'மானுஷ் காளி' மா ஆனந்தமயி... அதிர வைக்கும் ஆன்மீகப் பயணம்!

April 30: மா ஆனந்தமயி பிறந்த நாள்
ma anandamayi
ma anandamayi
Updated on

பாரதத்தின் சமீப கால வரலாற்றில் தோன்றிய பெரும் ஞானி மா ஆனந்தமயி.

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று சகல மதத்தினரைச் சார்ந்தவர்களும் அவரிடம் வந்து ஆசி பெற்றனர்.

நிர்மலா சுந்தரி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட மா ஆனந்தமயி வங்காளத்தில் கேயோரா என்ற ஊரில் 1896ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியன்று பிறந்தார்.

இளமையிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட அவருக்கு அந்தக் கால வழக்கப்படி அவரது பதிமூன்றாம் வயதில் திருமணம் செய்விக்கப்பட்டது. கணவர் போலோநாத் அவரது ஆன்மீகச் சிறப்பை உணர்ந்து கொண்டார். அவரை மா என்றே அழைத்தார்.

1922ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பௌர்ணமி தினத்தன்று நள்ளிரவில் அவருக்கு பெரும் ஆன்மீக உணர்வு ஏற்பட்டது. அவர் உயரிய ஞான நிலையைத் தானே யாருடைய உபதேசமும் இன்றி அடைந்தார்.

அடுத்த ஐந்து மாதங்களில் அவரது சாதனை உச்ச கட்டத்தை அடைந்தது.

1922 டிசம்பர் முதல் மூன்று ஆண்டுகள் அவர் மௌன விரதத்தை அனுஷ்டித்தார். உணவும் மிகச் சிறிய அளவே அவருக்கு ஊட்டி விடப்பட்டது.

அவரது ஆன்மீக சக்தி வெளி உலகிற்குத் தெரிய வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் கூட்டம் அவரை நாடி வந்தது. வருபவர்களின் உடல் நோயை அவர் தீர்ப்பதைக் கண்ட மக்கள் வியந்தனர்.

வீட்டை விட்டு வெளியே வந்த அவர் சித்தேஸ்வரி ஆசிரமம் என்று தனி ஆசிரமம் ஒன்றை அமைத்தார். பின்னர் ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்:
ஆதி சங்கரர் வாழ்வில் நடந்த அதிசயங்கள்!
ma anandamayi

வாரணாசியில் 1928ம் ஆண்டில் பண்டிதர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றில் அவர் உபயோகித்த சம்ஸ்கிருத வார்த்தைகளும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

அவரது முத்திரைகளும் ஆசனங்களும் அவரது உடலில் இயல்பாய்த் தோன்றின.

சுமார் 30 ஆசிரமங்களை அவர் அமைத்தார். அவரது புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அரவிந்த மஹரிஷி, “இது சச்சிதானந்த சொரூபம்” என்றார்.

மகாத்மா காந்திஜி ஜமனாலால் பஜாஜை நேரடியாக ஆனந்தமயி மாவிடம் அனுப்பி தனது ஆசிரமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அவரும் காந்திஜி ஆசிரமத்திற்கு வந்தார்.

அவரைச் சந்தித்த பரமஹம்ஸ யோகானந்தர் அவரை ஆனந்தமயமான அம்மா என்றார்.

கமலா நேரு அவரது சிறந்த பக்தையானார். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லப்படும் பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர் மீது மிகவும் மரியாதை கொண்டிருந்தார்.

பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அவரது பக்தையாக ஆனார்.

1982ல் மா மறைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தனது புதல்வர் ராஜீவ் காந்தி, மருமகள் சோனியா காந்தி மற்றும் பேரக் குழந்தைகளுடன் அவர் ஆசிரமம் சென்று அவரை தரிசித்தார்.

தூரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆற்றலையும் பிறர் கேட்காமலேயே அவர்கள் மனதில் உள்ள சந்தேகங்களை அறிந்து பதில் சொல்வதும் அவருக்கு இயல்பான சித்தியாக இருந்தது.

வங்காளத்தில் உள்ளவர்கள் அவரை மானுஷ் காளி (வாழ்கின்ற காளி) என்று போற்றி வணங்கினர். மதுரைக்கு அவர் வந்த போது அனைவரும் அவரை மீனாக்ஷி தேவி என்று போற்றி வணங்கினர். பஞ்சாபில் புனிதமான கிரந்த சாஹிபிற்கு அளிக்கும் மரியாதையை அவருக்கு சீக்கியர்கள் அளித்தனர். நர்மதை நதிக்கு அவர் செல்கையில் இதோ நர்மதா தேவி என்று கூவி

இதையும் படியுங்கள்:
பேனா முனையின் பெருமை: படைப்பாளிகளைப் போற்றும் தினம்!
ma anandamayi

பக்தர்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். கிறிஸ்தவர்கள் அவரை தரிசித்து ஆசி பெற்றனர்.

1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் நாளன்று நாராயண ஹரி என்று பலமுறை அவர் கூறியவாறே தனது உடலை உகுத்தார். கிஷன்பூர் ஆசிரமத்திலிருந்து அவரது உடல் ஹரித்வார் அருகே உள்ள கன்கால் ஆசிரமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இரவு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை இறுதியாக தரிசித்தனர். கன்காலில் அவரது மஹாசமாதி நிறுவப்பட்டது. பிரதம மந்திரி இந்திராகாந்தி முன்னிலை வகித்தார்.

அவரது உபதேச உரைகள் எளிமையான வார்த்தைகளில் ஆழமான அர்த்தத்துடன் அமைந்திருக்கும்.

“எப்போதும் உயரிய சிந்தனையைக் கொண்டிருங்கள். புகழையும், இகழையும், சகதியையும், சந்தனத்தையும் ஒன்றாகவே கருதுங்கள். இதயத்தின் உள்ளே இருப்பதைப் பாருங்கள்” என்பது அவரது உபதேசங்களில் ஒன்றாகும்.

logo
Kalki Online
kalkionline.com