தேசப்பற்றை கவிதையால் விதைத்த தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்!

அக்டோபர் 19, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்
The first court poet of Tamil Nadu
Namakkal poet Ramalingam Pillai
Published on

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணியம்மாள் தம்பதிக்கு 1888ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி, 7 பெண் பிள்ளைகளுக்குப் பிறகு 8வது ஆண் குழந்தையாகப் பிறந்தவர்தான், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. இவருடைய தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர். இவர் நாமக்கல் ஆழ்வார் ஆரம்பப் பள்ளியிலும் மற்றும் கோவையில் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடையில் ஓவியக் கலையில் சிறந்த ஈடுபாடு காட்டினார். உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரை கேலிச்சித்திரம் வரைந்து அதற்காக பிரம்படி பட்டார். இவர் 1909ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.ஏ. படித்தார். கல்லூரியில் படிக்கும்போது கல்லூரியின் முதல்வரின் படத்தை வரைந்து பரிசு பெற்றார்.

1908 முதல் 1909ல் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் எம்.ஏ. பட்டம் படித்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. இவர் தொடக்கக் காலத்தில் போலீஸ் வேலையில் சேர்க்கப்பட்டார். அதிலிருந்து விலகி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும், பின்பு தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். 3 மாதம் மட்டுமே அந்தப் பணியில் இருந்த அவர், சுதந்திர போராட்டம் கனலாய் தகித்த அந்தக் காலக்கட்டத்தில் அவரும் இந்தப் போராட்டத்தில் குதித்தார்.

இதையும் படியுங்கள்:
நாட்டின் வறுமை நிலைக்கு பொதுமக்களின் பங்கு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
The first court poet of Tamil Nadu

ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டு அந்தத் துறையில் இறங்கினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் படம் வரைந்து தங்கப் பதக்கம் பெற்றார். கவிதை எழுதினார், நாடகம் எழுதினார்.1906ம் ஆண்டு வங்கப் பிரிவினையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டார். வ.வெ.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்களை சந்தித்தார். பல மேடைகளில் விடுதலை முழக்கமிட்டு வந்தார். தேசபக்தி மிக்க தனது பேச்சினால் பல இளைஞர்களை தேசத்தொண்டர்களாக மாற்றினார். மேலும், இவர் அரசின் தடை உத்தரவுகளை மீறி மேடையில் சொற்பொழிவாற்றி வந்தார்.

முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின்பு அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்து காங்கிரசில் இணைந்து சுதந்திரப் போரில் பங்கேற்றார்.

கரூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவரானார். அதனால் போலீஸ் தொல்லைக்கு ஆளானார்.1921 முதல் 10 வருடங்கள் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம் மற்றும் காந்திய கொள்கைகளுக்கு ஆதரவாக கவிதைகளை எழுதிக் குவித்தார். இதனால், ‘தேசியக் கவிஞர்’ என்ற பட்டம் பெற்றார். 1930ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போரில் ராஜாஜியுடன் கலந்து கொண்டார்.

‘கத்தியின்றி ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’

என்னும் பாடலை 1930ம் ஆண்டில் நடைபெற்ற உப்பு சத்தியா கிரகப் போராட்டத்தின்போது தொண்டர்களின் வழிநடைப் பாடலாக பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த வீரத்தின் விளைநிலம்!
The first court poet of Tamil Nadu

இதைப் பொறுக்காத ஆங்கிலேய அரசு இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. 1932ம் ஆண்டு வேலூர் சிறையில் இருந்தார். அப்போது அவர் எழுதிய பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்றன. இவர் எழுதிய ‘மலைக்கள்ளன்’ நாவல்தான் எம்ஜிஆர் நடித்து 1954ம் ஆண்டு ஜனாதிபதி விருது பெற்ற ‘மலைக்கள்ளன்’ திரைப்படம்.

1949ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு ‘அரசவை கவிஞர்’ என்ற பதவி கொடுத்து அவரை கெளரவித்தது. அதோடு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கியது. இவர்தான் தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞர். 1953ம் ஆண்டு சாகித்திய அகாதமியின் உறுப்பினர் ஆனார். காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு 1956ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி கிடைத்தது. இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மபூஷன்’ விருதும் 1971ம் ஆண்டு பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
கிராமப்புற பெண்கள் பாதுகாப்பு குறித்து சமூகம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
The first court poet of Tamil Nadu

'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்று இந்திய மாணவ செல்வங்களான இளந்தலைமுறைக்கு அறிவுரை கூறியவர். சிறந்த மனிதராகவும், உயர்ந்த கவிஞராகவும், உத்தம தேசியவாதியாகவும் வாழ்ந்த கவிஞர் ராமலிங்கம் பிள்ளை 1972ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ந் தேதி தனது 83 வயதில் விண்ணுலகம் சேர்ந்தார். அவர் மறைந்தாலும், அவரது மங்கா புகழும், அவருடைய கவிதை, பாடல் வரிகளும் காலத்திற்கும் நிலைத்து நின்று அவரது புகழ் பாடும் என்பது மட்டும் நிச்சயம்.

'தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமை செயலக பத்து மாடிக்கட்டடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் படைப்புகளை தமிழக அரசு 1998ல் நாட்டுடைமை ஆக்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com