
பெற்றோர்கள் முதல்நிலை ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் இரண்டாம்நிலை பெற்றோர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஆசிரியர்களும் சமூகமும் பிரிக்க முடியாதவை. ஓர் ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவூட்டுவதோடு சமூகத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். சமூக மாற்றத்திற்கு ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக செயல்பட்டு, தன்னம்பிக்கை மிகுந்த தலைமுறையை உருவாக்குகின்றனர், சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் ஆற்றும் பணி அளப்பரியது.
கல்வி மூலம் மாணவர்களுக்கு அறிவையும், வாழ்க்கைப் பாடங்களையும் கற்பித்து, அவர்களை ஆசிரியர்கள் சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தயார்படுத்துகிறார்கள். நெறிமுறைகள் மற்றும் அன்பு, ஒற்றுமை போன்ற முக்கிய சமூக மதிப்புகளை மாணவர்கள் மனதில் விதைப்பதன் மூலம், சிறந்த குடிமக்களாக அவர்களை உருவாக்குகிறார்கள்.
ஆசிரியர்கள், மாணவர்களிடையே நல்ல எண்ணங்களை வளர்த்து, சமூகத்தில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். இதனால் சமூகம் சீராக இயங்க முடிகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறந்த ஆசிரியர்கள் அவசியம்.
தற்காலங்களில் தொழில் நுட்பம் பெருகி விட்டநிலையில், கற்பித்தல் பணி சவாலானதாக மாறிவிட்டதை சமுதாயம் உணர வேண்டும். பாடத்திட்டத்தைத் தாண்டி தொழில்நுட்பம் மற்றும் மாணவர்களின் உளவியலைப் புரிந்து கொள்வது ஆசிரியர்களுக்கு அவசியம். ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்று, மாணவர்களின் மனநிலையை அறிந்து, கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஆதரவு அளிக்க வேண்டும்.
ஆசிரியர் என்பவர் இறைவனுக்குச் சமமாகப் பார்க்கப்படுபவர். ஆசிரியப் பணி என்பது சாதாரண பணி அல்ல. அது ஒரு மாபெரும் தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள். பெற்றோர்கள் மற்றும் சமூகம் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்தால் ஆசிரியர்கள் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற முடியும். ஆசிரியர் சங்கங்கள் கல்வியாளர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் நல்வாழ்வுக்காக ஆலோசனை, பேச்சுவார்த்தை மற்றும் கூட்டு பேரம் பேசுவதன் மூலம் கல்வி முறைகளின் திசை மற்றும் மேம்பாட்டை வடிவமைப்பதில் முன்னணி பங்கு வகிக்க முடியும்.
பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஓர் ஆசிரியர் ஆற்ற வேண்டிய கடமைகளை எவரும் முழுமையாகப் பட்டியலிட்டுக் கூறிவிட முடியாது. ஆசிரியரின் முக்கியத்துவமும், செல்வாக்கும், பயனும், வழிகாட்டுதலும் எங்கு முடிகிறது என எவரும் வரையறுத்துக் கூறுதல் இயலாது. ஆசிரியர் சமூகம் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைத்து, நன்னெறிகளை ஊட்ட வேண்டும்.
இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய தலைவர்களாகிறார்கள். ’ஆசு’ என்றால் குற்றம். ’இரியர்’ என்றால் அகற்றுபவர். மாணவர்களிடம் இருக்கும் அறியாமை என்னும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். மனித மனம் அங்கீகாரத்துக்கும், பாராட்டுக்கும் ஆசைப்படும் தன்மையுடையது. ஆசிரியர்களின் சேவைகளை நினைவு கூர்ந்து அவர்களின் பணியை அங்கீகரிக்கும் நாளே ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5) ஆகும்.
ஆசிரியராக தனது வாழ்வைத் தொடங்கி நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாள்தான் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரும்பணி ஆற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி அரசுகள் இந்த நாளில் கௌரவிக்கின்றன.
இந்தியாவிலேயே இரண்டு ஆசிரியர்களை ஜனாதிபதி பதவி வரை உயர்த்தி அழகு பார்த்தது நமது தமிழகமே. அவர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும், அப்துல்கலாமும் ஆவார்கள். ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த உலகிற்கே எடுத்துக் காட்டியவர்கள் இவர்கள்.
உலகில் முன்னேறிய 10 நபர்களிடம் பேட்டி எடுத்தபோது 10ல் 8 பேர் அவர்களது ஆசிரியர்கள்தான் அவர்களின் உயர்வுக்குக் காரணம் என்றனர். இந்தியாவின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞர் பேராசிரியர் சர்.சி.வி.ராமனுக்கு பாரத ரத்னா விருது பெறுவதற்கான அழைப்பு வந்தபோது அவர்கள் அழைத்த தேதியில், தன்னுடைய மூன்று மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளதாகவும், அன்றைய தினம் அவர்களுடன்தான் இருக்க வேண்டி உள்ளது என்றும் கூறினாராம்.
ஆசிரியர்கள் பலமான வேர்களை போன்றவர்கள். மாணவர்கள் பூக்களை போன்றவர்கள். வேர்களுடைய பலத்தை பொறுத்தே பூக்களின் வசீகரம் அமையும். மாணவர்களின் மனதில் எப்போதும் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி உற்சாகப்படுத்துபவராகவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துபவராகவும் ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் பணி என்பது வேலைக்குச் செல்வதற்கு மாணவர்களை தயார்படுத்தும் பணி மட்டுமல்ல, ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து, ஒழுக்கம், திறமை மற்றும் சமூக அக்கறை உடைய நல்ல குடிமக்களை உருவாக்கும் மகத்தான பணியாக இருப்பதால் ஆசிரியர் பணி சவால் மிக்கது என்பதில் ஐயம் எதுவுமில்லை. அவ்வாறான பணியினை செய்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு இந்த நாளில் நமது வணக்கத்தையும், வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்வோமே!