

மனிதனுக்குள் இத்தனை மிருகங்களா?
நெல்லை மாவட்டம், எட்டயபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தார் மகாகவி பாரதியார். 'அருட்கவி பாரதி' என்ற பட்டத்தை அவர் பெற்றபோது அவரின் வயது 11. பின்னர் எட்டாயபுரம் அரசவை கவிஞரானார். பின்னர் மதுரையில் ஆசிரியர் பணி. அதனைத் தொடர்ந்து பத்திரிகை பணி. 1905 முதல் தீவிர அரசியலில் இறங்கி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் தரும் பாடல்கள் பலவற்றை எழுதி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, இறுதியில் 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் காலமானார். அவரது புரட்சிகரமான கருத்துக்கள் சிலவற்றைக் காண்போம்.
நம்மை நாம் கவனிக்குமிடத்து எத்தனை விதமான மிருகங்களாக இருக்கிறோம் என்பது தெரியும். வஞ்சனையாலும், சூழ்ச்சிகளாலும் சமயத்திற்கேற்ப பலவித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் – நரி.
ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் - தேவாங்கு.
மறைந்திருந்து பிறருக்கு தீங்கு செய்பவன் பாம்பு. தர்மத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலேயே மூழ்கிக் கிடப்பவன் - பன்றி.
சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறருக்கு பிரியமாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் - நாய்.
அறிவுத்துணிவால், பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல், முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப வாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன்.- கிளிப்பிள்ளை.
பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும்.அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை.
தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் - கழுகு.
ஒரு நவீன உண்மை வரும்போது அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் - (வெளிச்சத்தை கண்டு அஞ்சும்) -ஆந்தை.
கோவீ.ராஜேந்திரன்
காலத்தால் அழியாத கவிதை!
சென்னையிலே ஒரு இலக்கிய சங்கத்தார் கவிதை போட்டி வைத்தார்கள். முதற்கவிதைக்கு முன்னூறு ரூபாய். இரண்டாவது பரிசு பெரும் கவிதைக்கு இருநூறு ரூபாயும், மூன்றாம் பரிசு பெறும் கவிதைக்கு நூறு ரூபாய் என்றும் விளம்பரம் செய்திருந்தார்கள். புதுவை நண்பர்கள் பாரதியாரிடம் சென்று இந்தப் போட்டிக்கு ஒரு கவிதை எழுதித் தருமாறு தூண்டினார்கள் பாரதியாரும் முதலில் மறுத்தவர் பிறகு ஒரு பாடலை எழுதி அனுப்பினார். ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாடலைத்தான் பாரதியார் எழுதி அனுப்பினார். சங்கத்தின் போட்டியிலே பாரதியின் கவிதை மூன்றாவது பரிசு பெற்றதாக அறிவித்தார்கள். பரிசு பெற்ற பாடல்களை வெளியிட்டும் இருந்தார்கள். புதுவை பாரதி அன்பர்களுக்கு ஒரே கோபம். முதல் இரண்டாம் பரிசுகளைப் பெற்ற கவிதைகளிலே தரமோ, இலக்கிய நயமோ, பொருள் வளமோ இல்லை என்பது அவர்களின் குறை. ‘பாரதி பாடலின் முன் அவை நில்லா’ என அவர்கள் சொன்னார்கள். பாரதியாரின் மனம் சங்கடப்பட்டாலும் உலக நடப்பு அவருக்கு நன்கு தெரியும். ‘சங்கத்தார் யாருக்கோ கொடுக்கத் தீர்மானித்துள்ள பரிசினை நேரடியாக கொடுக்க முடியவில்லை. ஒரு போட்டி வைத்து கொடுத்துள்ளார்கள். நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்?’ என்று நண்பர்களை தேற்றினார் அவர்.
பாரதி அன்பர்கள் அன்று சொன்னது போலவே போட்டியில் முதல், இரண்டாம் பரிசுகளை பெற்ற பாடல்கள் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. மூன்றாம் பரிசு பெற்ற பாரதி பாடலோ இன்றும் தமிழ் மக்கள் மனதை கொள்ளை கொள்கிறது.
ஆர்.ஜெயலட்சுமி
மகாகவி பாரதியின் இறுதிக் காலம்!
மகாத்மா காந்தியை 1919ம் ஆண்டு பாரதி முதன் முறையாகச் சந்தித்தார். 1920ம் ஆண்டு முதல் சுதேசிமித்திரன் இதழின் பதிப்பை மீண்டும் தொடங்கினார். 1920ம் ஆண்டில் ஒரு பொது மன்னிப்பு ஆணை வழங்கப்பட்டது. இறுதியாக, இவர் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது. அப்போது பாரதி உடல்நலக்குறைவு மற்றும் ஏழ்மையுடன் போராடிக் கொண்டிருந்தார். சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் லாவண்யா என்ற யானை, ஒரு நாள் இவர் தேங்காய் வழங்கியபோது, இவரைத் தாக்கியது. இந்த நிகழ்வில் உயிர் பிழைத்த போதிலும், அதன் விளைவாக சில மாதங்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதன் பின்னர், 1921ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அதிகாலை 1 மணியளவில், பாரதியார் இயற்கை எய்தினார். கவிஞன் பாரதியின் இறுதிச் சடங்கில் 14 பேர் மட்டும் கலந்து கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதி தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளைக் கழித்த திருவல்லிக்கேணியிலிருந்த வீடு, எட்டயபுரத்தில் இவர் பிறந்த இல்லம் மற்றும் புதுச்சேரியில் இவர் வாழ்ந்த இல்லம் ஆகியவை நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. எட்டயபுரத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை, மணிமண்டபம் மற்றும் இவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1982ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது. டில்லி இந்திய நாடாளுமன்றம், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் இவரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவரது பெயரில் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. காசியின் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது.
தேனி மு.சுப்பிரமணி
மலையும் உன் காலின் கீழ்தான்!
உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை!
விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால், தோற்கடிக்க அல்ல, உன்னை பார்க்கவே எவனும் பயப்படுவான்.
எந்த ஏற்றத்துக்கும் ஓர் இரக்கம் உண்டு எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு. எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு!
நீங்கள் எத்தனை முறை தோற்றீர்கள் என்பது முக்கியம் அல்ல, நீங்கள் எத்தனை முறை எழுந்தீர்கள் வென்றீர்கள் என்பதே முக்கியம்!
மலையைப் பார்த்து வியந்து விடாதே! மலை மீது ஏறினால் அதுவும் உன் காலின் கீழ்தான்!
பாரதியார் பிறந்த நாளில் அவரையும் ,அவரது பொன்மொழிகள் கவிதைகளை போற்றி வணங்குவோம்!
எஸ்.மாரிமுத்து