வெள்ளிவிழா காணும் கன்னியாகுமரி 'அய்யன் திருவள்ளுவர்' சிலை - இயற்கை சீற்றங்களைத் தாண்டி, பாதிப்பின்றி உறுதியாக இருப்பதன் ரகசியம் என்ன?

கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை - வெள்ளிவிழாக் கொண்டாட்டம்!
Kanyakumari Thiruvalluvar statue
Kanyakumari Thiruvalluvar statue
Published on

அய்யன் திருவள்ளுவர் சிலை குறித்த சிறப்புத் தகவல்கள்!

தமிழ்நாடு அரசு, கன்னியாகுமரிக் கடலின் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது, 133 அடி உயரத்தில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்குச் சிலையமைத்து, அச்சிலை 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளில் திறந்து வைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31 ஆம் நாளுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்து, 25 ஆம் ஆண்டில் வெள்ளிவிழாவைக் கொண்டாடவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 30 ஆம் நாளில் தொடங்கி, ஜனவரி 1 ஆம் நாள் வரை மூன்று நாட்கள், பட்டிமன்றம், கருத்தரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வரலாறு தெரியுமா?

விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவிய ஏக்நாத் ரானடே, அதனருகே உள்ள பாறையில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்கலாம் எனப் பரிந்துரைத்து முழுத் திட்டம், வரைபடம் மற்றும் மதிப்பீட்டை அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியிடம் கொடுத்தார். 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமும் அறிவிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில், எம்.ஜி.ஆர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு சிலை அமைக்கும் பணி எதுவும் நடைபெறாமல் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு, 1989 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக முதலமைச்சரான மு. கருணாநிதி ஆட்சியில், 1990 முதல் 1991 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சிலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
புதுச்சேரியில் பாடப்படும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் எது? அதை எழுதியது யார்?
Kanyakumari Thiruvalluvar statue

1990 செப்டம்பர் 6 ஆம் நாளில் சிலை அமைக்கும் பணியை அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தொடங்கி வைத்தார். மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் கணபதி தலைமையில் சிலை செதுக்கும் பணி தொடங்கியது. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டது.

அதன் பிறகு, 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, நான்காவது முறை முதலமைச்சராக, மு. கருணாந்தி மீண்டும் ஆட்சியமைத்தார். அதனைத் தொடர்ந்து, 1997 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் புத்துயிர் பெற்று பணி விரைவு படுத்தப்பட்டது. அதன் பின்னர், 2000 ஜனவரி 1 ஆம் நாளில், அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார்.

1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க திட்டம் அறிவிக்கப்பட, 2000 ஜனவரி 1 ஆம் நாளில்தான் அது பூர்த்தியாகி, சிலை திறந்து வைக்கப்பட்டது!

இந்தத் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது பற்றிப் பல்வேறு சிறப்புத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு கீழே தரப்பட்டிருக்கிறது:

திருவள்ளுவர் சிலை அமைக்கத் தேவையான கற்களை எடுத்துச் செல்ல கொச்சியிலிருந்து ‘பாண்டூன்’ என்ற படகு ஒன்று வாங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
எங்கம்மா கூட தலைகீழா நின்னு சண்டை போடறா!
Kanyakumari Thiruvalluvar statue

திருவள்ளுவர் சிலை நிறுவுமிடத்திற்கான ஆதார பீடம் அமைப்பதற்காக, மொத்தம் 3,681 கற்கள் பயன்படுத்தி பீடம் அமைக்கப்பட்டது.

திருவள்ளுவரின் முகம் 10 அடி உயரம்; 40 அடி உயரத்தில் கழுத்து, இடுப்பு பகுதிகள்; 40 அடி உயரத்தில் இடுப்பு முதல் கால் பாதம் வரையும்; கொண்டைப் பகுதி 5 அடியிலும் அமைக்கப்பட்டு திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தை எட்டியது.

மொத்தம் 6.14 கோடி செலவில் பணியாளர்கள், சிற்பிகள், உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் என்று 150-க்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றிற்கு 16 மணி நேரம் உழைப்பில் இச்சிலை உருவானது.

சிலையின் இடுப்பு வளைவு சற்றுச் சவாலாக இருந்தாலும் நவீன அறிவியல் துணையோடு வாஸ்து சாஸ்திரப்படி இதனை மர மாதிரி உருவாக்கி அதன் எடை மையத்தை அளந்து அதன் பின்னர் கட்டப்பட்டது.

கன்னியாகுமாரி, அம்பாசமுத்திரம் மற்றும் சோழிங்கநல்லூர் என மூன்று சிலைக் கூடங்களில் பணிகள் நடைபெற்றன. அம்பாசமுத்திரத்திலிருந்து 5000 டன் எடை கொண்ட கற்களும், சோழிங்கநல்லூரிலிருந்து 2000 டன் தரமான கருங்கற்களும் வந்தன. 13 அடி நீளமும் 15 டன் எடையும் கொண்ட பெரிய கற்கள் மட்டும் 3,681 ஆகும். மற்றவை மூன்றிலிருந்து எட்டு டன் எடை கொண்டவை.

காது, மூக்கு, கண், வாய், நெற்றி பகுதிகளுக்கான கற்கள் கையால் செதுக்கப்பட்ட ஒரே கற்களாகும்.

பனை மரமும், சவுக்கு மரமும், இரும்புக் கம்பிகளும், சாரம் கட்டப் பயன்பட்டது. மொத்தம் 18,000 சவுக்கு மரங்கள் இரண்டு சரக்குந்து கொள்ளளவு கொண்ட கயிற்றால் முழுச் சாரமும் கட்டப்பட்டது.

* திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.

* சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் கடினத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இதோ 3 புதிர்கள்... சற்று யோசித்தால் வழி புலப்படும்; புத்திகூர்மை அதிகரிக்கும்!
Kanyakumari Thiruvalluvar statue

* பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

* மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

* இச்சிலையின் முக உயரம் 10 அடி, கொண்டை 3 அடி, முகத்தின் நீளம் 3 அடி, தோள்பட்டை அகலம் 30 அடி, கைத்தலம் 10 அடி, உடம்பு (மார்பும் வயிறும்) 30 அடி, இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் 45 அடி, கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் 10 அடி என்று இருக்கிறது.

* பீடத்தின் உயரம் 38 அடி, சிலையின் உயரம் 95 அடி என்று மொத்தச் சிலையின் உயரம் 133 அடியாக இருக்கிறது. இச்சிலையின் உருவாக்கத்திற்கு 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலையின் எடை 2,500 டன், பீடத்தின் எடை 1,500 டன், பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3,000 டன் என்று இச்சிலையின் மொத்த எடை 7,000 டன்கள் என்று இருக்கிறது.

* உப்புக் காற்றிலிருந்து சிலையைப் பாதுகாக்க எப்போசைட் என்ற ரசாயனக் கலவை நான்காண்டுகளுக்கு ஒருமுறை பூச வேண்டும் என்று ஸ்தபதி கணபதி பரிந்துரைத்தார். மேலும், சிலை முழுவதும் படிந்துள்ள உப்பை உறிஞ்ச காகிதக்கூழ் பூசப்பட்டு உப்பு நீக்கப்பட்டு இச்சிலை பராமரிக்கப்படுகிறது.

* 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளில் ஏற்பட்ட சுனாமியின் போதும், நிலநடுக்கத்தின் போதும், எவ்விதப் பாதிப்புமின்றி இச்சிலை உறுதியாக இருந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com