
உலகில் அரிதாகி வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ள காண்டாமிருகம், தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா போன்ற தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலக காண்டாமிருக தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளானது 2010ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த உலகில் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஒரு மிருகம் காண்டாமிருகம். காடுகளில் வாழும் சைவப் பிராணியான இது புல், பூண்டு மற்றும் கிழங்குகளையே சாப்பிட்டு தனித்து வாழ்வதை விரும்பும். நிலத்தில் வாழும் மிருகங்களில் யானைக்கு அடுத்தபடியாக அதிக உடல் எடையை கொண்ட மிருகம். காண்டாமிருகங்கள் சராசரியாக 10 அடி நீளமும்,5 அடி உயரமும் 1000 கிலோ எடையையும் கொண்டது. காண்டாமிருகங்கள் தோராயமாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும். உலகில் ஒற்றை கொம்புடன் வாழும் ஒரே உயிரினம் இதுதான்.
ஆரம்பகாலத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சுற்றித் திரிந்த காண்டாமிருகம், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் மட்டுமே வாழ்கின்றன. குட்டையான கால்களில் மூன்று விரல்கள் உண்டு. அகன்ற தோல் இவற்றை இணைத்திருக்கும். போர்வை போல் போர்த்தப்பட்டிருக்கும் அதன் தடித்த தோல்தான் அதனை கவசம் போல் பாதுகாக்கிறது. இது 1 முதல் 5 செ.மீ. தடிமனாக இருக்கும். இதன் தோல் மூன்று மடிப்பாக அமைந்திருக்கும். இதனை துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாது என்பார்கள். உண்மை அதுவல்ல, காண்டாமிருகம் உயிரோடு இருக்கும் வரை இந்த தோல் மிருதுவாகத்தான் இருக்கும். ஆனால், அதே காண்டாமிருகம் இறந்து விட்டால் அதன் தோல் உலர்ந்து போய் கடினமாகி குண்டுகள் துளைக்க முடியாத அளவிற்கு கடினமாகும் என்பதுதான் உண்மை.
காண்டாமிருகத்தை ஆங்கிலத்தில் ‘ரெனோசெரஸ்’ (Rhinoceros) என்கிறார்கள். ‘ரொனோ’ என்றால் மூக்கு என்று அர்த்தம். 'செரஸ்' என்றால் கொம்பு என்று அர்த்தம். கண்டாமிருகத்திற்கு மூக்கின் மீது கொம்பு இருப்பதால் இப்படி பெயரிட்டார்கள். காண்டாமிருகத்திற்கு அதன் கொம்புகள்தான் ஆயுதம். அந்தளவிற்கு அதன் கொம்புகள் கூர்மையும், கடினத் தன்மையும் கொண்டது. இதன் மூக்கிலிருந்து வளர்ந்திருக்கும் கொம்பு தோலில் இருந்து வளர்கிறது. எலும்பு அல்ல, ‘கேரடின்’ (Keratin) எனும் புரதத்தால் ஆனது. எனவே, இதனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
காண்டாமிருகத்தின் கொம்பை அது எதிரிகளை தாக்கப் பயன்படுத்துவதில்லை. பூமியில் புதைந்திருக்கும் கிழங்குகளைத் தோண்டி எடுக்கவே பயன்படுத்தும். எதிரிகளை தனது பல்லினாலேயே கடித்து கொன்று விடும். யானைகளைக் கூடக் கொன்று விடும் ஆற்றல் படைத்தது. பிராணிகளைக் கொன்றாலும் அதை உணவாக அவை உண்ணாது.
காண்டாமிருகம் 1000 கிலோ எடை கொண்டதாக இருந்தாலும் அதற்கு மூளை மிகவும் சிறியதுதான். கிட்டத்தட்ட 400 முதல் 600 கிராம் இருக்கும். ஆனால், மோப்ப சக்தியும், மெல்லிய ஓசைகளைக் கூட கேட்கும் கூர்மையான செவித்திறனும் கொண்டது. காண்டாமிருகங்களுக்கு பார்வைத் திறன் மிகவும் குறைவு. 100 அடி தூரத்தில் இருக்கும் பொருளைக் கூட அதனால் சரியாக பார்க்க முடியாது. ஆனால், மணிக்கு 48 கி.மீ. வேகத்தில் ஓட முடியும். இது மனிதனால் அதிகபட்சமாக வேகமாக ஓட முடிந்த அளவு.
காண்டாமிருகம் தண்ணீர் உள்ள சேற்றில் விழுந்து புரள்வதை மிகவும் விரும்பும். இரவில்தான் இரை தேடும். அதற்கு கோபம் வந்தால் உடலெல்லாம் ரத்தம் போல சிவப்பாக வியர்த்து கொட்டும். மிகவும் மூர்க்கத்தனமாகக் காணப்படும். இது கண்ட இடங்களில் தனது கழிவுகளை மலமாக கழித்து அசுத்தப்படுத்துவதில்லை. சொல்லி வைத்தாற்போல் எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே மலம் கழிக்கும். சாணமிடும்போது பின்னோக்கி நடக்கும்.
நிலத்தில் வாழ்ந்து வரும் விலங்குகளில் இரண்டாவது பெரிய உயிரினம் காண்டாமிருகங்கள்தான். புல் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதிகளிலேயே இவை வசிக்கும். இதில் கருப்பு நிறம், வெள்ளை நிறம், ஒற்றைக் கொம்பு வகை, சுமத்திரன் வகை மற்றும் ஜாவா என காண்டாமிருகங்களில் 5 வகைகள் உள்ளன.
இந்தியாவில் வாழ்ந்து வரும் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவை ஆகும். ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்கள் இரண்டு கொம்புகள் கொண்டவை. பொதுவாக, எல்லா வகையான காண்டாமிருகங்களுமே 1000 கிலோ எடை கொண்டவைதான். ஆனால், மத்திய ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வரும் வெள்ளை காண்டாமிருகங்கள் 2,400 கிலோவும், இந்திய காண்டாமிருகம் 2,300 கிலோவும் எடை கொண்டவை. தற்போது உலகெங்கும் 30,000 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மொத்தமாக 3,000 காண்டாமிருகங்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதில் பெரும்பகுதி அசாம் காசிரங்கா காட்டுப் பகுதியில் உள்ளன. காண்டாமிருகத்தின் மொத்த கர்ப்பக்காலம் 1.3 வருடங்கள். 2 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குட்டி மட்டுமே போடும். அப்போது அதன் எடை 30 முதல் 40 கிலோ இருக்கும்.