
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 4 ஆம் நாளன்று, 'தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்' (National Worker's Safety Day) கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழியில் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தால் (GOI), தேசிய அளவில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தன்னார்வ இயக்கத்தை உருவாக்க, மேம்படுத்த மற்றும் நிலை நிறுத்துவதற்காக 1966 ஆம் ஆண்டும் மார்ச் 4 அன்று, 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டு பம்பாய் பொது அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்றதாக, தேசியப் பாதுகாப்புக் குழு (National Safety Council) அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பு, பணியிடங்களை பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்ற வழிகாட்டுதல் மற்றும் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த அமைப்பானது, உயிர் இழப்பு, மனிதத் துன்பங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளைத் தடுக்கவும், குறைக்கவும், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தேசிய இயக்கத்தை (ஒழுங்கமைக்கப்படாத துறை உட்பட) திறனை வளர்ப்பது, பொருள், முறைகள், நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறது.
இக்குழுவானது, 1971 ஆம் ஆண்டு முதல் அதன் நிறுவன தினத்தைக் (மார்ச் 4) குறிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு தினம் / பாதுகாப்பு வாரப் பரப்புரையினை முன்னெடுத்து வருகிறது. இந்தப் பரப்புரையானது, அனைத்துத் துறைகளிலும் பாதுகாப்பு விழிப்புணர்வைப் பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. இந்தப் பரப்புரை விரிவானது, பொதுவானது மற்றும் நெகிழ்வானது, பங்கேற்கும் நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட செயல்பாடுகளை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறது. இருப்பினும், தேசியப் பாதுகாப்பு நாள் என்பது;
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் (Safety Health Education) இயக்கத்தை எடுத்துச் செல்வது.
இந்தியாவின் பல்வேறு மட்டங்களில் பல்வேறு தொழில் துறைகளில் முக்கியப் பங்குதாரர்களின் பங்களிப்பை அடைதல்.
முதலாளிகள் தங்கள் ஊழியர்களை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் பங்கேற்பு அணுகுமுறையைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.
பணியிடங்களில் தேவை அடிப்படையிலான செயல்பாடுகளின் வளர்ச்சி, சட்டப்பூர்வத் தேவைகளுடன் சுய இணக்கம் மற்றும் தொழில்முறை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகளை ஊக்குவித்தல்.
இதுவரை சட்டப்பூர்வமாக உள்ளடக்கப்படாத தன்னார்வ பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கத் துறைகளை உள்ளடக்கியதாக மாற்றுதல்.
பணியிடத்தைப் பாதுகாப்பானதாக்குவதில் தங்கள் பொறுப்பை முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய மற்றவர்களுக்கு நினைவூட்டுவதற்காக.
என்கிற நோக்கங்கள் பணியிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கலாச்சாரத்தை உருவாக்கி வலுப்படுத்துவதும், அதைப் பணிக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைப்பதும் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு நாளுக்கான கருத்துரு உருவாக்கப்பெற்று, அது தொடர்பான செயல்பாடுகளைத் தொழிற்சாலைகள் அனைத்தும் செய்திட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கு,
'வளர்ந்த பாரதத்திற்கு பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியம்' (SAFETY AND WELL-BEING CRUCIAL FOR VIKSIT BHARAT) என்பதேக் கருப்பொருள் தரப்பட்டிருக்கிறது. இக்கருத்துருவை மையமாகக் கொண்டு,
தேசியப் பாதுகாப்புக் குழுவால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்ட பாதுகாப்பு உறுதிமொழியினை ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்றுதல் வேண்டும்.
பணியாளர்கள் தேசியப் பாதுகாப்புக் குழு அட்டையை அணிந்து கொள்தல்.
தொழிற்சாலையின் அனைத்துப் பிரிவுகளிலும் பாதுகாப்புக்கான பதாகைகள் காட்சிப்படுத்துதல்.
பாதுகாப்பு போட்டிகள் - கட்டுரை, பரப்புரைகள், சுவரொட்டிகள், வீட்டுப் பராமரிப்பு, பாதுகாப்பு செயல்திறன் போன்றவை அளித்தல்
பாதுகாப்புப் பரிந்துரைகள் வழங்கல்
கண்காட்சிகள், ஒரு அங்க நாடகம் / நாடகம், பாடல்கள் போன்றவைகளை நடத்துதல்
பயிற்சித் திட்டங்கள், பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவை நடத்துதல்
அலகுகள் / பணியாளர் குடியிருப்புகளில் பாதுகாப்புத் திரைப்படங்களைத் திரையிடுதல்.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் / தீயணைப்பு உபகரணங்கள் போன்றவற்றின் மீதான நடைமுறை செயல் விளக்கம் அளித்தல்
அவசரகாலப் பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்.
பாதுகாப்புகளுக்கான விருது விழாக்களை நடத்துதல், புகழ்பெற்ற விருந்தினர் பேச்சாளர்களை அழைத்துப் பேசச் செய்தல்
சமூக விழிப்புணர்வு திட்டங்கள் குறித்தத் தகவல்களை அளித்தல்
என்று ஒவ்வொரு நிறுவனத்திலும் மேற்காணும் செயல்பாடுகள் செய்திட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகின்றன.
தொழிற்சாலைகள் தவிர, மாநில அரசு மற்றும் இந்திய அரசும் பல்வேறு நிகழ்வுகளின் வழியாகத் தொழிலாளர் பாதுகாப்பை வலியுறுத்துகின்றன.