
ஒவ்வொரு வருடமும் மே மாதம் கடைசி திங்கள் கிழமை அன்று அமெரிக்காவில் மெமோரியல் டே (நினைவு நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம், மே 26ஆம் தேதி இந்த நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா பங்கேற்ற போர்களில், நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனைப் பற்றிய சரித்திரத்தை சற்றே பார்ப்போம்.
முதலில் இந்த நாளிற்கு “அலங்கார நாள்” என்று பெயரிட்டிருந்தனர். அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து மூன்று வருடம் முடிந்த பின், மே 5, 1868ஆம் வருடம், அமெரிக்கப் படைத் தலைவர் ஜான் லோகன், அமெரிக்க மக்கள் மே 30ஆம் தேதியை “அலங்கார நாள்” என்று கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த நாளில், உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த வீரர்களின் கல்லறைக்குச் சென்று அவற்றை மலர்களால் அலங்கரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படி, அந்த வருடம் மே 30, முதல் “அலங்கார நாள்” ஆர்லிங்க்டன் தேசிய கல்லறையில் அனுசரிக்கப்பட்டது. ஆனால், இதற்கும் முன்பாக, மே 1, 1865ஆம் வருடம், அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட வீரர்களின் கல்லறையை அலங்கரிக்கும் நிகழ்வு, தென் கரோலினாவின் சார்லஸ்டனில் நடைபெற்றது.
இந்த “அலங்கார நாள்” வருடா வருடம் கொண்டாடப்பட்டு, 1889ஆம் வருடம், மே 30ஆம் தேதி தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா பங்கேற்ற போர்களில் பணிபுரிந்து உயிரைப் பறிகொடுத்த வீரர்களை கௌரவிக்க இந்த நாளை “அலங்கார நாள்” என்று சொல்லாமல், “நினைவு நாள்” என்று சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான பரிந்துரையை அப்போதைய குடியரசுத் தலைவர் ஹாரி ட்ரூமென், மே 22, 1950ஆம் வருடம் எடுத்துரைத்தார். 1968ஆம் வருடம் குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சன், நினைவு நாள், மே கடைசி திங்கள் கிழமை அனுசரிக்கப்படும் என்று சட்டமியற்றினார்.
இந்த நாளில் பெரும்பாலான மக்கள் கல்லறைக்கும், போர் நினைவுச் சின்னங்களுக்கும் செல்வர். தன்னார்வலர்கள், தேசிய கல்லறைக்குச் சென்று, கல்லறைகளில் அமெரிக்கன் கொடியை வைத்து மரியாதை செய்வர். கடைகளில் நினைவு நாள் அன்று வீடுகளை அலங்கரிக்கத் தேவையான பொருட்கள் கிடைக்கும். அமெரிக்காவின் பல நகரங்களில் அன்றைய தினம் அணிவகுப்பு நடைபெறும். மதியம் 3 மணிக்கு போர்களில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடை பெறும்.
பொதுவாக, வாரக் கடைசியில் மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேல் விடுமுறை வந்தால் அதனை நீண்ட வாரக் கடைசி என்று சொல்வார்கள். தொடர்ந்து விடுமுறை இருப்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கோ அல்லது குடும்பத்துடன் சுற்றுலாத் தளங்களுக்கு சென்று களிப்பதையோ செய்வதுண்டு. ஆகவே, இது போன்ற நாட்கள், குடும்பத்துடன் தொலை தூரப் பயணம் செல்லும் நாளாக மாறி வருகிறது.