கையளவு இதயத்தின் காயம் பட்ட புலம்பல்கள்!

செப்டம்பர் 29, உலக இதய தினம்
The lamentations of a heart
World Heart Day
Published on

லக இதய தினமான இன்று (29.09.2025) விழிப்புணர்வோடு  எனை நீ நன்கு கவனி. உனக்குள் இருக்கும் எனை நீ அனுதினமும் கவனி. நல்ல இதயமான எனை நின் தீய பழக்கத்தால் சிதைத்தது யாா் குற்றம்! எனைத் தொலைத்த பிறகு நீ உயிா் வாழ்வாயா?

உடற்பயிற்சி மறந்தாய்! உறக்கம் தொலைத்தாய்! மதுவின் போதையில் மனம் போன போக்கில் நடந்தாய்! பசி மறந்தாய்! அவசர உலகில் அனைத்தும் மறந்தாய்! நின் பிறப்பிற்கு முன்பே உருவானவன் நான்! எனை நீ மறந்தாய்! நின் உயிா் மூச்சே நான்தானே! எனை சரிவர பராமரிக்காதது யாா் குற்றம்! உன் குற்றமா? என் குற்றமா?

நீ செய்யும் பஞ்சமாபாதக செயலுக்கு வீண் பழி சுமந்தேனே! இதயம் இல்லாதவனாம். உன்னால் எனக்கே வீண் பழியா! காதலில் விழுந்தாய். காமத்தில் திளைத்தாய். கடைசியில் நீ செய்யும் தவறுக்கு எனக்கேன் தண்டனை?

புகை உடலுக்குப் பகை. உனக்கு சந்தோஷம் என்ற நினைப்பில் என்னுடன் உனக்கென்ன பகை? பாழாய்ப்போன புகையால் நானல்லவா தேய்கிறேன். நீ சரிவிகித உணவை தவிா்ப்பதால் பாதிப்பு எனக்குத்தானே. நீ படும் தேவையில்லா கவலையால் என் வேலையல்லவா பாதிக்கிறது!

இதையும் படியுங்கள்:
கோயில் கட்டி, கடவுளாக வணங்கப்படும் ஒரே சீன தத்துவ ஞானி!
The lamentations of a heart

கையளவு இதயமான எனக்கு கஷ்டம் கொடுப்பது நியாயமா? நீ கவலை கொள்வதோடு, எனக்கும் அல்லவா கவலை தருகிறாய்! சராசரியாய் நூறுக்குள் துடித்து உன் வாழ்வை வளமாக்கும் எனை நூற்றி எட்டில் அனுப்புகிறாயே! கேட்டால் பழியை என் மீதல்லவா போடுகிறாய்! நீ செய்யும் தவறுக்கு எனை அட்டாக் செய்துவிட்டு, ஹாா்ட் அட்டாக் என பழியை என் மீதே திணிக்கிறாயே!

முன்பெல்லாம் அறுபதைத் தாண்டியவர்களே எனை பாதிக்க வைத்தனா்! தற்போது நாற்பது தாண்டவே தாண்டவமல்லவா ஆடுகிறாய். எனை சிதைத்துவிட்டு, ‘இதயமே இதயமே’ என சோகப்பாடல் வேறல்லவா பாடுகிறாய்!

இதயம் பழுதாம் எவ்வளவு சுலபமாய் என் மீது பழியைப் போடுகிறாய்! உனக்கான வேலையை நான் சரிவரத்தானே செய்கிறேன். எனக்கான ஆரோக்கியத்தை நீ எங்கே தருகிறாய். செல்போனிலேயே திளைக்கிறாய். காதலுக்கு எனையல்லவா துணைக்கு அழைக்கிறாய். ரத்த ஓட்டத்தை சீா்செய்யும் எனக்குள் உயர் ரத்த அழுத்தம் தந்தது யாா் குற்றம்? நீ செய்யத் தவறிய ஆரோக்கிய சீா்கேட்டால் என் இதயத்தை கத்தியால் கூறு போடுகிறாய்! கேட்டால் ஆஞ்சியோ என்கிறாய்!

இதையும் படியுங்கள்:
ரேபிஸ் தடுப்பூசி கண்டுபிடித்த பாஸ்டரின் மிரள வைக்கும் வாழ்க்கை!
The lamentations of a heart

உடற்பயிற்சி செய்யாமல், உழைக்காமல் தவறான பழக்க வழக்கத்தால் எனைப் பாழாக்கும் குணம் ஏன் கொண்டாய்! காரணம் கேட்டால் பதிலேதும் இல்லையே. குருதியை சரிவர அனுப்பும் எனை உறுதியாய் வைத்திருக்க ஏன் மறந்தாய்? நீ நலமுடன் வாழ வேண்டுமானால் என்னை தினமும் நன்கு கவனி. சரிவிகித உணவை சீராக சாப்பிடு. ஆரோக்கிய உணவை தோ்வு செய். உனது வாழ்க்கை நீட்டிப்பிற்கு நான் தருவேன் உத்தரவாதம்.

அடிக்கடி உடல்  பரிசோதனை செய்து கொள். எனக்கு வேதனை தராதே. உனது ஆரோக்கியமே எனக்கான நன்மை. நான் உனக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறேன். எனைப் பாதுகாப்பாக பராமரிப்பது உன்கையில்தான்.

‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே’ என்பது போல, ‘நான் வாழ உனது ஆரோக்கியம் கெடுத்துக்கொள்ளதே.’ என் விஷயத்தில் மட்டுமல்ல, யாா் விஷயத்திலும் இதயமில்லாது நடக்காதே, அதற்கு எனை பழிகாரன் ஆக்காதே! மனிதா இதயம் இருந்தால்தான் நீ ஒரு  மனிதன். அது இல்லாத நிலையில் நீ ஒரு கேள்விக்குறியே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com