
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு கலந்த, புளித்த மாவில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான, வேகவைத்த தென்னிந்திய உணவான இட்லியை இன்றைய கூகுள் டூடுள் ‘இட்லியை கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் கொண்டாடுகிறது.
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவிலிருக்கும் சின்னஞ்சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இட்லி. இது மட்டுமல்ல, உடல் நலக் குறைவுடன் இருக்கும் மருத்துவப் பயனாளிகளுக்கும் (நோயாளிகளுக்கும்) மருத்துவர்கள் அதிக அளவாகப் பரிந்துரைக்கும் உணவு இட்லி என்றால் அது மிகையில்லை. எந்தவொரு எண்ணெயையும் பயன்படுத்தாமல் நீராவியில் வேக வைக்கப்பட்ட இட்லியால் வயிற்றுக்கு எந்தவொரு பிரச்னையும் ஏற்படாத உணவு என்றால் இட்லிதான். இதேபோன்று வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள், குறிப்பாக தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்பவர்கள் இட்லியையே தங்கள் விருப்ப உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவர். தற்போது இந்த இட்லியின் மீது கூகுளுக்கு திடீரென்று ஏன் இப்படியொரு விருப்பம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவாகும். இட்லியின் பண்டையக்கால பெயர் ‘இட்டரிக’ என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில் இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி குறித்து, 1250ம் ஆண்டுக்குப் பின் எழுதப்பட்ட நூல்களில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறைதான் இப்போது பின்பற்றப்படுவதாகச் சொல்கின்றனர். இந்தோனேசியாவிலிருப்பவர்கள் `கெட்லி” (Kedli) என்றழைத்தனர். கெட்லி என்பதுதான், `இட்லி’ என்று மருவியது என்கின்றனர்.
வெண்மையான நிறத்தில் இருக்கும் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மாவாக அரைக்கப்பட்டு, அந்த மாவைப் புளிக்க வைத்துச் செய்யப்படும் இந்த உணவு தமிழ்நாட்டு உணவுதான் என்றும், இது தமிழ்நாட்டில் ‘இட்டவி’ (இட்டு அவி) என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டு, அதிலிருந்து இட்லி என்று மருவி இருக்கிறது என்று சொல்லி, இந்த உணவு தமிழ்நாட்டு உணவு என்று சொல்பவர்களும் உண்டு. இட்லியின் தோற்றம் எங்கு என்பதில் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இட்லிதான் பெரும்பான்மையான உணவு என்று சொல்லலாம்.
பொதுவாக, இட்லியை தனியாக உண்பதில்லை. இட்லியின் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தென்னிந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெரும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லி பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய கூகுள் டூடுள் கேலிப் படத்தில் தலைவாழை இலையில் அரிசி, அரிசி அரைக்கப்பட்டு ஒரு பாத்திரத்தில் மாவு புளிக்க வைக்கப் பெற்ற பின்பு, அதிலிருந்து இட்லி தட்டில் இட்லி மாவு ஊற்றப்பட்டு ஆவியால் வேக வைக்கப்பட்டு எடுத்து வைக்கப்பட்டிருப்பதும், அதனையடுத்து அதனை சட்னி, சாம்பார், இட்லி பொடி கொண்டு சாப்பிடலாம் என்பதைக் கருவாகக் கொண்டு வரையப்பெற்றிருக்கிறது.
பிரிட்டனை சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் ஒரு முறை, இந்திய உணவான இட்லியை சலிப்பு மிக்கது என்றும் மக்கள் இதை ஏன் மிகவும் விரும்புகிறார்கள் என்றும் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்ட நிகழ்வு, இட்லி பிரியர்கள் நடுவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது. இட்லி பிரியர்கள் பலர் தங்களுக்கு விருப்பமான உணவு, தவறாக விமர்சிக்கப்படுவதைக் கண்டு விரக்தியடைந்து அத்தளத்தில் தங்களது மறுமொழிக் கருத்துகளைப் பதிவிட்டனர்.
இந்நிலையில், இட்லிக்கு ஆதரவாக, ‘இட்லியைக் கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் இன்றைய கூகுள் டூடுள் அமைந்திருப்பது இட்லிப் பிரியர்களுக்கும், இந்திய உணவுக்கும் குறிப்பாக, தமிழ்நாட்டின் பெருமையான உணவான இட்லிக்கு கூகுள் அளித்த சிறப்பு என்றே கருதலாம்.