

மதுரையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் அமைந்துள்ள திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி மகரிஷி இங்கு புற்று வடிவில் அமர்ந்து தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு ‘திருப்புத்தூர்’ என்று பெயர் வந்ததாகவும் ஆலய வரலாறு கூறுகின்றது. காலப்போக்கில் இப்பெயர் மருவி தற்போது திருப்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். அன்னை சிவகாமி அம்பாள்.
திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள அன்னை ஸ்ரீ மகாலட்சுமியே முக்கியக் காரணம். சிவபெருமான் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினார். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால்தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் ‘திருத்தளிநாதர்’ ஆலயம் என்று அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகின்றது.
இந்த சிவாலயத்தில் பெருமாள் சன்னிதியும், சொர்க்கவாசலும் உள்ளது அபூர்வமானது. இங்கே பெருமாள் யோக நிலையில் ஜடாமகுடம் தாங்கி, சங்கு சக்கரத்துடன் அமர்ந்த கோலத்தில் தாயாருடன் காட்சி தருகிறார்.
அந்தாகரன், சம்பகாசுரன் எனும் இரு அரக்கர்களை அழிக்க ஈசன் பைரவர் அவதாரம் எடுத்து அவர்களை அழித்து விட்டு, பிறகு இத்தலத்தில் கோயில் கொண்டார் என்பதால் இத்தல பைரவர் யோக பைரவராக வணங்கப்படுகிறார். இவரை குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம். இவ்வாலயத்தின் 2வது பிராகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சன்னிதியில் ஸ்ரீ யோகபைரவர் வலது கையில் இடியை ஏந்திய அபூர்வ கோலத்தில் தரிசனம் தருகிறார்.
உலகில் தோன்றிய 64 பைரவ வடிவங்களின் ஆதிமூர்த்தி இவர்தான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் ‘ஆதி பைரவர்’ என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக, பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால், இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். பொதுவாக பைரவருக்கு ஆடைகள் அணிவிப்பதில்லை. ஆனால், இங்கு வெண் பட்டாடை அணிவிக்கிறார்கள்.
இங்கு கார்த்திகை மாதத்தில் பைரவர் சம்பகாசுரனை வதைத்த விழா 6 நாட்கள் சம்பக சஷ்டி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது 8 விதமான பைரவர்களையும் முன்னிறுத்தி அஷ்ட பைரவ யாகம் நடத்தப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இது கார்த்திகை மாத வளர்பிறை பிரதமை அன்று நவம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது. பைரவரின் இன்னொரு வாகனமான குதிரையை இவ்வூர் மக்கள் பயன்படுத்துவதில்லை. இத்தல யோக பைரவருக்கு பல சிறப்புகள் உண்டு. இந்த பைரவரின் உடலில் 12 ராசிகளும் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். எனவே, இவரை வணங்கி வர கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
கெளதம முனிவரிடம் சாபம் பெற்ற இந்திரனின் மகன் ஜெயந்தன் இந்த பைரவரை வணங்கி சாப விமோசனம் பெற்றான். அதனால் இங்கு மட்டுமே அவன் உருவம் சன்னிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்கு புனுகு சாத்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப்பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.
அர்த்தஜாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரை சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.
திருமண வரம் வேண்டுபவர்கள் இந்தக் கோயிலிலுள்ள அம்பிகையான சிவகாமசுந்தரிக்கு, அர்த்த ஜாம பூஜையின்போது கொண்டையில் பூச்சூடுவதாக நேர்ந்துகொள்ள, திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு திருமணத்தடை நீங்க ஞாயிறு அன்று ராகு காலத்தில் விபூதி அபிஷேகம், குழந்தை பேறு கிடைக்க தேய்பிறை அஷ்டமி அன்று வடைமாலை, சிவப்பு அரளி மாலை சாத்துதல், வறுமை, கடன் தொல்லை, இழந்த சொத்தை மீட்க வெள்ளிக்கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.