

இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அது பற்றி பலருக்குத் தெரிந்து இருக்கும், பலருக்குத் தெரியாது. சில மாநிலங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால், இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி நவம்பர் 1, 1956ல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மொழிவழி ரீதியான அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படி மொழிவாரியாக அமைக்கப்பட்ட மாநிலங்களில் முதன்முதலாக அமைந்த இந்திய மாநிலம் ஆந்திரா. நம் நாட்டில உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே தலைநகர்தான். ஏன் சில மாநிலங்கள் ஒரே தலைநகரைக் கூட பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், இங்கே ஒரு மாநிலத்திற்கு மூன்று தலைநகர்கள் உள்ளன. ஆம், பல்வேறு சமூக அமைப்பு, வளமான வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கு புகழ் பெற்ற ஆந்திரப் பிரதேச மாநிலம் 3 தலைநகர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் அதிக மாவட்டங்களைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். பரப்பளவில், உத்தரபிரதேசத்தில் மொத்தம் 75 மாவட்டங்கள் 2,40,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளன. நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள மாவட்டங்களை விட இது மிகவும் அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்கள் 18 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக மாநிலங்களுடன் எல்லையை பகிரும் மாநிலம் உத்தரப்பிரதேசம்தான். இது 9 மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ளது.
பரப்பளவு அடிப்படையில் நாட்டின் சிறிய மாநிலமாக கோவா உள்ளது. இதன் பரப்பளவு 3702 சதுர கி.மீ. அந்த மாநிலத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு இரண்டரை மணி நேரத்தில் நீங்கள் சென்றடையலாம். இந்தியாவில் இரண்டு மாவட்டங்களைக் கொண்ட ஒரே மாநிலம் கோவா. இரண்டு மாவட்டங்கள் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா. அவ்வளவுதான்.
இந்தியாவின் மிக மகிழ்ச்சியான மாநிலம் மிசோரம். இந்தியாவின் 100 சதவீத கல்வியறிவு பெற்ற இரண்டாவது மாநிலம் மிசோரத்தின் சமூக அமைப்பு அம்மாநில மகிழ்ச்சியில் பங்கு வகிக்கிறது. ஆண்கள், பெண்கள் பாகுபாடு இல்லை. இளைஞர்கள் 16, 17 வயதிற்குள் வேலை வாய்ப்புகள் பெறுகிறார்கள். சாதியம் இல்லாத சமூகம்.
இந்தியாவிலேயே அதிக கோயில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இங்கு 79,154 கோயில்கள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 103 கோயில்கள் உள்ளன. இதுவரை 69 பொருட்கள் புவிசார் குறியீடுகள் பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிலப்பரப்பு மாநிலம் ராஜஸ்தான்தான். இதன் மொத்த பரப்பளவு 3,42,239 சதுர கிலோ மீட்டர்கள். இந்தியாவில் உள்ள மணிப்பூர் 20 சதவீதம் சமதளமும், 80 சதவீதம் மலைகளும் உள்ள மாநிலம். இந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் குதிரைகளில் ஏறி விளையாடும் ‘போலோ' விளையாட்டு.
இந்தியாவிலேயே அதிக காடுகளைக் கொண்ட மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும். அதேசமயம் அதன் புவியியல் பகுதியுடன் ஒப்பிடும்போது அதிக சதவீத காடுகளைக் கொண்ட மாநிலம் மிசோரம் ஆகும். ஆனால், ஜார்கண்ட் மாநிலம்தான் 'காடுகளின் நிலம்' என்றழைக்கப்படுகிறது. அதன் பரந்த பசுமை மற்றும் அடர்ந்த காடுகளின் காரணமாக ‘காடுகளின் நிலம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அதன் பரப்பளவில் குறிப்பிடத்தக்க பகுதியை காடுகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் அதன் இயற்கை வளங்கள் மற்றும் வன விலங்குகளுக்குப் பெயர் பெற்றது.
இமாச்சலப் பிரதேசம் ‘பர்வத்ராஜ்யம்’ அல்லது ‘மலை மாநிலம்’ என்று அழைக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் சுமார் 16,807 கிராமங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தியாவில் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்பவர்கள் இருக்கும் மாநிலம் ஜம்மு காஷ்மீர்தான். இங்கு ஆண்கள் அதிகபட்சமாக 76 ஆண்டுகளும், பெண்கள் சராசரி 80 ஆண்டுகளும் வாழ்கின்றனர். குறைந்த ஆண்டுகளே உயிர் வாழ்பவர்கள் இருக்கும் மாநிலம் சத்தீஸ்கர்தான். இங்கு ஆண்களின் சராசரி வயது 65. பெண்களின் சராசரி வயது 69.
இந்தியாவில் நீண்ட கடற்கரை உள்ள மாநிலம் குஜராத். இங்கே 1600 கி.மீ. தொலைவிற்கு கடற்கரை உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உப்பில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானவை குஜராத்தில் இருந்துதான் வருகின்றன. ஏனென்றால், குஜராத்தின் தனித்துவமான புவியியல் நிலைமைகள் உப்பு சாகுபடிக்கு உகந்தவையாக உள்ளது.
கேரள மாநிலம், 'இந்தியாவின் மசாலா தோட்டம்' என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த மாநிலத்தின் மலைப் பிரதேசங்கள், மசாலா விளைவிக்கப்படும் தாவரங்கள் வளர ஏற்றதாக உள்ளன. இந்தப் பகுதியின் தனித்துவமான காலநிலை மற்றும் மண் ஆகியவை மசாலா தாவரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளன. இங்கு விவசாயிகள் ஏலக்காய், கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் மற்றும் பலவற்றை வளர்க்கிறார்கள். கேரளாவின் மசாலா பொருட்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உலகப் புகழ் பெற்றவை. இம்மாநிலத்தின் பகுதியில் சுமார் 350 வகையான பாம்புகள் உள்ளன. இந்தியாவில் அதிக பாம்பு இனங்களைக் கொண்ட மாநிலம் இதுதான்.
இந்தியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மும்பை, புனே, நாக்பூர், ஷீரடி, அவுரங்காபாத், நாசிக், கோலாப்பூர் உட்பட முக்கிய நகரங்களில் மொத்தம் 13 விமான நிலையங்கள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.