
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாளன்று ‘தேசியப் பொறியியலாளர் நாள்’ (National Engineer’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இந்தியப் பொறியியலாளரும், 1955ம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதான ‘பாரத ரத்னா விருது’ பெற்றவருமான மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளினை, ஒவ்வொரு ஆண்டும் தேசியப் பொறியியலாளர் நாளாகக் கொண்டாட வேண்டுமென்று 1968ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
தேசியப் பொறியியலாளர்கள் நாள், இந்தியாவிலுள்ள பொறியியலாளர்களைச் சிறப்பிக்கிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்குப் பொறியியலாளர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுகிறது. மேலும், எதிர்காலப் பொறியியலாளர்களை ஊக்குவிக்கவும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் பொறியியலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும் உதவுகிறது.
பொறியியலாளர்கள் நாள் என்பது பல்வேறு சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்தப் பொறியியலாளர்களைக் கொண்டாடுகிறது. மேலும், சமூகங்களில் பொறியியலாளர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் உலகளாவிய உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டிற்கும் பங்களிக்கிறது. உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதில் பொறியியலின் பங்கு குறித்துச் சொல்வதுடன், பொறியியலைக் கொண்டாடவும், உத்வேகம் பெறவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் சிறப்பு வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புதியதொரு கருப்பொருளைக் கொண்டு, இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கு, ‘ஆழமான தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சிறப்பு: இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை இயக்குதல்’ (Deep Tech & Engineering Excellence: Driving India’s Techade) எனும் கருப்பொருள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலிருக்கும் பொறியியல் நிறுவனங்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் கருப்பொருளை முதன்மையாகக் கொண்டு, கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் போன்றவற்றை நடத்துகின்றன. இதேபோன்று, மக்களிடையே பரப்புரைகளையும் மேற்கொள்கின்றன. இதன் வழியாக, இளம் பொறியாளர்களை ஊக்குவிப்பதுடன், பொறியியல் துறை சார் வல்லுநர்களின் சாதனைகளும் பாராட்டப்படுகின்றன. இந்நிகழ்வுகளின் வழியாக, இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தொழில்முறை வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இருப்பவர்கள், தேசியப் பொறியியலாளர்கள் நாள் மற்றும் உலகப் பொறியியலாளர்கள் நாள் என்று இரண்டையும் குழப்பிக் கொள்கிறார்கள். இவ்விரு நாட்களும் வேறுபட்டவை. உலகப் பொறியியலாளர்கள் நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள், 2020ம் ஆண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. இது பொறியியலாளர்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கவும், காலநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற சவால்களை தீர்ப்பதில் பொறியியல் வகிக்கும் பங்கு குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும் முயல்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.