

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜனவரி 21 ஆம் நாளன்று, ‘அணில் பாராட்டு நாள்’ (Squirrel Appreciation Day) என்று கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின், வட கரோலினா, ஆஷ்வில் பகுதியில் வசித்த வனவிலங்கு மறுவாழ்வு வல்லுநரான கிறிஸ்டி ஹார்க்ரோவ் என்பவரால், ‘அணில்களின் இயற்கை பண்புகளைப் பாராட்டவும், இயற்கை மற்றும் சூழலியலுக்கு அவற்றின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், குறிப்பாக மறு காடழிப்புக்கு அணில்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும்’ இந்நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் வீடுகள், பூங்காக்கள், காடுகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் காணக்கூடிய உயிரினமாக அணில் இருக்கிறது. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா தவிர, ஒவ்வொரு கண்டத்திலும் 200-க்கும் அதிகமான அணில் இனங்கள் பரவியுள்ளதால், அடர்ந்த காடுகள் முதல் வறண்ட சமவெளிகள் வரையிலான சூழல்களுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகின்றன.
பாலூட்டி இனங்களில் ஒன்றான அணில், மர அணில்கள், தரை அணில்கள், சிப்மங்க்ஸ் (chipmunks), புல்வெளி நாய்கள் (prairie dogs), மர்மோட்கள் (marmots) மற்றும் பறக்கும் அணில்கள் என்று வகைப்படுத்தப்படிருக்கின்றன.
பறக்கும் அணில்கள் பறவைகளைப் போல உண்மையான பறப்பவை அல்ல. ஆனால் அவை குறிப்பிடத்தக்க திறமையுடன் காற்றில் தாவிச் செல்கின்றன. அவற்றின் மூட்டுகளுக்கு இடையில் நீட்டப்பட்ட தோல் சவ்வைப் பயன்படுத்தி, 150 மீட்டர் தூரம் வரை தாவுகின்றன. இந்தத் தகவமைப்பு, வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க உதவுவது மட்டுமல்லாமல், மரங்களுக்கு இடையில் திறமையாக நகரவும் உதவுகிறது. அவற்றின் இரவு நேரப் பழக்கமும் பெரிய கண்களும் இருளின் மறைவின் கீழ் செல்லக்கூடிய அவற்றின் திறனை மேலும் மேம்படுத்துகின்றன.
அணில்கள் நகர்ப்புறச் சூழல்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. பூங்காக்கள், பசுமையான இடங்கள் மற்றும் தோட்டங்களில் கூடு கட்டிக் கொண்டு, அவற்றிற்குத் தேவையான உணவுகளை அங்கிருந்தே பெற்றுக் கொள்கின்றன. போக்குவரத்து போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஆபத்துகளில் இருந்து தப்பிக்கவும் அவை கற்றுக்கொண்டிருக்கின்றன. குப்பைத் தொட்டிகளில் தங்களுக்கான உணவு தேடும் திறனையும் தகவமைத்துக் கொண்டிருக்கின்றன.
அணில்களுக்கு மேலே இரண்டு பற்கள், கீழே இரண்டு பற்கள் என்று மொத்தம் நான்கு வெட்டுப்பற்கள் இருக்கின்றன. இப்பற்கள் கொட்டைகளை உடைப்பதற்கும், மரத்தைக் கடிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கொட்டைகள் மற்றும் விதைகளை மறைத்துச் சேமித்து வைக்கின்றன. உணவுப் பற்றாக்குறைக் காலங்களில் சேமித்து வைத்த இடங்களை நினைவில் கொண்டு, அங்கிருந்து தேவையான உணவைப் பெறுகின்றன. அணிலின் இச்செயல்பாடுகள், காடுகளின் மீளுருவாக்கத்திற்கு உதவுகின்றன. அணிலின் இந்தப் பழக்கம் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு எதிர்பாராத நன்மையையும் தருகிறது.
அணில்கள் வியக்கத்தக்க வகையில் அதிநவீனத் தகவல் தொடர்பு அமைப்பைக் கொண்டுள்ளன. அவை ஆபத்து அல்லது உணவு இருப்பிடங்கள் போன்ற தகவல்களைத் தெரிவிக்க கீச்சொலிகள், குரைப்புகள் மற்றும் விசில்கள் உள்ளிட்ட பல்வேறு குரல்களின் கலவையைப் பயன்படுத்துகின்றன. வால் அசைவுகளும் அவற்றின் தகவல்தொடர்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது ஆக்கிரமிப்பு அல்லது எச்சரிக்கையைக் குறிக்கிறது.
அணில்கள் பெரும்பாலும் விதைகளைத் தின்பதாகச் சித்தரிக்கப்பட்டாலும், அவற்றின் உணவுப் பழக்கம் வியக்கத்தக்க வகையில் பலவகைப்பட்டது. அவை பழங்கள், விதைகள், பூச்சிகள், பறவை முட்டைகள், மேலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது சிறிய விலங்குகளின் சடலங்களையும் கூட உண்ணும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அணில் இனங்கள் அளவில் வியக்கத்தக்க வகையில் வேறுபடுகின்றன. மிகச்சிறிய இனமான ஆப்பிரிக்கக் குள்ள அணில், சுமார் 12 சென்டிமீட்டர் நீளமும், ஏறக்குறைய 10 கிராம் எடையும் கொண்டது. இதற்கு மாறாக, இந்திய ராட்சத அணில் 91 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது மற்றும் பல கிலோகிராம் எடை கொண்டது.
இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர் சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும். இந்தக் கோடுகள், இராமர் சீதையைத் தேடிச் சென்ற வழியில், அணில் அவருக்குச் சிறிய அளவில் உதவியதால், அவர் அணிலின் முதுகுப் பகுதியில் தடவிக் கொடுத்ததால், அதன் முதுகில் மூன்று கோடுகள் இருக்கின்றன என்கிற கதை இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.
அமெரிக்கா முழுவதும் நூற்றுக்கணக்கான மின் தடைகளுக்கு அணில்கள் காரணமாக இருந்துள்ளன. மின்சார கேபிள்களை மெல்லும் அவற்றின் ஆர்வம் சந்தைகள், வணிகங்கள் மற்றும் பங்குச் சந்தைகளைக் கூட சீர்குலைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் சில ஆண்டுகளுக்கு முன்பாக, மின் தடைகளுக்கு அணில்களே காரணமென்று சொல்லப்பட்டதை இங்கு நினைவில் கொள்ளலாம்.