

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20 ஆம் நாளன்று, ‘பென்குயின் விழிப்புணர்வு நாள் (Penguin Awareness Day) கடைப்பிடிக்கப்படுகிறது. பென்குயின்களின் இயற்கையான வாழ்விடங்களில் மனிதர்கள் வாழ்வதில்லை என்பதால், அவற்றின் எண்ணிக்கை சரிந்து கொண்டிருப்பது கவனிக்கப்படாமல் இருக்கிறது. இதனால், பென்குயின் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த விழிப்புணர்வு நாள் அமைந்திருக்கிறது.
1972 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் அலமோகோர்டோவைச் சேர்ந்த ஜெர்ரி வாலஸ் என்பவர், ஜனவரி 20 ஆம் நாளன்று ‘பென்குயின் நாள்’ கொண்டாட வேண்டுமென்று, மனையின் நாட்காட்டியில் குறித்து வைத்தார். அவர் குறித்த நாளில், அவர் மனைவியுடன் இணைந்து, கலிபோர்னியாவின் ரிட்ஜ்கிரெஸ்டில் உள்ள கடற்படை ஆயுத மையத்தில் இந்நாளைக் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து, அவரது நோக்கம் அமெரிக்கா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு ‘தேசிய பென்குயின் விழிப்புணர்வு நாள்’ கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பின்னர், இந்நாள் உலக பென்குயின் விழிப்புணர்வு நாளாக மாற்றமாகிக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றம், அதிகப்படியான மீன்பிடித்தல், நச்சுப் பிளாஸ்டிக்குகள், ஆக்கிரமிப்பு இனங்கள், எண்ணெய் கசிவுகள் மற்றும் வாழ்விட அழிவு போன்றவை பென்குயின்களின் வாழ்க்கைக்கு முக்கிய அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. இதனால், பென்குயின்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க இந்த விழிப்புணர்வு நாள் பயனுடையதாக இருக்கிறது.
இங்கு பென்குயின்கள் குறித்த சில தகவல்களை நாம் அறிந்து கொள்வது, அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்தும்.
இன்று சுமார் 3 கோடி எனும் அளவில் பென்குயின்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
பென்குயினின் கருப்பு முதுகு மற்றும் வெள்ளை வயிறு காரணமாக அவற்றை வேறுபடுத்துவது மிகவும் கடினம், அவை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்க ஒரு வகையான உருமறைப்பாக செயல்படுகின்றன.
பென்குயின்களில் 18 இனங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. "அடீலி பென்குயின்", "தெற்கு ராக்ஹாப்பர் பென்குயின்" மற்றும் "மக்கரோனி பென்குயின்" ஆகியவை அவற்றில் முக்கியமானதாக இருக்கின்றன.
எம்பரர் பென்குயின்கள் சிறந்த சுவாசிக்கும் திறனைக் கொண்டுள்ளன. நீருக்கடியில், அவை 20 நிமிடங்கள் வரை தங்கள் மூச்சைப் பிடித்து வைத்திருக்கும் திறன் கொண்டவை. வழக்கமான பென்குயின்களின் சகிப்புத்தன்மை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டுமே என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
பென்குயின் தண்ணீரில் இருந்தால் "ராஃப்ட்ஸ்" என்றும், நிலத்தில் இருந்தால் "வாடில்" என்றும் குறிப்பிடப்படுகின்றன.
மிகச் சிறிய பென்குயின் 10 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் மட்டுமே கொண்டது. இருப்பினும், மிக உயரமானவை நான்கு அடிக்கு மேல் உயரத்தை எட்டும். ஒரு காலத்தில் 250 பவுண்டுகளுக்கு மேல் எடையும் 6.5 அடி உயரமும் கொண்ட ஒரு "மெகா" பென்குயின் இருந்தது.
ஒற்றைத் திருமணம் என்பது பெங்குவின்களுக்கு பொதுவானது. பெண் எம்பரர் பென்குயின்கள் வேட்டையாடும் வேளையில், ஆண் பென்குயின்கள் முட்டைகளை அடைகாக்கும்.
பென்குயின்கள் மாமிச உண்ணிகள் என்பதால், அவை பொதுவாக மீன்களை உண்கின்றன.
பென்குயின்களில் மிகவும் வேகமான ஜென்டூஸ் வகை, நீரில் மூழ்கும் போது மணிக்கு 22 மைல் வேகத்தில் நீந்தும் திறன் பெற்றிருக்கின்றன.
உலகின் மிகப் பழமையான பென்குயின் 40 வயது வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது அதன் வாழ்நாள் மிகவும் குறைந்து போயிருக்கிறது.
ஆண் பென்குயின்கள், பெண் பென்குயின்களுக்குப் பாறைகளை அன்பளிப்பாக வழங்குகின்றன.
பெங்குயின்களால் பறக்க முடியாது, ஆனால் அவை காற்றில் பறக்க முடியும். சில பென்குயின்கள் ஒன்பது அடி உயரம் வரை குதிக்கும்.
பென்குயின் கடல்நீரை மட்டுமே குடிக்கும். நன்னீரைக் குடிப்பதில்லை.
பென்குயின்களில் முதன்மை எதிரியாக இருப்பது சீல் எனப்படும் கடல் நாய்தான்.
ஜனவரி 20 ஆம் நாள் தவிர,அடேலி பென்குயின்கள் அண்டார்டிகாவை நோக்கி, வடக்கு நோக்கி ஏப்ரல் 25 ஆம் நாளன்று இடம் பெயரத் தொடங்கும் நாளாக இருப்பதால், ஏப்ரல் 25 ஆம் நாளன்று, ‘உலகப் பென்குயின்கள் நாள்’(World Penguin Day) கொண்டாடப்பட்டு வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.