

மகாத்மா காந்திஜி வெள்ளையர்களுக்கு மட்டுமல்ல, அவர்களால் அவரைக் கொல்ல ஏவிவிடப்பட்ட குண்டர்களுக்கும் அஞ்சாமல் அவர்களை எதிர் கொண்டவர்.
இதை விளக்கும் வகையில் அவர் வாழ்க்கையில் ஏராளமான அற்புத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
1. நான் தான் காந்தி! என்னைக் கொல்ல விரும்புகிறீர்களா?
சம்பாரன் என்பது பீகாரில் உள்ள ஒரு சிறிய ஊர். அங்கு அவுரித் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை வெள்ளையர்கள் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. காந்திஜி நேரடியாக அங்கு வந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
காந்திஜியின் போராட்டத்தால் அவர்கள் மிகவும் துணிவு பெற்றனர். இதனால் வெள்ளையர்கள் மிகவும் கலக்கமடைந்தனர்.
ஒரு நாள் ஒருவர் காந்திஜியிடம் வந்தார்.
அவர் காந்திஜியைப் பார்த்து, “ஐயா! இங்குள்ள துரை ஒரு முரடன். அவன் தங்களைக் கொல்ல நினைக்கிறான். இதற்காக அவன் ஆட்களையும் அமர்த்தி விட்டான்” என்றார்.
அவர் கூறிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்டார் காந்திஜி.
ஒருநாள் இரவு நேரத்தில் துரையின் வீட்டிற்குக் காந்திஜி சென்றார்.
இரவு நேரத்தில் தனியாக வந்த அவரைப் பார்த்த துரை, “நீங்கள் யார்?” என்று கேட்டார்.
“நான் தான் காந்தி” என்று பதிலுரைத்தார் காந்திஜி.
துரை திகைத்தார். வியப்பு மேலிட “காந்தியா?” என்று கேட்டார்.
“ஆம், நான் தான் காந்தி. என்னைக் கொல்ல நீங்கள் விரும்புவதாகவும் அதற்காக ஆட்களை நியமித்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன்” என்றார் காந்திஜி.
துரை கல் போலச் சிலையானார்.
தன்னைத் தானே மரணத்திற்கு ஆளாக்கிக் கொள்ளும் ஒருவரை உலகில் இதுவரை அவர் சந்தித்ததே இல்லை. அவர் பிரமித்து செய்வதறியாது திகைக்க, காந்திஜி மேலும் தொடர்ந்தார்: “துரை அவர்களே! நான் யாரிடமும் இங்கு வருவதைச் சொல்லவில்லை. தனியாகத் தான் வந்திருக்கிறேன்.” என்றார்.
அந்தக் கணமே காந்திஜியை யார் என்று அவர் உண்மையில் புரிந்து கொண்டார்.
2. அடிக்க வந்த குண்டர் தலைவன் பணிந்து வணங்கிய நிகழ்வு!...
ராஜ்கோட் இயக்கத்தைக் காந்திஜி துவக்கினார். நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டது. அவரது பிரார்த்தனைக் கூட்டங்களில் மக்கள் திரளாக வந்து குழுமினர்.
அதிகாரிகள் திகைத்தனர். இதை எப்படித் தடுப்பது? குண்டர்களை கூலிக்கு அமர்த்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தவர்களை கம்புகளாலும் தடிகளாலும் அடித்து விரட்ட ஏற்பாடு செய்தனர்.
பிரார்த்தனை கூட்டம் முடிந்தவுடன் குண்டர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்தனர். உடனே அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். காந்திஜி தன் காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். குண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
காந்திஜியின் உடல் நடுங்கியது. பயத்தினால் அல்ல. அங்கு நிலவிய வன்முறைச் சூழலாலும் கொடுமையாலும் அவர் உணர்ச்சி மேலிட்டார். ஆகவே அவர் உடல் நடுங்கியது. அவர் கீழே விழுந்து விடுவார் போல இருந்தது. இந்த நிலையில் அவர் கண்களை மூடிக் கொண்டு, “ராம்! ராம்” என்று ராம நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தார்.
சில நிமிடங்களில் நிலைமை மாறியது. அவர் தொண்டர்களிடம் தன்னைக் குண்டர்களிடம் விட்டுவிடுமாறும் தான் காரில் வரப்போவதில்லை என்றும் நடந்தே செல்லத் தீர்மானித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
பிறகு குண்டர்களின் தலைவனைத் தன்னிடம் அழைத்து, “ஐயா! என்னுடன் நீங்கள் பேச விரும்பினால் அதற்கு நான் தயார்! ஆனால் வேறு விதமான எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதைச் சொல்லி விடுங்கள்” என்றார்.
காந்திஜியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குண்டர்களின் தலைவன் திகைத்தான். அவன் உள்ளம் உருகியது.
அவன் தழுதழுத்த குரலில், “பாபுஜி! என்னை மன்னித்து விடுங்கள்! தங்களிடம் விவாதிக்க என்ன இருக்கிறது. தங்கள் கையால் என் தலையைத் தொட்டு ஆசிர்வதியுங்கள். நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று உத்தரவு இடுகிறீர்களோ அங்கு உங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பது எனது பொறுப்பு” என்றான்.
அன்று மாலை காந்திஜி குண்டர் தலைவனின் தோள் மீது கையைப் போட்டவாறே தனது கூடாரத்திற்குத் திரும்பிச் சென்றார்.
ஒன்றல்ல, இரண்டல்ல இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன!.
அஹிம்சையின் சக்தியை உலகிற்கு வாழ்ந்து காட்டி உணர்த்திய மகான் அவர்.
அவரை எப்போதும் நினைவிலிருத்தி வணங்குவோமாக!
ஆதாரம் : விஷ்ணு பிரபாகர் எழுதியுள்ள “ப்ரபு ஹி மேரா ரக்ஷக் ஹை” என்ற ஹிந்தி மொழிப் புத்தகம். (இந்த நூல் காந்திஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான அற்புத சம்பவங்களை விளக்கும் நூலாகும்)