

மூதறிஞர் இராஜாஜி (சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி – 10.12.1878 – 25.12.1972) ஒரு இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் என பன்முக மேதை. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், சென்னை மாநில முதல்வராகவும், காங்கிரஸ் தலைவராகவும், மேற்கு வங்க ஆளுநராகவும் பணியாற்றியவர்; அரசியலிலும், இலக்கியத்திலும் சிறந்து விளங்கி, இந்தியாவின் முதல் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் ஒருவர்.
மூதறிஞர் இராஜாஜிக்கு இதயம் வலப்புறம் இருந்தது. பொதுவாக, எல்லோருக்கும் இடது பக்கம்தான் இதயம் இருக்கும். இவருக்கு நன்றாக வயலின் வாசிக்கத் தெரியும். நல்ல கவிஞருமான இராஜாஜி எழுதிய பல பாடல்கள் புகழ் பெற்றவை. எம்.எஸ்.அம்மா பாடிப் பிரபலமான ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ பாடலை எழுதியது அவர்தான்.
இராஜாஜி உப்பு சத்தியாகிரகம் சென்றபோது ஒரு வாழ்த்து வந்தது இப்படி. ‘திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை’ இந்த வாழ்த்தை அனுப்பியது யார் தெரியுமா? காந்திஜி.
மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக இராஜாஜியால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகை ‘விமோசனம்.’ இப்பத்திரிகை பல ஆண்டுகளாக சிறப்பாக நற்கருத்துகளைப் பரப்பி வந்தது.
இராஜாஜி மகாபாரதத்தை ‘வியாசர் விருந்து’ என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அதன் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ரூபாய் விலையில் மலிவு பதிப்பு வெளியிட்டது ஒரு பதிப்பகம்.
1947, ஆகஸ்ட் 15 நள்ளிரவு, சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு. அப்போதைய கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன், நேருவை அழைத்து ‘உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படிக் கொடுப்பது?’ என்று கேட்டார்.
'எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது' என நேருவுக்கும் குழப்பமாக இருந்தது. உடனே, இராஜாஜியை அணுகி, ‘நான் நாத்திகன். எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது. அதனால் தாங்கள்தான் இதற்குத் தீர்வு கூற வேண்டும்’ என்றார்.
‘கவலை வேண்டாம். எங்கள் தமிழகத்தில், மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜ குருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம். நாமும் அதையே பின்பற்றுவோம்’ என்றார். அதன்படியே நடந்தது.
எந்த ஒரு விஷயத்தையும் சமயோசிதமாக கையாள்வதில் வல்லவர் இராஜாஜி. ஒரு சமயம் மதுரை தமுக்கம் மைதானத்தில் இராஜாஜி தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். தேவர் பேசி முடித்ததும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அத்துடன் கூட்டத்தில் பெரும் பகுதியினர் வீட்டுக்குச் செல்ல எழுந்து விட்டனர். நிலைமையை புரிந்து கொண்ட இராஜாஜி, ‘நண்பர்களே, நான் தேவர் கூறியவை அனைத்தையும் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். இதோடு எனது உரையையும் முடித்துக் கொள்கிறேன்’ என்று பேசி, தனது பேச்சை நிறைவு செய்தார். கால நேரம், இடம், மக்கள் மனம் ஆகியவற்றை அறிந்து சமயோசிதமாகப் பேசி முடித்த இராஜாஜியின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் கிருஷ்ணாராவை ஒரு ஊரில் பள்ளிக்கூடத் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தனர். முதலமைச்சரான இராஜாஜியை சந்தித்தார் அமைச்சர் கிருஷ்ணாராவ்.
விஷயத்தைக் கேட்ட இராஜாஜி, ‘கட்டடம் திறக்க எல்லாம் நீங்கள் போக வேண்டாம். வர முடியவில்லை என்று தகவல் அனுப்புங்கள்’ என்றார். கிருஷ்ணாராவுக்கு சிறிது வருத்தம்தான். ஆனால், இராஜாஜியின் சொல்லை மீற முடியுமா? அமைச்சரின் வருத்தத்தை அறிந்த இராஜாஜி, ‘அந்த ஊரில் இருக்கிற பெரிய மனிதர் யாராவது திறந்து வைத்தால் ஊருக்கும் நல்லது; பள்ளிக்கூடத்திற்கும் நல்லது. ஏதாவது நன்கொடை தருவார். நாம் திறந்து வைத்த பள்ளிக்கூடம் ஆயிற்றே என்ற ஆசையால் அதன் வளர்ச்சிக்கு உதவிகளைச் செய்வார். இதெல்லாம் நம்மால் ஆகுமா?’ என்றார் இராஜாஜி.
இராஜாஜியைப் பார்த்து ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார், ‘சென்ற ஆண்டு ஆதரித்த கட்சியை இந்த ஆண்டு அகற்ற எண்ணியது ஏன்? உங்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையென்று ஆகிவிடாதா?’ என்றார். அதற்கு இராஜாஜி, ‘சென்ற ஆண்டு வரை எனக்குப் பொருத்தமாயிருந்த சட்டை, இந்த ஆண்டு சின்னதாகச் சுருங்கி விட்டதால் நான் புதுச்சட்டை தைத்துக் கொண்டேன் இதிலென்ன தப்பு?’ என்றாராம்.