உலகில் மனித வளர்ச்சி அதிகரித்து வருவதால், இயற்கைச் சூழலும் குறைந்து கொண்டேயிருக்கிறது. இதன் மூலம், விலங்குகளின் வாழ்விடங்கள் அச்சுறுத்தப்படுவதுடன், அதில் வாழும் விலங்குகளின் வாழ்வும் கேள்விக்குறியாகின்றன. குறிப்பாக, பல மென்மையான விலங்குகள் ஆபத்திற்குள்ளாகின்றன. அவற்றுள் வரிக்குதிரையும் ஒன்றாக இருக்கின்றது.
வரிக்குதிரைகளின் அழகு, அவற்றின் தனித்துவமான கோடுகள் மற்றும் அவற்றின் இருப்பிடங்கள், வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஸ்மித்சோனியனின் தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் பாதுகாப்பு உயிரியல் நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பால், ‘பன்னாட்டு வரிக்குதிரை நாள்’ உருவாக்கப்பட்டது.
வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். தாவர உண்ணியான இது, குதிரை இனத்தைச் சேர்ந்தது.
பாலூட்டிகளில் குதிரை, கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த விலங்கினமான வரிக்குதிரை, பெரும்பாலும் ஆப்பிரிக்கக் கண்டம், கென்யா மற்றும் எத்தியோப்பியாவின் அரைப் பாலைவனப் பகுதிகள், நமீபியா, அங்கோலா மற்றும் தென்னாப்பிரிக்காவின் மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படுகின்றன. வரிக்குதிரைகள் ஒரு சமூக விலங்காகும். இவை எப்போதும் கூட்டமாகச் சேர்ந்து வாழ்கின்றன.
எந்த ஒரு வரிக்குதிரையும் தனித்திருக்காது. இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டிருக்கின்றன. வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும், இன்னொன்றைப் போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் ரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித்தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன்புறம் நெடுக்குக் கோடுகளாகவும், பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கோடுகள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன, வரிக்குதிரைகள் நாள் முழுவதும் ஆப்பிரிக்க வெயிலில் நின்று மேய்ந்தாலும், அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன. கருப்பு நிறக் கோடுகள் சூரியனில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி காலையில் விலங்குகளை சூடேற்றுகின்றன.
வரிக்குதிரை நின்று கொண்டே தூங்கும் பண்பு கொண்டவை. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று, தங்களின் கழுத்துப்பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 முதல் 2 மீட்டர் உயரமும், 2 முதல் 3 மீட்டர் நீளமும் கொண்டவை. இதன் எடை 250 கிலோவிருந்து 500 கிலோ வரை எடை இருக்கும்.
சாதாரணமாக, ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை. இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். அவற்றின் வேகமும் சுறுசுறுப்பும் சிங்கங்கள் மற்றும் கழுதைப்புலிகள் போன்ற வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க உதவுகின்றன.
வரிக்குதிரைகள் புற்களை மேய்வதன் மூலமும், அவற்றின் கழிவுகள் மூலம் விதைகளைப் பரப்புவதன் மூலமும் அவற்றின் வாழ்விடத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இது சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. வரிக்குதிரைகள் வெவ்வேறு முகபாவனைகளை வெளிப்படுத்துவதன் மூலமும், காதுகளை அசைப்பதன் மூலமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. காட்டிலுள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சிச் சாலையில் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
வேட்டையாடுதலின் ஆபத்துகளுடன், இந்த வரிக்குதிரைகள் உள்ளூர்வாசிகளால், இறைச்சிக்காக அவை வேட்டையாடப்படுகின்றன. இதனால், வரிக்குதிரைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டேயிருக்கின்றன.
கிரேவியின் வரிக்குதிரைகள், சமவெளி வரிக்குதிரைகள் மற்றும் மலை வரிக்குதிரைகள் என்று காடுகளில் மூன்று வகையான வரிக்குதிரைகள் காணப்படுகின்றன. சமவெளி வரிக்குதிரைகள் செழித்து வளர்கின்றன. பெரும்பான்மையாக, இவ்வகை வரிக்குதிரைகள் ஆபத்தை எதிர்கொள்வதில்லை.
தென்னாப்பிரிக்கா, அங்கோலா மற்றும் நமீபியாவில் வாழும் மலை வரிக்குதிரைகள், உள்ளூர்வாசிகளின் வாழ்க்கை கடினமாக இருக்கும் போது, இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன.
கென்யாவின் வடக்குப் பகுதிகளில் காணப்படும் கிரேவியின் வரிக்குதிரை மிகவும் அரிதானது. இவை, அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் அழிந்து வரும் உயிரினமாகக் கருதப்படுகின்றன. ஆப்பிரிக்க வனவிலங்கு அறக்கட்டளையின் கூற்றுப்படி, கடந்த முப்பது ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை சுமார் 54% குறைந்துள்ளது.
கூட்டமாக வாழும் வரிக்குதிரைகளைப் பார்க்கும் போது மிக அழகாக இருக்கும். இந்த வரிக்குதிரைகள் அழிந்து போய்விடாமல், பாதுகாக்க வேண்டுமென்று உருவாக்கப்பட்ட, பன்னாட்டு வரிக்குதிரை நாளில், வரிக்குதிரைகளின் கருப்பு வெள்ளை நிறக் கோடுகளை அடையாளப்படுத்தும் விதமாக, கருப்பு வெள்ளை நிறத்திலான ஆடைகளை உடுத்திக் கொண்டாடலாம். இதன் மூலம் வரிக்குதிரைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தலாம்.