

நோபல் பரிசு பெற்ற முதல் பெண், இயற்பியல் (1903), வேதியியல் (1911) ஆகிய துறைகளில் இரட்டை நோபல் பரிசை முதல் முறையாகப் பெற்றவர், பாரீஸ் பல்கலைக்கழக வரலாற்றில் பேராசிரியையான முதல் பெண் என பல பெருமைகளுக்கு உரியவர், போலந்து நாட்டில் 1867ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி பிறந்த மேரி கியூரி.
இளமையில் வறுமையில் வாடியவர். ஆனால், தனது லட்சியத்தில் வாடாதவர். காலையில் படிப்பு, மாலையில் வீடுகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு டியூஷன் என பல்வேறு வேலைகளை செய்துகொண்டே படித்தார். மேல் படிப்பிற்கு பிரான்ஸ் வந்தார். தேவையான வசதிகள் இல்லாமல் ஆய்வுகளை நடத்தினார். அவருக்கு அவரது கணவர் பேராசிரியர் கியூரி உறுதுணையாக இருந்தார்.
போலோனியம், ரேடியம் எனும் இரண்டு தனிமங்களை மேரி கண்டுபிடித்தார். கதிரியக்கம் பற்றிய கோட்பாடுகளை உருவாக்கினார். ரேடியத்தை தனியே பிரித்தார். 1914ம் ஆண்டு நடைபெற்ற உலகப் போரின்போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப் பொருத்தி பலரின் உயிரைக் காத்தவர் மேரி கியூரிதான்.
கதிரியக்கம் பற்றிய பல்வேறு ஆய்வுகளை செய்த மேரிக்கு அதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய தீங்குகள் பற்றி தெரிந்துகொள்ள நேரமில்லை. உடலுக்கு தீமைகளைத் தரக்கூடிய கதிரியக்க ஆய்வு கருவிகளை அவர் எப்போதும் எந்த பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் பயன்படுத்தி வந்தார்.
மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து உலக அளவில் புகழ் பெற்றவராக மாறினாலும், அதனால் வந்த பரிசுகளை, கௌரவங்களை அளிக்க பலர் முன் வந்தனர். அவற்றை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். மேரி கியூரி விளம்பரத்தை அடியோடு வெறுத்தார். தனக்குப் பிறர் அளித்த விருது கேடயங்களையும், பதக்கங்களையும் பத்திரமாகப் பாதுகாக்காதவர். அதேநேரம் அவருக்கு அனுப்பப்பட்ட விருந்து அழைப்பிதழ் அட்டைகளை பத்திரமாக வைத்துக் கொண்டு அதில் அறிவியல் கணக்குகள் போடப் பயன்படுத்தியவர். மேரி கியூரியிடம் கையெழுத்து வாங்க வரும் கையெழுத்து ஆர்வலர்களை ஏதாவது தகுந்த மாதிரி சாக்குப்போக்கு சொல்லி கையெழுத்துப் போடாமலேயே தட்டிக் கழித்து விடுவார்.
25 பவுனுக்கு ஒரு ‘செக்கும்’ ஒரு கடிதமும் அனுப்பினார் ஒரு புகழ் பெற்ற பிரெஞ்சு ஆசிரியர். ‘இத்தொகையை ஏதாவதொரு பிரெஞ்சு ஸ்தானத்திற்கு நன்கொடையாக அனுப்ப தங்களுக்கு விருப்பம் எனில், ‘செக்’கின் பின்புறம் தங்கள் கையெழுத்திட்டு அனுப்புங்கள். தாங்கள் நன்கொடை வழங்குவதில் அதிக ஆர்வமுள்ளவர் என்பதாலேயே இவ்வாறு செய்கிறேன்’ என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் அந்த ஆசிரியர்.
கியூரி அம்மையாரையா ஏமாற்ற முடியும்? ‘தங்கள் செக் ஒரு அதிசயமான வேண்டுகோளைத் தாங்கி வந்துள்ளது. இதை என் நண்பர்களிடம் காட்ட விரும்புகிறேன். அதனால் செக்கை மாற்றப்போவதில்லை. தங்களது கையெழுத்தை எனது வீட்டில் வைத்துக்கொள்ள நீண்ட காலமாக ஆசை. அதை நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி!’ - இவ்வாறு தனது செயலாளரை விட்டு எழுதச் செய்தார் மேரி கியூரி அம்மையார்.
ஒரு சமயம் பத்திரிகையாளர் ஒருவர் மேரி கியூரியை ஒரு சிறிய கிராமத்தில் கண்டுபிடித்து, அவரைப் பற்றிய சில விபரங்களை அறிய முயன்றார். அப்போது மேரி கியூரி, ‘மனிதர்களைப் பற்றி ஆர்வம் கொள்வதை விடுங்கள்; புதிய யோசனைகளில் ஆர்வம் கொள்ளுங்கள்’ என்றார்.
மேரி கியூரி மட்டுமல்ல, அவரது கணவர் பியூரி கியூரியும் விளம்பரத்தை விரும்பாதவர். விளம்பரம் பிடிக்காத இந்த விஞ்ஞான தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் வறுமையான சூழ்நிலையிலேயே பல ஆய்வுகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பம் ஒட்டுமொத்தமும் நோபல் பரிசுகளை பெற்றது என்றால் அது மேரி கியூரியின் குடும்பம் மட்டுமே. ஆம், அவரின் இல்லத்தில் மேரி கியூரி, கணவர் பியரி கியூரி, மகள் ஐரீன் மற்றும் மருமகன் பிரெடரிக் ஜோலியட் என நால்வர் நோபல் பரிசை பெற்று சாதனை படைத்தனர். நோபல் பரிசாளர்கள் பட்டியலில் முதன் பெண் மேரி கியூரி; இரண்டாம் நோபல் பரிசு பெற்ற பெண், மேரியின் மகள் ஐரீன்தான்.
ஆண்டாண்டு காலமாக தனது ஆய்வுகளின் காரணமாக கதிர்வீச்சின் தாக்கத்துக்கு ஆளாக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்த சோகையால் அவர் 1934ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி இப்பூமியை விட்டு மறைந்தார்.