எலும்பு முறிவு குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்!

அக்டோபர் 20: உலக எலும்புப்புரை தினம்!
World Osteoporosis Day
World Osteoporosis Day
Published on

1996 ஆம் ஆண்டு, அக்டோபர் 20 அன்று ஐக்கிய இராச்சியத்தின் தேசிய எலும்புப்புரை சங்கத்தால், ஐரோப்பிய ஆணையத்தின் ஒத்துழைப்புடன் உலக எலும்புப்புரை நோய்க்கான முதல் நிகழ்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர், 1997 ஆம் ஆண்டில் பன்னாட்டு எலும்புப்புரை அறக்கட்டளை (IOF) எனும் அமைப்பு, அக்டோபர் 20 ஆம் நாளில் உலக எலும்புப்புரை நாள் (World Osteoporosis Day) என்று கடைப்பிடித்தது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 ஆம் நாளில் உலக எலும்புப்புரை நாள் (World Osteoporosis Day) அனுசரிக்கப்படுகிறது.

தொடக்கத்தில், பல்வேறு அமைப்புகள் இந்த நாளை ஆதரித்தன. 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில், எலும்புப்புரை மற்றும் வளர்சிதை மாற்ற எலும்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பும் இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கான அனுமதியினை வழங்கியது. 1999 ஆம் ஆண்டில், உலக எலும்புப்புரை நாள், முதன்முறையாக, 'முன்கூட்டியே கண்டறிதல்' எனும் கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் இந்நாளில், எலும்புப்புரை குறித்த ஆரம்ப கால நோயறிதல், அதன் சிகிச்சை மற்றும் வலுவான எலும்புகளுக்கான தடுப்பு உதவிக் குறிப்புகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு பரப்புரைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தப் பரப்புரைகள், முக்கியமாக எதிர்காலத்தில் எலும்புப்புரை மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், அவர்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மக்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

எலும்புப்புரை (Osteoporosis) என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் எலும்பு தொடர்புடைய ஒரு நோய் ஆகும். எலும்புப்புரையினால் உடலில் எலும்புத் தாது அடர்த்தி (Bone Mineral Density) குறைவதும், எலும்பு நுண்ணியக் கட்டமைப்பு தகர்க்கப்படுவதும் நிகழ்கிறது. மேலும் எலும்பில் உள்ள இணைப்புதிசு வெண் புரதம் (கொலாசென்) அல்லாத புரத வகைகளின் எண்ணிக்கையை இது மாற்றுகிறது. இரட்டை ஆற்றல் ஊடுகதிர் உறிஞ்சுமையளவியல் (Dual-energy X-ray absorptiometry) அளவீடுபடி உயர்ந்த எலும்பு அடர்த்திக்குக் (20 வயதுடைய ஆரோக்கியமான பெண்களின் சராசரி) குறைவாக எலும்பு தாது அடர்த்தி 2.5 விலகும் வரையளவு எலும்புப்புரை இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பால் (WHO) பெண்களுக்காக வரையறுக்கப்பட்டது. 'நிறுவப்பட்ட எலும்புப்புரை' என்ற இந்தச் சொல் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவு இருத்தலையும் குறிக்கிறது.

எலும்புப்புரை மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் இது மாதவிடாய்க்குப் பிந்தைய எலும்புப்புரை என்றழைக்கப்படுகிறது. இது ஆண்களுக்கும், குறிப்பிட்ட இயக்குநீர் சீர்குலைவுகள், நாட்பட்ட நோய்கள் இருக்கும் எவருக்கும் ஏற்படலாம். இஸ்டீராய்டு அல்லது குளூக்கோகார்ட்டிகாய்டு தூண்டப்பட்ட எலும்புப்புரை (SIOP or GIOP) என்றழைக்கப்படும் நோயிருக்கும் போது குளூக்கோகார்ட்டிகாய்டுகள் என்ற மருந்து உட்கொள்ளலின் காரணமாகவும் இது ஏற்படலாம். இதில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவுக்கான ஆபத்து இருப்பதினால் எலும்புப்புரை, குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
எலும்பு, மூட்டுகளின் ஆரோக்கியம் காக்க  கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்!
World Osteoporosis Day

வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் சில நேரங்களில் மருந்து உட்கொள்ளலினாலும் எலும்புப்புரையைத் தடுக்கலாம். எலும்புப்புரை இருப்பவர்களுக்கு, இவை இரண்டுமே சிகிச்சையில் உள்ளடங்கியிருக்கும். வாழ்க்கை முறை மாற்றத்தில் உடற்பயிற்சி மற்றும் கீழே விழுதலை தவிர்த்தல் ஆகியவை சேர்ந்திருக்கிறது. மருந்து உட்கொள்ளுதலில் கால்சியம், உயிர்ச்சத்து டி , பைஃபோஸ்போனேடுகள் மற்றும் பல சேர்ந்திருக்கிறது. நடப்பதற்கு உதவும் தசைகளை பண்படுத்தும் உடற்பயிற்சி மற்றும் அசைவு சீராக்கத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகள் ஆகியவை கீழே விழுதலை தடுக்கும் அறிவுரையில் உள்ளடங்குகிறது. சமநிலை சிகிச்சைகளும் இதில் அடங்கலாம். ஆக்கமிக்க தாக்கத்துடன் கூடிய உடற்பயிற்சி எலும்புப்புரையை நிறுத்தவோ நேர்மாறாக்கவோ செய்யலாம்.

உலகளவில், 50 வயதிற்குட்பட்ட 3 பெண்களில் ஒருவருக்கும், 5 ஆண்களில் ஒருவருக்கும் எலும்புப்புரை நோயினால், எலும்பு முறிவு பாதிப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வயதானவர்களில் கொடிய வலி மற்றும் நீண்டகால இயலாமைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். மேலும், மோசமான சுகாதார உள்கட்டமைப்பு, வசதி, அணுகல் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், எலும்புப்புரை நோயாளிகளில் 20% மட்டுமேக் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

வயதான பெண்களில் எலும்புப்புரை பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது, மாதவிடாய் நின்ற 5 முதல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் எலும்பின் அடர்த்தியை 20% இழக்கிறார்கள். எலும்பு நலத்தில் எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க, உலக எலும்புபுரை நாள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் உதவியுடன், விழிப்புணர்வை உருவாக்குதல், ஆரம்ப கால நோயறிதலைப் பெறுதல், எலும்பு அடர்த்தியைச் சரிபார்த்து அதற்கேற்ப செயல்படவும் மக்களை ஊக்குவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியமான எலும்புகளை உறுதிப்படுத்தவும், நீடித்த எலும்புப்புரை நோயைத் தடுக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
உலக தாய்ப்பால் வாரம் (பகுதி 4): தாய்ப்பால் கொடுப்பதால் எலும்பு தேய்மான பிரச்சனை வருமா?
World Osteoporosis Day

எலும்பு நலம் மற்றும் எலும்பு முறிவு இல்லாத எதிர்காலத்திற்குக் கீழ்க்காணும் 5 குறிப்புகளைக் கடைப்பிடிக்கலாம்.

1. வழக்கமான உடற்பயிற்சி

எலும்பு மற்றும் தசைகளின் இயக்கத்தின் தினசரிப் பயிற்சியை உறுதிப்படுத்தவும். அதற்கு எடை தாங்குதல், தசையை வலுப்படுத்துதல் மற்றும் சமநிலை பயிற்சிகள் சிறந்தவை.

2. ஊட்டச்சத்து

கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்த உணவு போன்ற எலும்பு நலத்திற்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வைட்டமின்கள் D க்கான தினசரி சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளுங்கள், இது உடலில் கால்சியத்தை நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

3. வாழ்க்கை முறை

நச்சு மற்றும் எதிர்மறையான வாழ்க்கை முறையைத் தடுக்கவும், உட்கார்ந்த வாழ்க்கையைத் தவிர்க்கவும், சரியான உடல் நிறை குறியீட்டு எண் (BMI) பராமரிக்க ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்ளவும். புகைப்பிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

4. ஆபத்துக் காரணிகள்

கவனமாக இருங்கள், எலும்புப்புரை நோய் குறித்த அறிகுறிகளை அறிந்திருங்கள், எந்தவொரு சிக்கலும் உருவாகாமல் தடுக்க விரைவான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

5. சோதனை மற்றும் சிகிச்சை

ஏதேனும் சந்தேகம் அல்லது எலும்புப்புரைக்கான ஆபத்து காரணிகள் இருந்தால், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். தேவைப்படின் சிகிச்சையைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
எலும்பு தேய்மான பிரச்சனையா? இதை சாப்பிடுங்க!
World Osteoporosis Day

எலும்பு நலத்திற்குப் போதுமான கால்சியம் நிறைந்த உணவுகள், இறைச்சி மற்றும் பிற உயர் புரத உணவுகள், பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள், மெக்னீசியம் நிறைந்த உணவுகள், உணவில் வைட்டமின் கே சேர்த்தல், கீரை போன்ற உணவுகள் எடுத்துக் கொள்வது நல்லது.

2024 ஆம் ஆண்டு, உலக எலும்புப்புரை நாளின் கருப்பொருளாக, 'உடையக்கூடிய எலும்புகள் இனி இல்லை என்று சொல்லுங்கள்' (Say no to fragile bones) எனும் கருப்பொருள் தரப்பட்டிருக்கிறது.

எனவே, எலும்புப்புரை நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றிடுங்கள். எலும்பு முறிவு குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்…!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com