ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23ம் நாளன்று, ‘பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்’ அல்லது ‘பன்னாட்டு விதவைகள் நாள்’ (International Widows Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அரசு சாரா நிறுவனமான லூம்பா அறக்கட்டளை நிறுவனர் ராஜ் லூம்பாவின் தாயார் ஸ்ரீமதி புஷ்பாவதி லூம்பா என்பவர், 1954 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று விதவையானதைக் கருத்தில் கொண்டு, லூம்பா அறக்கட்டளை ஜூன் 23 ஆம் நாளை ‘பன்னாட்டு கைம்பெண்கள்’ என்று அறிவித்துக் கொண்டாடியது. அதன் பின்னர், அந்த அமைப்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் நாளன்று நடைபெற்ற கூட்டத்தில், பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளுக்கான தீர்மானத்தை அங்கீகரித்தது. அதன் வழியாக, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும், தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்த கைம்பெண்கள் (விதவைகள்) தங்களது வாழ்வாதாரம், அடிப்படைத் தேவைகள், கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காகப் போராட வேண்டிய நிலை இருந்து வருகிறது. சில சமயங்களின் கட்டுப்பாடுகளின் வழியாக, விதவைகளின் பார்வை துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று சொல்லி அவர்களை விலக்கி வைப்பதில் தொடங்கி, பல்வேறு துன்பங்களுக்கு உட்படுத்தப்படும் நிலை இருக்கிறது. ஏழை நாடுகளில் விதவைகள் பெரும்பாலும் அதிக வன்முறைக்கு ஆளாகின்றனர்.
இந்த வகையான வன்முறை ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மிகவும் பொதுவானது. இந்த நாடுகளில் விதவைகள் அடிக்கடி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தவறான நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். அவற்றையெல்லாம் தவிர்த்து, விதவைகளின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குதல், அவர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குதல் மற்றும் விதவைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு வளங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்றவைகளுக்கு இந்நாள் தேவையாக இருக்கிறது.
பன்னாட்டுச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதவைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும், மற்ற மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதும் மிக முக்கியம். விதவைகளுக்கு நிலம் மற்றும் சொத்துக்களில் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும், கணவரின் மரணத்திற்கு துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது குற்றம் சாட்டப்படவோக் கூடாது.
மேலும், சமூகத்தில் விதவைகளுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்குச் சமமான வேலை மற்றும் சம்பளம் வழங்கப்பட வேண்டும். பன்னாட்டுச் சட்டத்தில் நிறுவப்பட்டுள்ளபடி, விதவைகளின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது போன்ற பல்வேறு கருத்துகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
அதனை அனைத்து நாடுகளும் சட்டங்களாகக் கொண்டு, விதவைகள் நல் வாழ்விற்கு உதவுவதுடன், அவர்களுக்கான பாதுகாப்பையும் ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன.
உலகம் முழுவதும், 258 மில்லியன் விதவைகள் உள்ளனர். இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான விதவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் பெண் மக்கள் தொகையில் 10 சதவீதம் எனும் அளவாகும். விதவைகளில் பத்தில் ஒருவர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர். ஒரு துணையை இழந்தவுடன், பெண்கள் வறுமை, வன்முறை, சுகாதாரப் பிரச்சினைகள், பாதுகாப்பின்மை, பாகுபாடு, களங்கம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். பல நாடுகளில், பெண்களுக்கு ஆண்களைப் போன்ற உரிமைகள் இல்லை, மேலும் ஒரு துணை இறந்த பிறகு அவர்களின் அனைத்து உடைமைகளும் பறிக்கப்படலாம் என்கிற நிலையும் இருக்கிறது.
இந்நிலையில், விதவைகளுக்கு ஆதரவளிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி செய்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.