பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day) என்பது பெரும் இன அழிப்பினால் உயிரிழந்தவர்களுக்காக ஆண்டுதோறும் ஜனவரி 27 அன்று நினைவு கொள்ளப்படும் பன்னாட்டு நினைவு நாள் ஆகும்.
பெரும் இன அழிப்பு (The Holocaust) என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை சோகா என்றும் குறிப்பர். இது அக்காலத்தில் ஜெர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக இடம் பெற்றது. யூதர்கள் தவிர, வேறு பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர்.
இத்தொல்லைகளும் படுகொலைகளும் ஜெர்மனியின் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜெர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக்கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
1941 ஆம் ஆண்டிலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டனர்; இது ஐரோப்பாவின் பிற மக்களிடையே நடைபெற்ற அடக்குமுறை மற்றும் படுகொலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது.
இந்தப் பெரும் இன அழிப்பை நினைவு கூரும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 2005 ஆம் ஆண்டு, நவம்பர் 1 அன்று 42 வது கூட்ட அமர்வின் போது, தீர்மானம் உருவாக்கப்பட்டது. நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் விடுதலை மற்றும் பெரும் இன அழிப்பு நிறுத்தப்பட்ட 60 வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக, 2005 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று இடம் பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைகளின் சிறப்பு அமர்வின் பின் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, 1945 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று பெரும் நாட்சி மரண முகாமான அவுஷ்விட்ஸ் வதை முகாம் சோவியத் படைகளினால் விடுவிக்கப்பட்ட நாளையே, பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் என்று நினைவு கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 27 அன்று பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுவதுடன், பெரு இன அழிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செய்யப்படுகிறது.
பெரும் இன அழிப்பினால் பலியாகிய யூதர்களுக்காக, இஸ்ரேலில் 1953 ஆம் ஆண்டில் யாட் வசெம் (Yad Vashem) எனும் நினைவிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு பெரும் இன அழிப்பு குறித்த பல்வேறு படங்கள், தகவல்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.