செப்டம்பர் 2: உலகத் தேங்காய் நாள் - 'தேங்காய்' பெயர் காரணம் தெரியுமா?

World Coconut Day
World Coconut Day
Published on

உலகளாவிய தேங்காய் உற்பத்தியில் இந்தியா மூன்றாமிடத்தில் இருக்கிறது!

இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பாக, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்டு ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (Asian and Pacific Coconut Community - APCC) செயல்பட்டு வருகிறது. 1998 ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்த அமைப்பின் மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் நாளை, ‘உலகத் தேங்காய் நாள்’ என்று அறிவித்தது. 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் நாள், உலகத் தேங்காய் நாளாகக் (World Coconut Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியாவில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேங்காயின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தேங்காயின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் விதமாகவும் உலகத் தேங்காய் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகில் 86 நாடுகளில் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும், உலக அளவில் இந்தோனேஷியா தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 17 மில்லியன் மெட்ரிக் டன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவிற்கு அடுத்ததாக, பிலிப்பைன்ஸ் இரண்டாவது இடத்தில் ஒரு நெருங்கிய போட்டியாளராக இருக்கிறது. அண்மைய ஆண்டுகளில் பிலிப்பைன்சில் சுமார் 14.7 மில்லியன் மெட்ரிக் டன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவின் பல்வேறு காலநிலை அதன் பரந்த புவியியல் முழுவதும் தென்னை சாகுபடிக்கு ஏற்ற இடமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 14 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுவதால், தேங்காய் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் தேங்காய்த் தொழில் உணவுக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான குடிமக்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. உற்பத்தி நுட்பங்களை மேம்படுத்துவதில், உள்ளூர் நுகர்வு மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

தேங்காய் என்பது தென்னை மரத்தின் பழம் ஆகும். இதனைத் தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது.

தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கு + "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது என நன்னூல் (187) குறிப்பிடுகிறது. 

Coconut என்னும் மரம் இந்தோனேசியா தீவுகளில் இருந்து இலங்கை ஊடாக தமிழ்நாடு மற்றும் கேரளக் கடற்கரையை அடைந்தது. எனவே, அது தென்காய் என்று விளிக்கப்பட்டது.

தேங்காயின் வெளியில் பச்சையாக இருப்பினும் பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண் பழுப்பு நிறத்தில் மிகக் கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பதுதான் தேங்காய்.

அளவாக முற்றியத் தேங்காயை நெற்று என்பர். அந்தக் கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்குப் பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய் நீர் இருக்கும். அதனை ‘இளநீர்’ என்பர்.

தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றிவிடும். அப்படி மிக முற்றிய தேங்காயைக் கொப்பரைத் தேங்காய் என்பர்.

இளநீர், தேங்காய், கொப்பரை என அதன் அனைத்து வடிவங்களும் நம் உணவில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
முடி அதிகமா கொட்டுதா? தேங்காய் பாலும் அதன் நன்மைகளும்! 
World Coconut Day

இந்தியர்களின் கலாசாரம், தினசரிச் சமையல், பழக்க வழக்கங்களிலும் முக்கிய இடம் பெற்றுள்ள இளநீரில், உடலில் நீரிழப்பைத் தடுப்பதற்குத் தேவையான இரு முதன்மை சத்துக்களான பொட்டாசியம், சோடியம் இரண்டையும் இளநீர் வழங்குகிறது. இளநீரில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு தாதுக்கள் அடங்கியுள்ளன. தேங்காய் நீரில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் உடலில் நீரிழப்பைத் தடுத்துச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

தேங்காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்கிறது மற்றும் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்டை (மாவுச் சத்து) குறைத்துக் கொண்டு பேலியோ, கீட்டோ உள்ளிட்ட உணவு முறைகளைக் கடைபிடிப்பவர்களுக்கு நல்ல கொழுப்புகளை வழங்கும் உணவு ஆதாரமாக தேங்காய் விளங்குகிறது.

தேங்காயில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் அமினோ அமிலங்கள் அதிகமாகவும் இருக்கின்றன. மேலும், தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவி, சர்க்கரை அளவை இயல்பு அளவில் வைத்திருக்கவும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
கோடையின் சூட்டை தணிக்கும் வழுக்கை தேங்காய்!
World Coconut Day

தேங்காயைப் போன்று அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் ஆரோக்கியமான கொழுப்பு ஆதாரமாக இருக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் நடுத்தரச் சங்கிலி கொழுப்பு அமிலம் (Medium-Chain Fatty Acid) மிகுந்து காணப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்புக் குணம் தேங்காய் எண்ணெய்யில் இருக்கிறது. இதனால், பற்பசைக்குப் பதிலாக பற்களைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். சொத்தைப்பல் பிரச்சனைக்கும் சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் அமைகிறது. இது உதடுகள், தோல் மற்றும் தலைமுடிக்கு ஒரு சிறந்த ஈரமூட்டியாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com