பிப்ரவரி 12: டார்வின் நாள் - உலகை வியப்பில் ஆழ்த்திய டார்வினின் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’!

‘உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்து போகும்...’ என்று கண்டறிந்த சார்லஸ் டார்வின் பிறந்த நாள்!
Darwin Day
Darwin Day
Published on

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் நாளன்று, டார்வின் நாள் (Darwin Day) கொண்டாடப்பட்டு வருகிறது. பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்ததுடன், அறிவியலை மேம்படுத்த உதவிய சார்லஸ் டார்வினின் பணிகளை நினைவு கூரும் விதமாக, அவர் பிறந்த பிப்ரவரி 12 ஆம் நாளில், டார்வின் நாள் கொண்டாடப்படுகிறது.

நியூயார்க் நகர கல்லூரியின் பேராசிரியர் மாசிமோ பிக்லியூசி என்பவர், 1997 ஆம் ஆண்டு முதல், பிப்ரவரி 12 ஆம் நாளை, டார்வின் நாளாகக் கொண்டாடத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில், அமெரிக்கச் சட்டமியற்றுபவர் ஜிம் ஹைன்ஸ் ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அது பிப்ரவரி 12 ஆம் தேதியை டார்வின் நாளாக அறிவிக்க வழி வகுத்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 அன்று சார்லஸ் டார்வின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் டார்வின் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாளில் சார்லஸ் டார்வின் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவர்தான். டார்வின் மிக இளம் வயதிலேயேத் தன் தாயை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி, எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார். ஆனால், இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.

சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால், அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.

அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின். படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது.

1831-ஆம் ஆண்டு - தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்து கொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால், ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்:
14 சைபர் மோசடி முறைகள் - கண் இமைக்கும் நேரத்தில் காலியாகி விடும் உங்கள் கணக்கு!
Darwin Day

ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்து கொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும், அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது. “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது.

இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணை கொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்குச் சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால், பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார்.

இதையும் படியுங்கள்:
நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல்: 12 லட்சம் வரை வரி விலக்கு!
Darwin Day

கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இவ்வாய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.

சார்லஸ் டார்வினுக்கும், ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார். புதிய உயிரினங்கள் உருவாவதற்கான ஒழுங்கு மற்றும் விதிமுறைகள், அவ்வாறு உருவாகும் உயிரினங்களுள் சில பிரிவுகள் முழுமையாக மூல நிலையிலிருந்து மாறிவிடுவதற்கான போக்குகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் டார்வின் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பெருமை கல்பனா சாவ்லா!
Darwin Day

1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி, "உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்து போகும். இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும்" என்று கூறினார் டார்வின். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பரிணாம வளர்ச்சிக் கொள்கை மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கிய போது, நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாகச் சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால், அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் கொள்கை. அவர் வாழ்ந்த போதே, அவரது நூல் உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்து மாறுபாடுகளுக்கு இடம் தரும் நூலாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதலமைச்சர்!
Darwin Day

டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபு வழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும்.

சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்பிரல் 19 ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அறிவியலில் ஆர்வமுடையவர்கள் அனைவரும் பிப்ரவரி 12 ஆம் நாளை, டார்வின் நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில், அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையில் டார்வின் ஆற்றிய பங்கினை நினைவு கூர்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com