

இந்தியாவில், தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தத் தேதி, 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற நாளைக் குறிக்கிறது. இது நுகர்வோர் சந்தையுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.
2025ம் ஆண்டிற்கான கருப்பொருள்:
இந்திய தேசிய நுகர்வோர் தினத்திற்கான 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் 'நிலையான வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற ஒரு நியாயமான மாற்றம்' ஆகும்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை நோக்கி நகரும் அதே வேளையில் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதன் இரட்டை சவாலை இந்தக் கருப்பொருள் கையாள்கிறது.
நுகர்வோர் அறியவேண்டியவை:
பொருட்களும், உபகரணங்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் ஆற்றல் திறன் கொண்டவைகளாக இருக்க வேண்டும். முக்கியமாக பணக்காரர்களுக்கு மட்டுமேயான ஆடம்பரமாக, விலை அதிகமாக இல்லாமல், சாதாரண மக்களும் அணுகக் கூடியதாகவும், மலிவு விலையிலும் இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
வணிகங்கள் தங்கள் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும். சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்று பொய்யான விளம்பரங்களைச் செய்து மக்களை ஏமாற்றும். உதாரணமாக, இயற்கையானது என்று சொல்லிவிட்டு ரசாயனங்களைப் பயன்படுத்துவது.
இப்படிப்பட்ட தவறான வாக்குறுதிகளைக் கொடுத்து பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்நாள் வலியுறுத்துகிறது.
இந்த நாளின் முக்கியத்துவம்:
தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் என்பது சமூக மற்றும் பொருளாதார சமநிலைக்கு வித்திடும் ஒரு முக்கிய நாளாகும். வணிகர்கள் பொருட்களை பதுக்குதல், கறுப்புச் சந்தையில் விற்றல், கலப்படம் செய்தல் போன்ற நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக செயல்படுவது குறித்து குடிமக்களுக்குக் கல்வி கற்பிக்கிறது.
உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் தாங்கள் விற்கும் பொருட்களின் தரத்திற்கு சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது. சிறிய தொகைக்கு பொருட்கள் வாங்கி அவற்றில் குறைபாடுகள் இருந்தால் கூட புகார் அளிக்க முடியும் என்பது பல நுகர்வோருக்குத் தெரியாது. இந்த நாள் நுகர்வோரை ‘எழுந்திரு, விழித்திரு' என்று வலியுறுத்துகிறது.
ஆறு அடிப்படை நுகர்வோர் உரிமைகள்:
2019ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு இந்திய நுகர்வோருக்கும் ஆறு அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் அளிக்கின்றது.
1. பாதுகாப்புரிமை: ஐ.எஸ்.ஐ (ISI) அல்லது அக்மார்க் தரச் சான்றிதழ் உள்ள பாதுகாப்பான பொருட்களை மட்டுமே நுகர்வோருக்கு வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.
2. தகவல் பெறும் உரிமை: நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்க பொருட்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை, தரநிலை மற்றும் விலையை அறியும் உரிமை.
3. தேர்வு செய்யும் உரிமை: சந்தையில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்களில் நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உண்டு. நியாயமான விலையில் தரமான பொருட்களைப் பெறுவதை இது உறுதி செய்கிறது.
4. புகாரளிக்கும் உரிமை: நுகர்வோர் தாங்கள் வாங்கிய பொருட்களில் ஏற்படும் குறைகளை நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் செய்யலாம். புகார்களை அதிகாரிகள் முறையாகக் கேட்டு, தீர்வளிக்க வேண்டும்.
5. பரிகாரம் தேடும் உரிமை: சுரண்டல் அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளைப் பெறுவதற்கான உரிமை. குறைபாடுள்ள தயாரிப்புகளுக்கு இழப்பீடு அல்லது மாற்றீடு பெறும் உரிமையும் இதில் அடங்கும்.
6. நுகர்வோர் கல்வி உரிமை: தகவலறிந்த நுகர்வோராக இருப்பதற்கான அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதற்கான உரிமை. மோசடிக்கு ஆளாகக்கூடிய கிராமப்புற மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது.
ஆன்லைன் ஷாப்பிங் (இ-காமர்ஸ்) செய்பவர்களுக்கும் முழுப் பாதுகாப்பை வழங்குகிறது. போலி விளம்பரங்களைத் தடுத்து, ஆபத்தான பொருட்களைச் சந்தையிலிருந்து நீக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.