நம்முடன் சேர்ந்து வாழும் உயிரினங்களைக் காக்க முன் வர வேண்டும்!

மே 22: பன்னாட்டுப் பல்லுயிர்ப் பெருக்க நாள்
World Biodiversity Day
World Biodiversity Day
Published on

ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் உயிரியற் பல்வகைமையை பரப்பும் நோக்கோடு ஒவ்வொரு ஆண்டும், மே 22 ஆம் நாளன்று, ‘பன்னாட்டுப் பல்லுயிர்ப் பெருக்க நாள்’ (International Day for Biological Diversity) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளினை, உலகப் பல்லுயிர்ப் பெருக்க நாள் (World Biodiversity Day) என்றும் சொல்வதுண்டு.

1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் இரண்டாவது குழுவினால், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான மரபுநெறி உருவாக்கப்பட்ட டிசம்பர் 29 ஆம் நாளன்று, ‘பன்னாட்டுப் பல்லுயிர்ப் பெருக்க நாள்’ கடைப்பிடிப்பதென்று முடிவு செய்யப்பெற்றது. 1993 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர், 2000 ஆம் ஆண்டு திசம்பர் 20 ஆம் நாளன்று, 1992 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாளில் நடத்தப்பெற்ற ரியோ பூமி உச்சி மாநாட்டை நினைவு கூரும் வழியிலும், டிசம்பர் மாதக் கடைசியில் வரும் பல விடுமுறை நாட்களைத் தவிர்க்கும் பொருட்டும், இந்நாள் மே 22 ஆம் நாளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதேப் போன்று, 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 61 ஆவது அமர்வில், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவதை நோக்கமாகக் கொண்டு ஓர் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிற முடிவுடன், 2010 ஆம் ஆண்டினை பன்னாட்டு உயிரிப் பல்வகைமை ஆண்டு (International Year of Biodiversity) என்று அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டில் இக்கொண்டாட்டம் பன்னாட்டு அளவில் நடைபெற்றது.

பூமியில் உள்ள நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடுகளை உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity) என்கின்றனர். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும்.

உயிரியல் பல்வகைமை என்ப‌து புவியின் எல்லாப் ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரின‌ங்க‌ளைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும். இது புவியில் காணப்படும் அனைத்து பல்வேறுபட்ட சூழல் மண்டலங்களையும், அனைத்து உயிரினங்களையும், அவற்றின் வாழிடங்களையும், மரபணுக்களைப் பற்றியும் குறிக்கின்றது.

நாம் உண்ணும் உண‌வில் 80 ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கில் வாழும் தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்துதான் இருக்கின்ற‌ன‌. நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மை காக்கும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருட்க‌ள்தான். இருப்பிட‌ங்க‌ள் ம‌ற்றும் ஆடைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கும், தாவ‌ர‌ங்க‌ள் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து. இவ்வாறு ந‌ம‌க்கு இன்றிய‌மையாத‌ பொருட்க‌ளான‌ உண‌வு, உடை, உறைவிட‌ம் என்ற‌ கார‌ணிக‌ளுக்கு நாம் பல்லுயிர்களைச் சார்ந்தே வாழ‌ வேண்டியுள்ள‌து.

ப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்பது இய‌ற்கையாக‌வே, க‌ண்ணுக்குத் தெரியாம‌ல் ந‌டைபெறும் ப‌ல‌ ப‌ணிக‌ளைச் செய்கின்றது. வ‌ளி ம‌ண்ட‌ல‌த்தில் ந‌டைபெறும் வேதியிய‌ல் ம‌ற்றும் நீர்ச் சுழ‌ற்சிக‌ளை ச‌ம‌ன்ப‌டுத்துகிற‌து. உதாரணமாக, மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் நீரைத் தூய்மைப் ப‌டுத்துத‌ல் பணிகளைச் செய்கின்றன. மண்புழுக்கள் போன்றவை, ம‌ண்ணில் இருக்கும் பல்வேறு ச‌த்துக‌ளை ம‌றுசுழ‌ற்சி செய்து நில‌த்தை வளமானதாக்குகிற‌து. ப‌ல்வேறு ஆய்வுக‌ளின் ப‌டி, இதுபோன்ற இய‌ற்கையான‌ சூழ்நிலையை, ந‌ம்முடைய‌ அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் அமைத்துக் கொள்ள‌ முடியாது என்றும் ஆய்வாள‌ர்க‌ள் தெரிவிக்கின்றனர்.

சான்றாக, பூக்க‌ளில் பூச்சிக‌ள் மூல‌ம் ந‌ட‌க்கும் ம‌க‌ர‌ந்த‌ச் சேர்க்கையை ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்மால் ந‌ட‌த்த‌ முடியாது. தொழிற்ச‌லைக‌ளுக்குத் தேவையான‌ மூல‌ப்பொருட்க‌ள் பெரும்பாலும் உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளில் இருந்தே எடுக்க‌ப்ப‌டுகிற‌து. என‌வேதான், இந்த‌ உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளை அழியாம‌ல் பாதுகாப்ப‌துக்கு உல‌க‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து.

இருப்பினும், ப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை அழிக்கும் ஐந்து கார‌ணிக‌ளை எட்வ‌ர்ட் ஓ வில்ச‌ன் என்ற‌ ஆய்வாள‌ர் ஆங்கில‌த்தில் HIPPO என்று குறிப்பிடுகின்றார்.

1. H - Habitat Destruction - வாழிட‌ம் அழித்த‌ல்

2. I - Invasive Species - அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள்

3. P-Pollution - மாசுபாடு

4. P - Human over Population - ம‌னித‌ ம‌க்க‌ள் தொகை அதிக‌ரிப்பு

5. O - Overharvesting - அதிக‌மான‌ அறுவ‌டை

என்று பல்லுயிர்ப் பெருக்கத்தினை அழித்துக் கொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பிலிருக்கும் ஐந்து வகை அபூர்வ விலங்கினங்கள்!
World Biodiversity Day

இந்நிலையில், பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான அடிப்படை அச்சுறுத்தல்கள் பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல், சமூகங்கள் மற்றும் அரசாங்கங்களால் உணரப்பட்ட பல்லுயிரியலைக் காப்பாற்றுவதற்கான சாதனைகள் பற்றிய விழிப்புணர்வைக் எடுத்துரைத்தல், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை குறைக்க புதுமையான தீர்வுகளை முன்னெடுத்தல், பல்லுயிர் இழப்பைத் தடுக்க தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை உடனடியாகச் செயல்பட ஊக்குவித்தல் போன்றவைகளை முன்னிலைப்படுத்தி, பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், கருப்பொருள் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக, ’இயற்கையுடன் இணைந்திருத்தல் மற்றும் நிலையான வளர்ச்சி’ (Harmony with nature and sustainable development) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகும் உயிரினங்கள்!
World Biodiversity Day

பூமியில் வாழ மனிதர்களாகிய நமக்கு உரிமை இருப்பது போல, மற்ற விலங்கினங்களுக்கும், தாவர இனங்களுக்கும் உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, நாம் ஒவ்வொருவரும் இந்நாளில் நம்முடன் சேர்ந்து வாழும் விலங்கினங்கள், தாவர இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையின் அவசியத் தேவையாக இருக்கும் பல்வேறு உயிரினங்களைக் காக்கவும் முன் வர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com