

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 நொடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் பலியாகிறார். உலகில் சாலை விபத்துகளுக்கு அடுத்தபடியாக கால்கள் எடுக்கப்படுவது சர்க்கரை நோயினால்தான். வைட்டமின் ‘ஏ’ குறைபாடுகளால் ஏற்படக்கூடிய பார்வை இழப்பிற்கு அடுத்தபடியாக அதிக பார்வை இழப்பு ஏற்படுவது சர்க்கரை நோயினால்தான்.
புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்பிற்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான். சிறுநீரக நோய்களுக்கு முக்கியக் காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவிற்கு முக்கியக் காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படியெல்லாம் மனித வாழ்வின் தரத்தை வெகுவாக குறைக்கக்கூடிய சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம். இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு இன்சுலின் மருந்தை 1930ம் ஆண்டு கனடா நாட்டின் பிரெடெரிக் பாண்டிங் என்பவர் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் கண்டுபிடித்தார். இதற்கு பெஸ்ட் என்ற மருத்துவரும் உதவினார். இவர்களுக்கு வழிகாட்டியவர் ‘மேக்ளியார்டு’ எனும் மருத்துவ அறிஞர். இந்தக் கண்டுபிடிப்பு உலக அளவில் சர்க்கரை நோய் மருத்துவத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
இன்சுலின் எனும் மகத்தான மருந்தை கண்டுபிடித்ததை மனதில் கொண்டு அதற்குக் காரணமான பிரெடெரிக் பாண்டிங் பிறந்த நவம்பர் 14ம் தேதியையே உலக சர்க்கரை நோய் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. மருத்துவத் துறையில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் காலப்போக்கில் மாறிவிடுகின்றன. ஆனால், இன்சுலின் கண்டுபிடிப்பு மட்டும் என்றென்றும் அழியாப் புகழை அதை கண்டுபிடித்தவர்களுக்குக் கொடுத்து வருகிறது. அன்று கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் பல வகையான மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு இன்றும் உபயோகத்தில் உள்ளது.
நமது உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகள் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் ஏற்படுவதே நீரிழிவு நோய்.இதில் இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் இருப்பது முதல் வகை டைம் 1 சர்க்கரை நோய். இது குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோய் இன்சுலின் அளவு போதுமான அளவு சுரக்காமல் இருப்பது அல்லது செயல்படாமல் இருப்பது. இந்த வகை சர்க்கரை நோய்தான் உலகில் 90 சதவீதம் பேருக்கு உள்ளது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உடல் எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி ஏற்படுதல், அதிக தாகம் போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகள். இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறினால் அது நமது கண், இருதயம், சிறுநீரகம், கால் பாதம் ஆகியவற்றை பாதிப்படையச் செய்யும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் இருப்பதால் புண் ஆற வெகு நாட்களாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு அபாயம் 25 மடங்கு அதிகம். ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகக் கோளாறுகள் வரும் வாய்ப்பு 17 மடங்கு அதிகம்.
இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு வருவதில்லை. தொடர்ச்சியாக உடல் உழைப்பு இல்லாமல், உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு நீரிழிவு வரலாம். அடி வயிற்று பகுதியில் கொழுப்புச் சத்தாலும் ரத்த அழுத்தத்தாலும் இந்தியர்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ட் சிண்ட்ரோம் உண்டு. இதனால் இங்கு ஒல்லியான ஆட்களுக்குக் கூட நீரிழிவு வரும் ரிஸ்க் உண்டு.
அறிகுறிகள் இல்லாததாலேயே நீரிழிவு இல்லை என்று சொல்ல முடியாது. அறிகுறிகள் இல்லாமலே ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் அது கண், சிறுநீரகம், இதயம் போன்ற உடல் உறுப்புகளை ரகசியமாக பாதிக்கும். சத்தான உணவு முறைகளாலும், தவறாமல் செய்து வரும் உடற்பயிற்சியாலும், மன உளைச்சலுக்கு ஆளாகாத வாழ்க்கை முறையாலும், நல்ல பழக்க வழக்கங்களாலும் (மது மற்றும் புகைப்பழக்கம்) இந்த நோயைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை நோய் இருக்கிறதா? என மருத்துவரிடம் அறிந்து கொள்வது.சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வையும், கல்வியறிவையும் பெறுவதுதான். நவம்பர் 14ம் தேதி அன்று உலக சர்க்கரை நோய் தினம் கடைப்பிடிப்பதன் உயரிய நோக்கம்.