
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் நாளன்று ‘பன்னாட்டு நீதிக்கான உலக நாள்’ (World Day for International Justice) கொண்டாடப்படுகிறது. பன்னாட்டுக் குற்றவியல் நீதியை ஊக்குவிப்பதற்கும், உலகளாவிய சமூகத்தைப் பாதிக்கும் கடுமையான குற்றங்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு எதிரான போராட்டத்தைச் சிறப்பிப்பதற்குமான நாளாக இந்நாள் அமைந்திருக்கிறது.
ரோம் நகரில் 1998 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று நடந்த, உலக நாடுகளின் மாநாட்டில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை (International Criminal Court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை. ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உறுப்பு நாடுகள் சேர்ந்து, 2010 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பாய்வுக் கூட்டத்தை நடத்தின. அந்தக் கூட்டத்தில், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடித்தளமிட்ட, ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17 ஆம் நாளினை, பன்னாட்டு நீதி நாளாகக் கொண்டாடுவதென்று முடிவு செய்யப்பட்டது. பன்னாட்டு நீதிமன்றத்துக்கான தேவையை உணர்த்தவும், பன்னாட்டு நீதி என்பது என்ன? என்ற புரிதலை உருவாக்கவும் இந்த நளானது, உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. மேலும், உலகில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை அச்சுறுத்தும் குற்றங்களைத் தடுக்கவும், நீதியை ஆதரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மேம்படுத்தவும் விரும்பும் அனைவரையும் இந்த நாள் ஒன்றிணைக்கிறது.
2002 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாளன்று அல்லது அதற்குப் பிறகு செய்யப்பெற்ற இனப்படுகொலை குற்றம், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டு மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளின் மிகக் கடுமையான மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரிக்கும் திறன் கொண்ட முதல் நிரந்தர மற்றும் சுதந்திரமான பன்னாட்டு நீதித்துறை நிறுவனமாக, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமம் (International Criminal Court) செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இதற்கான ரோம் ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத இந்தியா, சீனா உள்ளிட்ட 40 நாடுகளும், ஒப்பந்தத்தின் போது கையெழுத்திட்ட அமெரிக்கா, ரசியா, இஸ்ரேல், சூடான் போன்ற நாடுகள் பின்னர் ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்ட நாடுகளும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை. எனவே, இந்த நாடுகளில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரம் செலுத்துவதில்லை.
உலகில் ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரத்தின் கீழ் வரும் பன்னாட்டு நீதிமன்றம், ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் என்று இரண்டு பன்னாட்டு நீதி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பன்னாட்டு நீதிமன்றத்தில் ஐநாவில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 124 நாடுகள் மட்டும் இடம் பெற்றிருக்கின்றன.
உலகில் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வரும் சில போர்க்குற்றங்கள் ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் வேளையில், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் தேவையும் இருந்து வருகிறது. பன்னாட்டு நீதிக்கான தேவையினைக் கருத்தில் கொண்டு, இரு வேறு நீதிமன்றங்களாகப் பிரிந்திருக்கும் பன்னாட்டு நீதிமன்றங்களை ஒன்றிணைத்து, நடுநிலைமையுடன் செயல்படும் பன்னாட்டு அளவிலான புதிய நீதிமன்றத்தினை உருவாக்கிட அனைத்து நாடுகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற பலரது கருத்துகளை இந்நாளில் நாம் நினைவு கூர்ந்து கொள்ளலாம்.