உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை உறுதி செய்தல்!

அக்டோபர் 14: உலக தரநிர்ணய தினம்!
World Standards Day
World Standards Day
Published on

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (I.E.C), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (I.T.U) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும், ஆண்டுதோறும் அக்டோபர் 14 ஆம் நாளன்று உலகத் தர நிர்ணய நாள் (World Standards Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O) மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான நிபுணர்கள் பங்கேற்கின்றனர். பல தொழில்நுட்பக் குழுக்களும், துணைக்குழுக்களும், பணிக்குழுக்களும் அமைக்கப்பட்டுப் பல்வேறு தொழில்களுக்கான தர நிர்ணயங்களை வல்லுநர்கள் குழுவால் வழங்கப்படுகின்றன அல்லது மேம்படுத்துகின்றன. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (I.E.C), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (I.T.U) ஆகியவை சந்தைகளை உருவாக்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் எளிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த மூன்று அமைப்புகளும் ஒன்று சேர்ந்து 1969 ஆம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14 ஆம் நாளை, உலகத் தர நிர்ணய நாளாகக் கடைப்பிடிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை முதன்மையாகக் கொண்டு, அது குறித்த செய்திகள் பகிரப்படுகின்றன.

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O) தரநிலைகள் பன்னாட்டு அளவில் நிபுணர்களால் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. ஒரு தயாரிப்பை உருவாக்குவது, ஒரு செயல்முறையை நிர்வகிப்பது, ஒரு சேவையை வழங்குவது அல்லது பொருட்களை வழங்குவது என்று தரநிலைகள் பெரிய அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதே போன்று, உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வாங்குபவர்கள், வாடிக்கையாளர்கள், வர்த்தகச் சங்கங்கள், பயனர்கள் அல்லது கட்டுப்பாட்டாளர்கள் போன்ற நபர்களுக்கும் தரநிலைகள் தேவையானதாக இருக்கின்றன. உதாரணமாக,

  • தர மேலாண்மை தரநிலைகள் மிகவும் திறமையாக வேலை செய்யவும், தயாரிப்பு தோல்விகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

  • சுற்றுச்சூழல் மேலாண்மை தரநிலைகள் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கவும், கழிவுகளைக் குறைக்கவும், மேலும் நீடித்ததாகவும் இருக்க உதவும்.

  • பணியிடத்தில் விபத்துகளைக் குறைக்க உதவும் சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள். அவர்கள் முதன்மைப்படுத்தும் நிறுவனங்களின் தேவைகளை அறிந்தவர்கள், தங்கள் நிலையில் வல்லுநர்களின் திறன்களேத் தரநிலைகள் எனப்படுகின்றன.

  • ஆற்றல் நுகர்வு குறைக்க உதவும் ஆற்றல் மேலாண்மைத் தர நிலைகள்.

  • உணவு மாசுபடுவதை தடுக்க உதவும் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள்.

  • முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் IT பாதுகாப்புத் தரநிலைகள்.

ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O), தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் உற்பத்தியின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பன்னாட்டுத் தர நிலைகளாக 25,613 எனும் எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் 172 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருப்பதுடன், பன்னாட்டுத் தர நிலைகளை உறுதிப்படுத்துகின்றன. இவ்வமைப்பின் கீழ் 841 தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தர மேம்பாட்டைக் கவனித்துக் கொள்கின்றன.

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O) எனும் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும், சான்றளிப்பதிலும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards - BIS) ஈடுபட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
எலக்ட்ரானிக் கழிவுகளை திறம்பட குறைக்கும் உத்திகள்!
World Standards Day

இந்தியத் தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards) நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஆளுமைக்குட்பட்ட ஓர் இந்தியத் தரநிர்ணய அமைப்பாகும். இந்திய நுகர்வுப் பொருட்களின் தர நிர்ணயம், தரச்சான்றிதழ் மற்றும் தரமதிப்பையும் ஒழுங்குபடுத்துவது இதன் வேலையாகும்.

இந்தியா, விடுதலை பெற்ற பின் 1947 ஆம் ஆண்டில் தொழிற்துறையில் முன்னேற்றமடைய தர நிர்ணய முறையை இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (Indian Standards Institution) மூலம் இந்திய அரசு செயல்படுத்தியது. பெருகி வரும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இந்த அமைப்பிற்குக் கூடுதல் வலிமை வழங்க 1986 ஆம் ஆண்டில் இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம் இயற்றி, இந்திய தர நிர்ணய அமைவனமாக 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று மாற்றப்பட்டது.

இந்த அமைப்பின் வழியாக,

  • தரத்தை நிர்ணயம் செய்வதிலும், மதிப்பிடலிலும், தரச்சான்று வழங்குவதிலும் இணக்கமான முன்னேற்றம் பெறுதல்.

  • தர நிர்ணயத்திற்கும், தரக் கட்டுப்பாட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்தல்.

  • தரமதிப்பிற்கேற்ப தேசிய வியூகத்தை உருவாக்கி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னேற்றம் பெறுதல்.

போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய அல்லது மாநில அரசு, தொழிற்துறை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த 25 உறுப்பினர்களைக் கொண்டது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு 20 கிளைகளைக் கொண்டுள்ளது. தரச் சான்றிதழ் வழங்கும் விதமாக 8 ஆய்வுக்கூடங்களையும் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி லட்டின் தயாரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா?
World Standards Day

தங்க நகைகளின் தரத்தை மதிப்பிட இவ்வமைவனத்தின் மூலம் 2000 முதல் 'பிஐஎஸ் ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் பிஐஎஸ் விலைமதிப்புள்ள உலோகப் பிரிவுக் குழுவின்படி, தங்கம் மற்றும் தங்கக் கலப்பு உலோகங்களின் தர நிர்ணயங்கள் கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கின்றன.

  • IS 1417 - ஆபரணத் தங்கம் மற்றும் தங்கக் கலப்பு உலோகங்களின் தகுதி நிலை.

  • IS 1418 - சொக்கத் தங்கம், ஆபரணத் தங்கம் மற்றும் தங்கக் கலப்பு உலோகங்களின் மதிப்பீடு.

  • IS 2790 - 23, 22, 21, 18, 14 மற்றும் 9 காரட் தங்கக் கலப்பு உலோகங்களின் வழி நெறி.

  • IS 3095 - ஆபரணத் தங்க உற்பத்தியில் பயன்படும் தங்கப் பற்றுகள்

  • 2005 ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கும் ஹால் மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது.

  • IS 2112 - ஆபரண வெள்ளி மற்றும் வெள்ளிக் கலப்பு உலோகங்களின் தகுதி நிலை

போன்றவை வழியாகத் தரத்தை உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருட்கள் கிடைக்க வழி செய்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com