

இந்திய நாட்டின் அறிவியல் பெருமையை உலகுக்குத் தெரிய வைத்தவர் இயற்பியல் மேதை சர்.சி.வி. ராமன் பிறந்த தினம் இன்று. ஒளி ஒரு பொருளை ஊடுறுவும்போது சிதறுகிறது. அப்போது அதன் அலை நீளம் மாறுபடுகிறது என்ற தனது புகழ் பெற்ற கண்டுபிடிப்பை 1928ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி உலகுக்குத் தெரியப்படுத்தினார். அதுவே ‘ராமன் விளைவு’ எனப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தது. அதனால் உயரிய விருதான நோபல் பரிசும் அவருக்கு 1930ல் கிடைத்தது. இதற்காக பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கெளரவித்தது. சர். சி.வி.ராமனின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் இன்றைக்கும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளது. அவற்றில் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
வெற்றி ரகசியம் சொன்ன விஞ்ஞானியின் தாயார்: நோபல் பரிசைப் பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் தனது இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால், அவர் எந்த வேலையையும் மன ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. ராமனின் இந்த போக்கைக் கண்ட அவரது தாயார் மிகவும் வருந்தினார்.
ஒரு சமயம் அவர், ராமனை ஒரு பூதக் கண்ணாடியைக் கொண்டு வரச் சொன்னார். சில காகிதங்களை கீழே போட்டு, பூதக் கண்ணாடியை வெயிலில் காட்டினார். பூதக் கண்ணாடியைப் பிடித்த தாயின் கை அங்குமிங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது கையை 'லென்சின்' ஒளிக்குவி மையம் காகிதத்தில் படுமாறு கவனமாகப் பிடித்தார். சில நொடிகளில் காகிதத்தில் தீப்பற்றிக் கொண்டது. அதைக் கண்ட ராமன் ஆச்சரியப்பட்டார்.
அப்போது ராமனின் தாயார் ‘ஒருமுகப்படுத்திய ஒளிக்கதிர்தான் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஒருமுகப்படுத்தாத ஒளிக்கதிரில் நெருப்பு ஏற்படாது. அது போல நீயும் உனது உள்ளத்தை ஒரு விஷயத்தில் ஒருமுகப்படுத்தினால் அதில் வெற்றிதான். அதனால், மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் ஈடுபட பழகிக் கொள்’ என்றார். ராமன் தனது தாயின் வார்த்தைகளை மனதில் பதியவைத்துக் கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் செயல்களைச் செய்ய தொடங்கினார். வெற்றியும் பெற்றார்.
இயற்பியலை கற்கலாம்... பொறுப்புணர்வை?: ஒரு சமயம், தனது ஆய்வகத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதற்காக நேர்காணல் நடத்தினார் சி.வி.ராமன். நேர்காணலில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் ஒருவன் மட்டும் ராமனின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினான். அவனிடம், ‘தம்பி... இந்த வேலைக்கு ஏற்ற வகையில் இயற்பியல் அறிவை வளர்த்துக்கொள்; வெற்றி பெறுவாய்!’ என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
கவலையுடன் அங்கிருந்து கிளம்ப முயற்சித்த இளைஞன், தரையில் ஒரு குண்டூசி கிடப்பதை கவனித்தான். குனிந்து அதை எடுத்தவன், மேஜையின் மீதிருந்த குண்டூசி டப்பாவில் போட்டான். இதை கவனித்த சி.வி.ராமன் அவனை அழைத்தார். ‘உன்னை வேலையில் சேர்த்துக் கொள்கிறேன்!’ என்றார். இளைஞனுக்கு ஆச்சரியம்!
சி.வி.ராமன் தொடர்ந்தார், ‘இயற்பியலை கற்றுத் தரலாம்; கற்றுக் கொள்ளலாம். ஆனால், பொறுப்புணர்ச்சியை கற்றுத் தர முடியாது. அது இயல்பான ஒன்று. இப்போது உனக்கு வேலை கிடைத்ததற்கும் அந்தப் பொறுப்புணர்ச்சியே காரணம்’ என்றார். இளைஞன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
யார் யாரைத் தேட வேண்டும்?: சர்.சி.வி.ராமன் ஒரு சமயம் ஒரு இளம் மருத்துவரை சந்தித்தார். நிறத்தின் தன்மைகளையும், கண் பார்வையின் தன்மைகளையும் பற்றிய தமது மிக நவீனமான ஆராய்ச்சிகளைப் பற்றியெல்லாம் எடுத்துக் கூறிய ராமன், ‘கண் பார்வை தொடர்பாக பௌதீக அம்சங்களை நான் நன்கு அறிந்து கொண்டு விட்டேன். ஆனால், உடலியல் ரீதியாக கண் பார்வை பற்றிய விஷயங்களை நான் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை. தயவுசெய்து உங்கள் வீட்டு முகவரியை தெரிவியுங்கள். அங்கு உங்கள் ஓய்வு நேரத்தில் இந்த விஷயங்களைப் பற்றி தங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்றார்.
அதற்கு அந்த மருத்துவர், ‘ஐயா! நீங்கள் உத்தரவிட்டால்போதும் உங்களுக்கு வசதியான நேரத்தில் நானே உங்கள் வீடு தேடி வருகிறேன். இதோ எனது தொலைபேசி எண்...’ என்று கூறும்போதே இடைமறித்தார் ராமன்.
‘நண்பரே! கற்பவன் நான். எனவே, நான்தான் குருவைத் தேடி வர வேண்டும்’ என்றார்.