
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்கியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, இந்தியா, ரபேல் போர் விமானங்கள் மூலம் ஸ்கால்ப் ஏவுகணைகள் மற்றும் ஹம்மர் குண்டுகளை பயன்படுத்தியது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 25 பேர் இந்து மதத்தை சேர்ந்த ஆண்கள். இதனால் கணவர்களை இழந்த 25 பெண்களும் தங்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தையும் இழந்தனர்.
பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்துக்கு சிந்தூர் என்று பெயர். எனவே அந்த பெண்களின் துயர் துடைக்க நடத்தப்பட்ட இந்த பதிலடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட நிலையில் 4 நாட்களாக இருந்து வந்த போர் பதற்ற சூழல், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு சிக்கலான மற்றும் பெரும்பாலும் விரோதமான உறவைக் கொண்டுள்ளன. இது பல வரலாற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளில் வேரூன்றியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் எல்லைக்கோடுகள் பிரிக்கப்பட்டு சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே மோதல் போக்கு என்பது தொடங்கி இன்று வரை நடந்துகொண்டே தான் வருகிறது.
காஷ்மீர் தொடர்பான நீண்டகால சர்ச்சை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு முக்கிய காரணமாக இருந்தன. இதனால், இரு நாட்டு எல்லைகளும் எப்போதும் பதற்றமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே இதுவரை நடந்துள்ள போர்கள் விவரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
1947:- பாகிஸ்தான் ஆதரவுடன் பழங்குடி படைகள் காஷ்மீரில் ஊடுருவினர். இந்தியா தன்னுடைய படைகளை அனுப்பி முதன் முதலில் பாகிஸ்தானுடன் போரிட்டது. இந்த முதல் போர், 1947-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி தொடங்கி 1949-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முடிவுக்கு வந்தது.
1965:- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் கிப்ரால்டர் மூலம் சண்டை தொடங்கியது. அதனால் இந்தியா பதிலடி தாக்குதலை தீவிரமாக்கியது. இந்த போர், 1965-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி தொடங்கி, செப்டம்பர் 23-ந்தேதி முடிவுக்கு வந்தது.
1971:- இந்த போர் வங்காளதேசம் தனி நாடாக உருவாக வழிவகுத்தது. இந்த போர், 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி முடிவுக்கு வந்தது.
1999:- பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவின் கார்கில் பகுதியில் ஊடுருவ முயன்றனர். இதனால் கார்கில் போர் ஏற்பட்டது. 1999-ம் ஆண்டு மே 3-ந் தேதி தொடங்கிய இந்த போர், ஜூலை 26-ந்தேதி முடிவடைந்தது.
2016:- இந்தியாவின் உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் விமான தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடந்தது.
2019:- புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் பாலக்கோட்டு பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது விமான படை தாக்குதல் நடத்தி அழித்தது.
பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு தந்து அடைக்கலம் தரும் வரை இந்தியா-பாகிஸ்தான் தான் போர் ஓயவே ஓயாது.