

பாகிஸ்தானில் உள்ள மிங்கோராவில் ஜூலை 12, 1997 அன்று பிறந்தார் மலாலா. அவரது தந்தை, ஜியாதுதீன் யூசுப்சாய் ஒரு கல்வி ஆர்வலர் ஆவார். பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் மிங்கோரா பகுதி உள்ளது. அது தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பழங்குடியினர் இருக்கும் பகுதி. பள்ளத்தாக்குகள் நிறைந்த ஸ்வாட் பகுதியில்தான் வசித்தார் அந்த சிறுமி மலாலா யூசுஃப்சாய் என்ற மாணவி.
மிங்கோரா முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால் அங்கு அவர்கள் சொல்வதுதான் சட்டம். முக்கியமாக, பெண்கள் பள்ளி சென்று கல்வி கற்கக் கூடாது என்பது தலிபான்களின் வாதம். இதை மீறினால் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பெண் குழந்தைகள் பெரும்பாலானோர் கல்வி பெற முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள். ஆனால், மலாலா என்ற சிறுமி மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவர். படிப்பின் மீது இருந்த ஆர்வத்தாலும், பெற்றோர்கள் ஆர்வத்தாலும் படிக்க ஆரம்பித்தாள் மலாலா.
மலாலா தனது படிப்பையும் தாண்டி, தனது சமூக மக்களில் பெண் குழந்தைகள் கல்வி பெற முடியாத சூழலை தனது எழுத்துக்கள் வாயிலாக, கட்டுரைகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். தலிபான்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் படும் துன்பங்களை, வேதனைகளை, படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் படிக்க முடியாத சூழ்நிலையில் பெண்கள் இருப்பதை தனது கட்டுரைகளில் சுட்டிக்காட்டி வந்தார். அதோடு மட்டும் நின்று விடாமல் உலகப் புகழ் பெற்ற பிபிசி உருது மொழி வலைப்பதிவு பகுதியில் வெவ்வேறு பெயர்களில் அவ்வப்போது எழுதியும் வந்தார்.
பெண் குழந்தைகள் கல்வி பெற முடியாத நிலையைக் கண்டு வருந்தியதோடு, இந்த பிரச்னைகள் எப்போது சரியாகும்? தலிபான்கள் எப்போது தங்களது பகுதியில் இருந்து விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பதை முன்னிலைபடுத்தியே எழுதி வந்தார் மலாலா. இதனால் மலாலாவை ஒரு பெண் புரட்சியாளர் என்றே ஊடகங்கள் புகழ்ந்தன. அதன் பின்னர் பிரச்னைகளும் விஸ்வரூபம் எடுத்தது.
2012ம் ஆண்டு, அக்டோபர் மாதம் வழக்கம் போல தன்னுடைய தோழிகளுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள் மலாலா. அப்போது எதிரே வந்த தலிபான் தீவிரவாதி ஒருவன் மலாலாவை திடீரென துப்பாக்கியால் சுட, குண்டுகள் துளைத்த காயத்துடன் ரோட்டில் சுருண்டு விழுந்தாள் மலாலா.
இறந்து விட்டாள் என்று எண்ணி தப்பிச் சென்றார்கள் தலிபான் தீவிரவாதிகள். அந்த தாக்குதலில் மலாலாவின் தலை மற்றும் கழுத்து பகுதியில் குண்டுகள் பதிந்திருந்தன. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தீவிரமான சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்த மலாலா அடங்கவில்லை. மீண்டும் தீவிரவாதங்களுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பி வந்தார்.
இதனால் உலக அமைதிக்காக இளம் வயதிலேயே சேவையாற்றும் மலாலாவின் பெயர் சர்வதேச சிறுவர் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு தலிபான்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மலாலா எத்தனை முறை குணமடைந்து வந்தாலும் அவளைக் கொல்வதுதான் எங்கள் லட்சியம் என்று தலிபான்கள் கொக்கரித்தார்கள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெண் கல்விக்கு ஆதரவாக தன் குரலைக் கொடுத்து வந்தார். அவருக்கு எதிராக ஃபத்வா பிறப்பிக்கப்பட்டதால் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று அங்கு நாடு கடத்தப்பட்டார்.
2013ம் ஆண்டில், டைம் பத்திரிகை மலாலாவை ‘உலகின் 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில்’ ஒருவராகக் குறிப்பிட்டது. தனது 16வது பிறந்த நாளில் அவர் ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார். தனது உரையில், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்குக் கல்விக்கு சம உரிமை வேண்டும் என்று மலாலா அழைப்பு விடுத்தார். மேலும், இந்த நோக்கத்தின் அடையாளமாக மாறினார்.
2014ம் ஆண்டில், யூசுப் சாய் மற்றும் அவரது தந்தை பெண்கள் மற்றும் சிறுமிகளை சர்வதேச அளவில் ஆதரிப்பதற்கும் மலாலா நிதியை நிறுவினர். தனது தொண்டு நிறுவனத்தின் மூலம், ஜோர்டானில் உள்ள சிரிய அகதிகளையும், கென்யாவில் உள்ள இளம் பெண் மாணவர்களையும் சந்தித்து, நைஜீரியாவில் இளம் பெண்களை பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதக் குழுவிற்கு எதிராகப் பேசினார். 2014 டிசம்பரில், யூசுப் சாய் தனது பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். பதினேழு வயதில், நோபல் பரிசு பெற்ற இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
அப்போதிருந்து, இன்று வரை மலாலா பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து வாதிட்டு வருகிறார். சர்வதேச அளவில் கல்வித் திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலமும், உலகளாவிய தலைவர்கள் மற்றும் உள்ளூர் வக்கீல்களுடன் கூட்டு சேர்ந்து, இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க புதுமையான உத்திகளை முன்னெடுப்பதன் மூலமும், அனைத்து சிறுமிகளுக்கும் தரமான கல்விக்காக மலாலா நிதி திரட்டும் பணியிலும் இருக்கிறார். மலாலா யூசுப்சாய் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்து வருகிறார்.