June 21 சர்வதேச யோகா தினம்: யோகா வரலாறு... கடந்து வந்த பாதை....
யோகாவின் வரலாறு மிகவும் பழமையானது மற்றும் இந்தியாவுடன் தொடர்புடையது. யோகக் கலை சிந்து சமவெளி நாகரிக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது, இது கிமு 2700க்கு முந்தையது என்றும் கூறப்படுகிறது. யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலையாகும். இது உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. யோகா என்ற சொல் முதன்முதலில் ரிக் வேதம் என்று அழைக்கப்படும் பண்டைய புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நான்கு பண்டைய புனித நூல்களின் தொகுப்பாகும்.
மகரிஷி பதஞ்சலி யோகாவின் தந்தை என்று பரவலாகக் கருதப்படுகிறார். யோகா தத்துவத்தின் அடிப்படை நூல்களில் இருந்து தற்போதுள்ள யோகா பயிற்சிகளைத் தொகுத்து முறைப்படுத்தியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர். பதஞ்சலிக்கு முன்பே யோகா இருந்த போதிலும், யோகா சூத்திரங்களில் அவரது பணி யோகாவைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் ஒரு விரிவான கட்டமைப்பை வழங்கியது.
பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். யோகாவின் வளர்ச்சிக்காக பதஞ்சலி முனிவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
1890-ம் ஆண்டு வரை யோகா கலை இந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருந்தது. இதனை உலகளவில் மாற்றி பெருமை சுவாமி விவேகானந்தரையே சாரும்.
அவர் 1893-ம் ஆண்டு உலக மதங்களுக்கான நாடாளுமன்றத்தில் யோகாவை 'மனதின் அறிவியல்' என்று அறிமுகப்படுத்தினார். மேலும் யோகா அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக சமஸ்கிருதத்தில் இருந்த பல்வேறு யோகா நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். விவேகானந்தரை விட்டுச்சென்ற பணியை திருமலை கிருஷ்ணமாச்சார்யா கையில் எடுத்து உலக அளவில் யோகாவை பிரபலப்படுத்தினார்.
யோகாவை உலகெங்கும் பரப்ப எடுத்த பெரும் முயற்சி பிரதமர் நரேந்திர மோடியை சாரும். உலகளவில் யோகாவின் நன்மைகளை எடுத்துரைக்கும் வகையில், 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி ஐ.நா. பொதுச் சபையில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, தற்போதைய வாழ்க்கை முறைக்கு யோகாவின் முக்கிய தேவையை எடுத்துரைத்ததுடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவது குறித்தும் கருத்து தெரிவித்தார். மோடியில் கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த கூட்டத்தில் பங்கேற்ற 117 உறுப்பு நாடுகளும் பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தன. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 11-வது ஆண்டாக இந்த முறையும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உலக நாடுகள் ஆயத்தமாகி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் அன்றும், யோகாவின் நன்மைகள் குறித்து நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 200 உலக நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் 15 கோடி மக்களும், அமெரிக்காவில் 3½ கோடி பேர், கனடாவில் 7.6 லட்சம் பேர், ஆஸ்திரேலியாவில் 15 லட்சம் பேர் யோகா பயிற்சியை செய்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
உடல் ரீதியாக ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மன ரீதியிலான பிரச்சினைக்கு ஒரே தீர்வு யோகாவில் மட்டும் தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணம் உலகளவில் முன்னேற்றம் கண்டுள்ளதால், இன்றைக்கு 120 நாடுகளில் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.
யோகா என்பது ஒரு பழமையான பயிற்சி மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. யோகப் பயிற்சி மூலம், ஒருவர் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் ஒருமைப்பாட்டை அடைய முடியும்.