
கூகுள் வலைத்தளத்தின் முதன்மைப் பக்கத்தில் ஒவ்வொரு நாளுக்குமான சிறப்புகளை, பன்னாட்டு அளவில், நாடுகள் அளவில் வெளிப்படுத்தும் விதமாக, கேலிப்படங்கள் உருவாக்கப்பட்டு அவ்வப்போது காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. கூகுள் வலைத்தளத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமான இலச்சினைக் கேலிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
1998 ஆம் ஆண்டில் கூகுளின் முதல் கேலிப்படம் வெளியிடப்பட்டது. இது கூகுள் நிறுவனர்களான லாறி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் பர்னிங் மேன் அலுவலகத்திற்கு வெளியே வருவார்கள் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் விரைவு வழியாகக் கொண்டு, கூகுள் இலச்சினையில் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, 2000 ஆம் ஆண்டு மே 1 முதல் கூகுள் இலச்சினையின் வழியாக, பல்வேறு நிகழ்வுகள், பண்பாடுகள், இடங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று இந்திய விடுதலைத் திருநாளினை முன்னிட்டு இடம் பெற்றிருக்கும் ‘இந்திய விடுதலை நாளுக்கான கூகுள் டூடுள்’ இந்தியாவில் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம்.
இந்த கூகுள் டூடுளில் கூகுளின் ஆங்கில எழுத்துகளில் (GOOGLE) G எனும் ஆங்கில எழுத்து நீல நிறத்தில் பொதுவாக இடம் பெற்றிருக்கிறது.
அடுத்திருக்கும் O எனும் ஆங்கில எழுத்தினுள் ஏவூர்தி (Rocket) இடம் பெற்றிருக்கிறது.
அதனையடுத்திருக்கும் O எனும் ஆங்கில எழுத்தினுள் துடுப்பாட்டம் (Cricket) விளையாட்டு இடம் பெற்றிருக்கிறது.
அதனையடுத்திருக்கும் G எனும் ஆங்கில எழுத்தினுள் நீல நிற மலர்களுடனான கொடி-செடி இடம் பெற்றிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து வரும் L எனும் ஆங்கில எழுத்தில் சதுரங்கம் (Chess) விளையாட்டு இடம் பெற்றிருக்கிறது.
கடைசியாக வரும் E எனும் ஆங்கில எழுத்து திரைப்படத் துறையினைக் குறிக்கும் குறியீடாக அமைந்திருக்கிறது.
இந்திய விண்வெளித் துறை, அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. குறிப்பாக, பிஎஸ்எல்வி (PSLV) மற்றும் ஜிஎஸ்எல்வி (GSLV) போன்ற ஏவூர்திகளைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்தச் செயற்கைக் கோள்கள் தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, மற்றும் இயற்கை வளக் கண்காணிப்பு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகின்றன.
மேலும், மங்கள்யான் திட்டம் முலம் செவ்வாய்க் கிரகத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையைப் பெற்றது. மங்கள்யான் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வந்து பல்வேறு புதியத் தகவல்களைச் சேகரித்தது.
இஸ்ரோ பல்வேறு நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இஸ்ரோவின் சாதனைகள், இந்தியாவின் விண்வெளித் துறையின் வளர்ச்சியை மட்டுமின்றி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. எனவே, O எனும் ஆங்கில எழுத்தினுள் ஏவூர்தி (Rocket) படம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது.
இந்தியாவில் துடுப்பாட்டம் ஒரு பிரபலமான விளையாட்டாக மட்டுமின்றி, தேசத்தின் அடையாளமாகவும் உள்ளது. இந்திய அணி, உலகளவில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் இந்தியத் துடுப்பாட்டத்தின் புகழுக்கு ஒரு சான்றாகத் திகழ்கின்றனர். இந்தியத் துடுப்பாட்ட அணி, டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் போன்றவற்றில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணி உலகின் முன்னணித் துடுப்பாட்ட அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனவே, O எனும் ஆங்கில எழுத்தினுள் துடுப்பாட்டம் (Cricket) விளையாட்டு இடம் பெற்றிருப்பதும் சிறப்புக்குரியதே.
இந்தியாவில், வேளாண்மையே முக்கியத் தொழிலாக இருக்கிறது. மேலும், இந்தியச் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மக்களின் உரிமைக்கான வண்ணம் நீலம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. பின்தங்கிய மக்களைச் சார்ந்திருக்கும் வேளாண்மைத் தொழிலை அடையாளப்படுத்தும் வகையில், G எனும் ஆங்கில எழுத்தினுள் நீல நிற மலருடனான செடி இடம் பெற்றிருப்பதை இங்கு மிகச் சிறப்பாகக் கருதலாம்.
இந்தியாவில் சதுரங்க விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்து இருப்பதுடன், உலக அளவில் இந்திய வீரர்கள் பலர் இவ்விளையாட்டில் உலகச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். குறிப்பாக, இளம் வயதுச் சதுரங்க வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி போன்றவர்கள் உலக அரங்கில் தொடர்ந்து சாதித்து வருகின்றனர். எனவே, L எனும் ஆங்கில எழுத்தினுள் சதுரங்கம் (Chess) விளையாட்டு இடம் பெற்றிருப்பதும் ஏற்புடையதே.
இந்தியத் திரைப்படங்கள், இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கான மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்து, குறிப்பிட்ட மக்களின் கலாச்சாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் பிரதிபலிக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக, இந்தியத் திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்து, உலகத் திரைப்பட ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்து வருகிறது.
உலகளவில் இந்தியத் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலகில் திரைப்பட வெளியீட்டில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. எனவே, E எனும் ஆங்கில எழுத்து இந்தியத் திரைப்படங்களின் சிறப்பைச் சொல்வதாக அமைந்திருப்பதும் கூடுதல் சிறப்பாகக் கருதலாம்.
இந்தியாவின் சிறப்புகளை, இன்றைய இந்திய விடுதலை நாள் சிறப்புக் கூகுள் டூடுள் வழியாக வெளிப்படுத்தியிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு அனைவரும் நன்றி தெரிவிக்கலாம்.