
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முழுவதும், தேசிய காட்டெருது மாதம் (National Bison Month) என்று கடைப்பிடிக்கப்படுகிறது. கம்பீரமான பாலுட்டியான எருது, அமைதியான விலங்காகவும் இருப்பதால், அதற்கு மரியாதை அளிக்கும் விதத்திலும், எருதினைச் சிறப்பிக்கும் வகையிலும் ஜூலை மாதம் முழுவதும் அமெரிக்காவில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டு காட்டு எருதினைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
காட்டெருது (Bison) என்ற வகை விலங்கினங்கள் பெரிய, இரட்டைப் படைக் குளம்புகள் உள்ள பொவைன் எனப்படும் உட்குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை இரண்டு உயிருள்ள இனங்களாகவும், நான்கு அழிபட்ட இனங்களாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அழிந்த இனங்களில் மூன்று அமெரிக்காவிலும், ஒன்று மேற்கு ஐரோப்பிய ஸ்டெப் சூழலிலிலும் இருந்திருக்கின்றன.
வாழும் இரு இனங்களில், அமெரிக்கக் காட்டெருது அல்லது அமெரிக்க எருமை வட அமெரிக்காவில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கிறது. இவற்றிலும், சமவெளிக் காட்டெருது, மற்றும் வனக் காட்டெருது என்று இரண்டு உட்பிரிவுகள் இருக்கின்றன. ஐரோப்பியக் காட்டெருது, ஐரோப்பாவிலும் காக்கேசியாவிலும் காணப்படுகிறது.
பிரெஞ்சு ஆய்வாளர் சாமுவேல் டி சாம்ப்லைன் என்பவர், 1616 ஆம் ஆண்டில் தான் கவனித்த காட்டெருதினை (Bison) விவரிக்க, எருமை (Buffalo) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1625 ஆம் ஆண்டில், 'எருமை' என்பது முதன் முதலில் வட அமெரிக்காவில், ஆங்கில மொழியில் ஒரு அமெரிக்க பாலூட்டியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டபோது தோன்றியது.
அதாவது, அமெரிக்காவில் காட்டு விலங்குகளைப் பிடித்து, அதன் மென் மயிர்களைச் சேகரிக்கும் பணியை செய்து வந்த பிரெஞ்ச்காரர்கள், காட்டெருதினை அவர்களது பிரெஞ்ச் மொழியில் 'போயுஃப்' (Boeuf) என்று அழைத்திருக்கின்றனர். அந்தப் பிரெஞ்சு வார்த்தையிலிருந்து எருமை (Buffalo) என்ற சொல் அதன் பிறகு உருவாகியிருக்கிறது. அதன் பின்பு, 1774 ஆம் ஆண்டில் காட்டெருது (Bison) என்கிற பெயர் வழக்கத்திற்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை இவ்வினத்திற்கு காட்டெருது (Bison) என்ற பெயரேப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இருக்கும் காட்டெருதுகள், ஆப்பிரிக்க எருதுகளைப் போலவே ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், புல்வெளிகளிலும், சமவெளிகளிலும் காணப்படுகின்றன. திறந்தவெளி அல்லது பகுதித் திறந்த புல்வெளிகள் மற்றும் புதர்கள் போன்ற வழக்கமான வாழ்விடங்களும் இவை இருக்கத்தான் செய்கின்றன.
அங்கு மட்டுமின்றி, வறண்டதான, மென்மையான சரிவுகளுடன் கூடிய மலைப்பாங்கான மற்றும் மலைப்பகுதிகளிலும் இருக்கின்றன. அவை, தனக்குக் கிடைக்கும் உணவினை ஏற்றுக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியாகவும், மிகவும் பொறுமையாகவும் இருக்கின்றன.
அமெரிக்காவில் எஞ்சியிருக்கும் காட்டெருதுகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன் 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தேசியப் பாலூட்டி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூலை மாதம் முழுவதும் ‘தேசியக் காட்டெருது மாதம்’ என்றும் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஜூலை மாதம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக, காட்டெருதுகள் குறித்து பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுவதுடன், அதனை அழிந்து விடாமல் காக்க வேண்டுமென்கிற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.