
ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 13 ஆம் நாளன்று, ‘உலக வானொலி நாள்’ (World Radio Day) கொண்டாடப்பட்டு வருகிறது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், வானொலி மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பிடம் (யுனெஸ்கோ) 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20 அன்று, ஸ்பானிஷ் வானொலி அகாடமி, ‘உலக வானொலி நாள்’ திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்தது. 2011 ஆம் ஆண்டு, நவம்பர் 11 ஆம் நாளில், இந்தக் கோரிக்கை அனைத்து யுனெஸ்கோ உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வானொலி நிறுவப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 13 ஆம் நாள் உலக வானொலி நாளாகக் கொண்டாடத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கண்களுக்கு ஓய்வளித்து செவிகளுக்கு விருந்து கொடுப்பதையேப் பலரும் விரும்புகின்றனர். நூறு ஆண்டுகளை கடந்து விட்ட வானொலி, கருத்துச் சுதந்திரத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது. நாம் விரும்பிய இடத்திற்கு எளிமையாக எடுத்துச் செல்லும் பொருளாகவும் வானொலி இருக்கிறது. இதனால், சாலையில் வாகனத்தில் செல்வோரும், கடலில் படகில் செல்வோரும் வானொலியைக் கேட்டுக் கொண்டே மகிழ்வுடன் பணிக்குச் செல்ல அல்லது பயணம் செல்ல வானொலி உதவுகிறது.
ஒரு தகவலை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு காற்று வழியாகவேக் கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றிய முதல் ஊடகம், வானொலிதான். ஆனால் இன்று, தொலைக்காட்சி, கைபேசி, இணையதளம் என நாம் வளர்ந்து விட்டாலும், முன்னோடியாக இருப்பது வானொலிதான். தற்போது கூட, தேநீர்க் கடைகள், ஆட்டோக்கள், கார்கள் மற்றும் பேருந்துகளில் வானொலி ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
மனிதன் எதிரொலி கேட்டு வானொலி படைத்தான் என்றான் கவிஞன். எதிரொலியை உற்று நோக்கிய ஜேம்ஸ் கிளார்க் மார்க்ஸ்வெல், மைக்கேல் பாரடே ஆகிய இரண்டு அறிவியலாளர்கள் மின்காந்த அலைகளை ஒலி அலைகளாக மாற்றும் கருவியை உருவாக்கினர். இவர்களின் அடித்தொட்டு ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகளை டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். பின்னர் இத்தாலியைச் சேர்ந்த குலியெல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டறிந்தார். இதையடுத்து, வானொலி கண்டுபிடிப்பிற்காக மார்கோனிக்கு 1909ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது (Karl Ferdinand Braun என்பவருடன் பகிர்ந்து கொண்டார்) வழங்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை 1927 ஆம் ஆண்டு மும்பை மற்றும் கொல்கத்தாவில் முதன் முதலாக வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.
வானொலியில் செய்திகளையும், திரைப்படப் பாடல்களையும் கேட்கும் நேயர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது உண்மையெனினும், இன்றையத் திறன்பேசிகளிலும் வானொலி தனக்கான ஒரு குட்டி இடத்தை தக்க வைத்துள்ளது. இன்றளவும் போர்ச்சூழல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போதும், கடலுக்குள் இருக்கும் மீனவர்களிடம் புயல், கடல் கொந்தளிப்பு போன்ற முக்கிய தகவல்களை கொண்டு செல்வதிலும் முதன்மையான இடத்தில் வானொலி உள்ளது.
இன்று உலகம் முழுவதிலும் ஒரு இலட்சத்திற்கும் மேலான வானொலி நிலையங்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அதிகப்படியான கிராமங்களில் இன்றளவும் வானொலியை பயன்படுத்தித்தான் அன்றாடத் தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் வானொலி நாளுக்கு, கருத்துரு உருவாக்கப் பெற்று, அந்தக் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு வானொலி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு வானொலி நாளுக்கு, ’வானொலி மற்றும் காலநிலை மாற்றம்’ என்கிற கருத்துரு கொடுக்கப்பட்டிருக்கிறது.
காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, 2025 ஒரு முக்கியமான ஆண்டாகும். பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, மனிதகுலம் புவி வெப்பமடைதலை 1.5°C க்குள் வைத்திருக்க வேண்டுமானால், பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறையத் தொடங்குவதற்கு முன்பு, அந்த ஆண்டுக்குள் உச்சத்தை எட்ட வேண்டும். உலகில் செயல்பட்டு வரும் அனைத்து வானொலி நிறுவனங்கள், இந்த ஆண்டில் காலநிலை மாற்றம் குறித்த பல்வேறு நிகழ்வுகளைத் தயாரித்து ஒலிபரப்புகளைச் செய்திடும். இதன் மூலம் எளிமையாக, வானொலி வழியாக உலகம் முழுவதுமுள்ள அனைத்துத் தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது