குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் அவர் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் மகனாக 1919ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்தபோது அவரது காதுகள் பெரியதாக இருந்தன. ‘என்ன இவனுக்கு வெற்றிலை இலையைப் போன்ற இவ்வளவு பெரிய காதுகள்’ என்று பலரும் கிண்டல் செய்தனர். அவர்தான் பின்னாளில் இந்திய செயற்கை கோள்களின் தந்தை என புகழப்பட்ட விக்ரம் அம்பாலால் சாராபாய்.
டெக்ஸ்டைல் துறையில் கொடிகட்டி பறந்த செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த விக்ரம் சாராபாய் நினைத்திருந்தால் ஒரு தொழில் மேதையாக உருவாகியிருக்கலாம். ஆனால், அவரது நாட்டம் எல்லாம் இயற்பியல் கற்பதில்தான் இருந்தது. இதனால் ஆரம்பக் கல்வியை அகமதாபாத்தில் முடித்து விட்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார்.
1947ம் ஆண்டு அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் தொடங்கிய சாராபாய் காஸ்மிக் கதிர்வீச்சு ஆய்வில் ஈடுபட்டார். அதன் கிளைகள் காஷ்மீர், திருவனந்தபுரம் மற்றும் கொடைக்கானலில் நிறுவப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் 1957ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஸ்புட்னிக் 1 விண்கலம் உலகில் முதன்முதலாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதுவே மற்ற நாடுகளையும் விண்வெளியில் ஏவுகணைகளை செலுத்தத் தூண்டியது.
இந்தியாவில் இதேபோன்ற செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ள ஆர்வம் கொண்டார் சாராபாய். தகவல் தொடர்பு, இயற்கை வளங்கள் ஆய்வு, வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றுக்கு விண்வெளி ஆராய்ச்சி அவசியம் என்பதை அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருக்கு எடுத்துரைத்தார். இதன் விளைவாக 1962ல் உருவானதுதான் ‘இன்டியன் நேஷனல் கமிட்டி பார் ஸ்பேஸ் ரிசர்ச் நிறுவனம்’ (INCOSPAR).
இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி குழு தலைவராக விக்ரம் சாராபாய் நியமிக்கப்பட்டார். தனது தலைமை பொறுப்பிற்கு சாராபாய் பெற்ற மாதச் சம்பளம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. அதோடு இந்தியாவில் முதல் ராக்கெட் விண்ணில் செலுத்த இடம் தேர்வு செய்ய அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தனது சொந்த செலவில்தான் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது விஷயமாக அவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க எப்போது வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்பட சாராபாய் தேர்வு செய்த இடம்தான். தென் இந்தியாவின் திருவனந்தபுரம் பகுதியில் புறநகர் பகுதியில் நிலநடுக்கோட்டிற்கு அருகே இருந்த தும்பா. இங்கிருந்துதான் இந்தியாவின் முதல் சவுண்டிங் ராக்கெட் நைக்கி அப்பாச்சி 1963ம் ஆண்டு நவம்பர் 21ல் விண்ணில் ஏவப்பட்டது. அது 30 கிலோ எடையுடன் 207 கி.மீ. உயரத்தை எட்டியது. விண்ணில் செலுத்த இந்த ராக்கெட் எதில் எடுத்துச் செல்லப்பட்டது தெரியுமா? சைக்கிளில்.
இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி குழு 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இஸ்ரோ (ISRO) எனப் பெயர் மாற்றம் கண்டு அதிகாரப்பூர்வமாக பெங்களுரில் துவக்கப்பட்டது. திருவனந்தபுரம் தும்பா ஏவுகணை தளத்திற்கு அருகில் ரயில் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்ற சாராபாய் அது முடிந்த பின் ஹோட்டல் ஒன்றில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும்போது 1971 டிசம்பர் 30ல் மாரடைப்பால் காலமானார்.
இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியபட்டா 1975 ஏப்ரல் 19ல் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்னேவுதலுக்கு முழு முதல் காரணமாக இருந்தவர் விக்ரம் சாராபாய்தான். அவரது வழிகாட்டுதல்படியே அது விண்ணில் ஏவப்பட்டது. அதேபோல், அவரின் திட்டத்தின்படியே 1977ம் ஆண்டு ஜனவரி 1 அன்று SITE என்ற செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் தொலைக்காட்சி வாயிலாக 24,000 கிராமங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் கல்வி கற்க முடிந்தது. இது எந்த நாட்டிலும் நடத்தப்படாத சாதனை.
அறிவியல் ஆராய்ச்சிகளில் தீவிர ஈடுபாடு இருந்தபோதிலும் சாராபாய் தொழில், வர்த்தகம் மற்றும் இந்திய நாட்டின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டினார். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட், டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் ரிசர்ச் அசோசியேஷன், கல்பாக்கம் அணு சக்தி நிலையம், எலெக்ட்ரானிக் கார்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் யுரேனியம் கார்பரேஷன் போன்ற அமைப்புகள் உருவாக சாராபாய்தான் காரணம். விக்ரம் சாராபாய்க்கு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் எனும் இரண்டு உயரிய விருதுகளை வழங்கி இந்திய அரசு அவரை கௌரவித்தது.