இந்தி மொழி நாள் - பள்ளிகளில் மூன்றாம் மொழியாக இந்தி மொழிப் பரவல்!

Hindi Day
Hindi Day
Published on

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் நாள் இந்தி மொழி நாள் (Hindi Day) கொண்டாடப்படுகிறது. இந்நாளினை இந்தி திவாஸ் என்றும் சொல்கின்றனர். 'சிந்து நதியின் நிலம்' என்று பொருள்படும் ஹிந்த் என்ற பாரசீக வார்த்தையிலிருந்து இந்தி அதன் பெயரைப் பெற்றது என்று சொல்லப்படுகிறது.

நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தேவநாகரி எழுத்துக்களில் இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில், செப்டம்பர் 14, 1949 அன்று தேசிய அரசியலமைப்பால் இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக மாறியது. மேலும், தேவநாகரி எழுத்துக்களில் இந்தியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிப்பதில் முக்கிய பங்கு வகித்த பியோஹர் ராஜேந்திர சிம்ஹாவின் பிறந்த நாளான செப்டம்பர் 14 அன்று வருவதால், இரண்டையும் ஒருங்கிணைத்து செப்டம்பர் 14 ஆம் தேதியை இந்தி திவாஸ் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். 1975 ஆம் ஆண்டு முதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்தி மொழி நாள் செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்பட்டு வந்தாலும், பன்னாட்டு அளவில் இந்தி மொழியை மேம்படுத்துவதற்காக, உலக இந்தி தினம் ஜனவரி 10 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாக இருக்கும் இந்தி மொழி, வடமொழியை அடிப்படையாகக் கொண்டது. இம்மொழியில், உருது, பாரசீகம் மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்றாக இருக்கும் இந்தி மொழி இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.

உலகப் பயன்பாட்டிலுள்ள மொழிகளில் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் மாண்டரின் மொழிகளுக்கு அடுத்ததாக, நான்காவது இடத்தில் இந்தி மொழி உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, மொரிஷியஸ், பிஜி, சுரினாம், கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்தி பேசப்படுகிறது. இந்தியாவின் முதல் மாநிலமாக பீகார், 1881 ஆம் ஆண்டில் உருது மொழிக்குப் பதிலாக இந்தியை தனது அதிகாரப்பூர்வ மாநில மொழியாக மாற்றிக் கொண்டது. அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் இந்தி ஆனது.

இதையும் படியுங்கள்:
உலக முதலுதவி நாள்: முதலுதவியின் நோக்கம் மற்றும் அடிப்படை!
Hindi Day

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி என்கிற கருத்துடன் இந்தி மொழி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதன் காரணமாக பீகாரில் இருந்த போஜ்பூரி மொழி, மகாஹி மற்றும் மைதிலி மொழிகள் குறுகிய வட்டத்தினர் பேசிக்கொள்ளும் மொழியாக மாற்றம் பெற்று பின்னர் அழிந்து போய்விட்டன. பீகார் மாநிலத்தில் மட்டுமின்றி வடக்கே உள்ள 15 க்கும் அதிகமான மாநிலங்களில் அம்மாநில மொழிகள் அழிந்து, இந்தி பேசும் மொழியாக மாறிப் போய்விட்டது.

மகாராஷ்டிராவில் மராத்தி, குஜராத்தில் குஜராத்தி, ஒடிசாவில் ஒடியா, பீகாரில் போஜ்பூரி, மேற்கு வங்கத்தில் வங்காளம், பஞ்சாபில் பஞ்சாபி என்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி வழக்கத்திலிருந்த போதும், அம்மாநிலங்களில் அம்மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தி பேச்சு மொழியாக மாற்றம் பெற்றுவிட்டது. இதனால், அம்மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொழிகள் அழிவுக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்று மொழி ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில், இந்தி மொழிப் பயன்பாட்டுக்குக் கடுமையான எதிர்ப்புகள் இருப்பதால், இந்தி மொழி தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்தி மொழியைப் பரப்ப வேண்டும் என்கிற நோக்கத்துடன் பல மாநிலங்களில் பள்ளிகளில் அம்மாநிலத் தாய்மொழி, ஆங்கில மொழிகளுக்கு அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் இந்தி மொழியை மூன்றாவது மொழிப்பாடமாக ஏற்காமல் இருப்பதால், இந்தி பிரச்சார சபைகள் நிறுவப்பட்டு, அதன் வழியாக, இந்தியைக் கற்க விரும்புபவர்களுக்கு இந்தி மொழி தனிப் பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
ரூபாய் நோட்டுகளில் எழுதுவது குற்றமா?
Hindi Day

இந்தி மொழி நாளில், இந்தி மொழியிலான கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அதன் ஆசிரியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com