உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று, பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகில் பயன்பாட்டிலுள்ள பல மொழிகளை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மொழி மற்றும் பண்பாட்டு பன்மையைக் காக்கும் விதத்திலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
1952 ஆம் ஆண்டு, பிப்ரவரி 21 ஆம் நாளன்று அன்றைய கிழக்குப் பாக்கிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தின் போது உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக, அந்நாளைப் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் என்பவர் 1998 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் (யுனெஸ்கோ) முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, வங்காள தேச அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பல்வேறு நாட்டு அமைப்புகளின் ஆதரவுகள் காரணமாக, 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தாய்மொழி (Mother Tongue) என்பதற்குப் பல விதமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. மிகப் பரவலாகப் புழங்கி வரும் இச்சொல் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகத் தோன்றினாலும், இதற்குச் சரியான வரைவிலக்கணம் கொடுப்பது எளிதானதல்ல. ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, ஒருதலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகிறது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன. இன்றைய நிலையில் பல நாடுகளும், சமுதாயங்களும், நிறுவனங்களும் தங்களது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தாய்மொழி என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கின்றன.
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள், இசைத்தமிழ் எனும் நூலில் 'தாய்மொழி' எனும் தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில்,
“தாய் மொழி என்றால் தாயார் புகட்டிய மொழி. தாயின் உடலிலிருந்துதான் நம்முடைய உடல் உண்டாயிற்று. அவள் ஊட்டிய அமுதத்திலிருந்துதான் நம் உடல் வளர்ந்தது. அவள் சொன்ன சொற்களிலிருந்து நமக்கு அறிவு ஆரம்பித்தது. பின்னால், நாம் எத்தனை பாஷைகளைப் (மொழிகளைப்) படித்தாலும் அவற்றிலுள்ள அறிவுகளை நம்முடைய தாய்மொழியில் பெயர்த்துச் சொன்ன பிற்பாடுதான் புரிந்து கொண்டோம். பின்னால், நாம் தாய்மொழியையே முற்றிலும் மறந்து போக முடியுமானாலும் கூட, நமக்கு இந்தப் பிறமொழி அறிவையும் தந்தது தாய்மொழிதான். ஆகையால், தாய்மொழி உறவு தள்ள முடியாதது. எந்த அறிவும் தாய்மொழி மூலமாகத்தான் வளரமுடியும். ஒரு தமிழ்க் குழந்தை, பேச்சையறிவதற்கு முன்னால் பெற்ற தாயையிழக்க நேர்ந்து, ஒரு தெலுங்கு செவிலித்தாயால் வளர்க்கப்பட்டு, அந்த செவிலித்தாய் அக்குழந்தைக்குத் தெலுங்கிலேயேப் பேசப் பழக்கி விடுவாளானால், அந்தக் குழந்தைக்குத் தாய்மொழி தெலுங்குதான். அம்மொழியிற் சொன்னால்தான் அக்குழந்தை அறிந்து கொள்ள முடியும்”
என்று தாய்மொழிக்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
குழந்தைகள் தமது தாய்மொழியில்தான் கல்வி கற்க வேண்டும். அதுதான் அவர்களது சிந்தனைத் திறனை வளர்க்கும். உலகத்தின் வளர்ந்த நாடுகள், தமது நாட்டுக் குழந்தைகளுக்குத் தாய்மொழி மூலம் கல்வியினை வழங்குகின்றனர். தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக உள்ளது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்த மொழியினைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். தாய்மொழியால் சிந்தனை பெருகும். மன வளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க முடியும்.
மனித குலத்தின் அறிவின் நீட்சி தாய்மொழியால் மட்டுமே முடியும். சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு. மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் மொழியின் உயிர்மை உள்ளது. மகாத்மா காந்தி தனது வாழ்க்கை வரலாற்றை அவரது தாய்மொழியான குஜராத்தியில்தான் எழுதினார். நோபல் பரிசு பெற்ற தாகூரின் கீதாஞ்சலி அவரது தாய்மொழியான வங்கமொழியில்தான் முதலில் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் தமது சிந்தனைகளைத் தங்கு தடையில்லாமல் தாய்மொழியில் மட்டுமேத் தர முடியும்.
தமிழ்நாடு அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்கென்று, தனியாக ஒரு துறையினை ஏற்படுத்தி, அதன் வழியாக, தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
பன்னாட்டுத் தாய்மொழி நாள் கொண்டாடத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு, 2025 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளன்று, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று அனைத்திலும் ‘உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி’ ஏற்குமாறு ஆணையிட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.