையும், உதவி செய்வதையும், குணமும் - நடத்தையாய் கொண்டதுதான் மதம் (நெறி), அதுவும் அப்படிப்பட்ட ஒரே மதம்தான் உலகம் முழுவதற்கும் உண்டு. மற்றக் காரியம் எதுவும் மதத்திற்குச் சம்பந்தப்பட்டதல்ல. சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கி விட்டு தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலேயாகும்.
கல்வி என்பது மனிதன் ஒருவனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவனைத் தகுதிப்படுத்துவதற்குதான். கடவுள், உருவம், குணமற்றவர் என்று ஏன் சொல்லப்பட்டது என்றால், அயோக்கியர்கள் கடவுளுக்குத் தங்கள் இஷ்டம் போல உருவம், குணம் ஏற்படுத்தி, எதற்காக கடவுள் ஏற்பட்டதோ அந்த பலன் இல்லாமல் செய்து விடுவார்களே என்பதற்காகத்தான்.
ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மை மனித சமூகத்தில் இல்லாதிருக்கும்படி செய்வதே ஒழிய, இங்கொருவனுக்கு, அங்கொருவனுக்குச் சாப்பாடு போடுவதால் அல்ல. எந்த மனிதனுக்கும் அவனது அபிப்பிராயம் என்னும் பெயரால் எதையும் சொல்ல உரிமை உண்டு. அதைத் தடுப்பது யோக்கியமற்ற காரியம்.
திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கின்றன.
பாமர மக்கள் கல்யாணம் என்றால், வேலைக்கு ஆள் வைப்பது போல கருதுகிறார்கள். புருஷனும் அப்படியே நினைக்கிறான். புருஷன் வீட்டாரும் தங்கள் வீட்டு வேலைக்கு ஒரு பெண் கொண்டு வருவதாகக் கருதுகிறார்கள், பெண் வீட்டாரும் வீட்டு வேலைக்குத் தயார் செய்து தங்கள் பெண்களை விற்றுக் கொடுக்கிறார்கள்.
நம் நாட்டில் புதிதாக ஒருவரைச் சந்தித்தால் அவர் உத்தியோகத்தைப் பற்றி தன் முதலில் விசாரித்து அதற்குத்தக்க மதிப்பு கொடுப்போம். ரஷ்யாவில் ஒருவரைக் கண்டதும், ‘சமுதாய சேவை என்ன செய்திருக்கிறான்?’ என்றுதான் பிரதானமாய்க் கேட்பார்கள்.
இதுவரை சம்பாதித்த பொருட்களை, லாபங்களை வேண்டுமானால் நாம் கேட்க வேண்டாம். ஆனால், இன்று நாடுள்ள நிலையில் மேலும் மேலும் தனிப்பட்ட நபர்கள் பொருள் குவிப்பதற்கு ஏன் இடமளிக்க வேண்டுமென்று கேட்கிறேன்.
உலகில் எந்தெந்த ஸ்தாபனங்களால்-எந்தெந்த தன்மைகளால், மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும் சமத்துவதற்கும், முற்போக்கிற்கும் தடைகளும் சாந்திக்கும், சமாதானத்திற்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ, அவையெல்லாம் அழிந்தொழிந்து போகும்படிச் செய்ய வேண்டியதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியம்.
இளைஞர்கள் குழந்தைகளுக்கு சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின்விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றிவிடுபவர்கள். எழுச்சி என்பது எங்கு காணப்படுகிறதோ, கூட்டம், குதூகலம் என்பவை எங்கெங்கு காணப்படுகிறதோ அவற்றைப் போற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள். அரசியல் மூலம் பணம், புகழ், பதவி முதலியவற்றை சம்பாதிக்க திட்டமிடும் கூட்டத்தினர் மனித சமுதாயத்திற்கு எலும்புருக்கி நோய் போன்றவர்கள்.
இலக்கியம் எதற்காக இருக்க வேண்டும், எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? என்பது பற்றிச் சிந்தித்தால்.மனிதனின் உயிர் வாழ்க்கை மட்டுமில்லாமல், மனித சமுதாய வளர்ச்சிக்கும் அவை ஏற்றதாக இருக்க வேண்டும்.