ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 ஆம் நாளில் இந்தியக் கடலோரக் காவல்படை நாள் (Indian Coast Guard Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடல் வழியாகப் போதைப் பொருட்கள் மற்றும் கடத்தல்களைத் தடுக்க 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று, கடலோரக் காவல்படை உருவாக்கப் பெற்றது. 1978 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 18 அன்று, இந்திய நாடாளுமன்றம் கடலோரக் காவல்படை உருவாக்கப்பெற்ற நாளை, இந்தியக் கடலோரக் காவல்படை நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியக் கடலோரக் காவல்படை என்பது இந்திய ஆயுதப் படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் படை சாராத கடல் வளங்களைப் பாதுகாக்கக் கடலோரப் காவல்படையை உருவாக்க வேண்டுமென இந்தியக் கடற்படை முன்மொழிந்தது. 1960 ஆம் ஆண்டுகளில் கடல் வழியேப் பல கடத்தல் பொருட்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வந்தன. இவை, உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என சுங்கத்துறை அஞ்சியது. இவற்றைத் தடுக்க சுங்கத்துறை கடற்படையின் உதவியை அடிக்கடி நாடியது. கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி, கடத்தல் படகுகளை வழிமறிக்க வேண்டியது. 1971 ஆம் ஆண்டு இந்தச் சிக்கலைப் பற்றி ஆராய நாக் சவுத்திரி ஆணையம் உருவாக்கப்பட்டது. இதில் கடற்படையும் வான்படையும் பங்கு பெற்றன.
1971 ஆம் ஆண்டி இந்த ஆணையம் இந்தியாவின் நீண்ட கடற்கரையை ரோந்து சுற்றித் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், மீன் பிடிப் படகுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சட்ட விரோதப் படகுகளை வழிமறிக்க அனைத்து வசதிகளையும் கொண்ட படை அணியை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. மேலும், கருவிகளின் தன்மை, அவற்றின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு, பணி செய்ய தேவையான ஆட்கள் போன்றவற்றைப் பரிந்துரைத்தது.
1973 ஆம் ஆண்டில் இந்தியா புதிய படையணிக்குக் கருவிகளைக் கொள்வன செய்யும் திட்டத்தைத் தொடங்கியது. இந்தியக் கடற்படையில் இருந்து ஆட்களைத் தற்காலிக அடிப்படையில் பெற்றது. தன் ஆட்கள் முதன்மைப் பணியை விட்டு விலகி வேலை செய்வதனால் தன் நோக்கம் பாதிப்படையும் என்று கடற்படை கருதியது. இதைத் தொடர்ந்து கடற்படை தலைமை அதிகாரி, பாதுகாப்புத் துறைச் செயலருக்குக் கடிதம் எழுதினார். அதைப் பெற்றுக் கொண்ட பாதுகாப்புத் துறைச் செயலர் அமைச்சரவைச் செயலருக்கு 1974 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31 ஆம் நாளில், கடலோரக் காவல்படை அவசியம் என வலியுறுத்தினார்.
அதன் பின்னர், 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ருசுடமஜி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தன் பரிந்துரையாகக் பாதுகாப்புத் துறையின் கீழ் கடலோரக் காவல் படை உருவாக்கப்படவேண்டும் என்று 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தெரிவித்தது. ஆனால், அமைச்சரவைச் செயலாளர் உள்துறையின் கீழ் கடலோரக் காவல்படை உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தார். அதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மறுத்து பாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று கடலோரக் காவல்படை, கடற்படையிடம் இருந்து பெறப்பட்ட 5 ரோந்துப் படகுகள் மற்றும் 2 பீரங்கிப் படை கப்பல் வரிசைகளைக் கொண்டு செயல்படத் தொடங்கியது. 1978 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 18 ஆம் நாளில், இதன் பணிகளை வரையறை செய்து கடலோரக் காவல் படைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அடுத்த நாளில் இருந்து இப்படைப்பிரிவு முறையாக நடைமுறைக்கு வந்தது. கடற்படையின் துணை அட்மிரல் வி. எ. காமத் என்பவர் இதன் முதல் தலைவராக இருந்தார்.
கடலோரக் காவல் படை 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் மும்பையிலும், கிழக்கு மண்டலத்தின் தலைமையிடம் சென்னையிலும், அந்தமான் & நிக்கோபர் மண்டலத்தின் தலைமையிடம் போர்ட் பிளேரிலும் மற்றும் வட மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் காந்திநகரிலும் அமைத்துள்ளது. மொத்தம் 5440 பேர் இதில் பணிபுரிகின்றனர். கடலோரக் காவல்படை மொத்தம் 29 கடலோரக்காவல் நிலையங்களையும், தமன் மற்றும் சென்னை என்று 2 வான் தளங்களையும், கோவா, கொல்கத்தா, போர்ட் பிளேர் போன்றவற்றில் வான் வளாகங்களையும் கொண்டுள்ளது.
கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல்களில் Indian Coast Guard Ship (ICGS) என்று எழுதப்பட்டிருக்கும். இப்படையில் தற்போது 86 கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, டோர்னியர் டு 228 வகை வானூர்திகள் 20 தற்போது பயன்பாட்டில் உள்ளன. 18 கட்டப்பட்டுக் கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் போக்குவரத்து, ரோந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுகின்றன. மேலும், பல் பயன் உலங்கு வானூர்திகள் 21, தாக்குதல் உலங்கு வானூர்திகள் 5 ஆகியவையும் பயன்பாட்டில் உள்ளன.