
உலகெங்கும் ஏப்ரல் 29ஆம் தேதி சர்வதேச நடன தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் புகழ் பெற்ற பாலே நடனக் கலைஞர் ஜீன் ஜார்ஜஸ் கோவ்ரே பிறந்த நாள். அவரது நினைவைப் போற்றும் விதமாக, அவரது பிறந்த தினத்தை சர்வதேச நடன தினமாகக் கொண்டாட, இன்டர்நேஷனல் தியேட்டர் இன்ஸ்ட்டிடியூட், வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, 1982ஆம் வருடம் முதல் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இசையைப் போன்றே, நடனமும் மொழி, மதம், நாகரிகம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றைக் கடந்தது. மனதை கொள்ளை கொள்ளும் தன்மை, தன்னை மறந்து நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் காந்த சக்தி, நடனத்திற்கு உண்டு. பேச்சும், மொழியும் வருவதற்கு முன்னால் மனிதன் முகபாவம், கை மற்றும் உடல் அசைவுகள் மூலமாகத் தன் எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து வந்தான்.
நடனம் என்பது தொன்மையான கலை. இந்து மதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், நடனக் கலை அருளும் தெய்வமாக நடராஜர் என்று சித்தரிக்கப்படுகிறார்.
திருமாலின், கிருஷ்ண அவதாரத்தில், காளிங்கன் என்ற சர்ப்பத்தை அடக்கி, அதன் தலையில் நின்று ஆடிய காளிங்க நர்த்தனத்தை பாகவத புராணம் வர்ணிக்கிறது. இந்து புராணங்களில், கந்தர்வர்கள் எனப்படும் தேவ கணங்கள் இசை மற்றும் நடனக் கலையில் வல்லுநர்களாக கருதப்படுகிறார்கள்.
பண்டைய கிரேக்க புராணங்களில் டெர்பிகோர் என்ற தேவதை, நடனக் கலையின் தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார்.
நடனக் கலையைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல், பரத முனியால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரம். கிறிஸ்து பிறப்பதற்கு 200 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்.
உலகின் தொன்மையான மொழியான தமிழின் பண்டைய இலக்கியங்களில், நடனத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நடனமாடும் இடத்தை, “கூத்தாட்டு அவை” என்கிறது திருக்குறள். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியம். இக் காப்பியத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான மாதவி, நடனமாது. இக்காப்பியத்தில் நடனங்கள் பற்றிய பல செய்திகள் உள்ளன. ஐந்து வயதில் நடனம் கற்கத் தொடங்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாது சிறப்புறக் கற்று, பன்னிரெண்டு வயதில் அரசன் முன்னிலையில் அரங்கேற்ற வேண்டும் என்கிறது சிலப்பதிகாரம்.
“ஏழு ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆறு ஆண்டில்
சூழ் கழல் மன்னர்க்குக் காட்டல் வேண்டி”
என்ற வரிகள் இதை விளக்குகின்றன.
இதைத் தவிர அறிவனார் என்ற புலவர் எழுதிய “பஞ்ச மரபு”, சாத்தனார் எழுதிய “கூத்த நூல்” ஆகியவை நடனத்திற்காக எழுதப்பட்ட நூல்கள்.
பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட நம்முடைய நாட்டில், பல வகையான நடனங்கள் இன்றும் தழைத்து வருகின்றன.
சில முக்கியமான நடனங்கள் பரதநாட்டியம், கதக், ஒடிசி, குச்சிபுடி, மணிபூரி. இதைத் தவிர பஞ்சாபின் பங்க்ரா, குஜராத்தின் கர்பா ஆகிய பாரம்பரிய நடனங்கள் விழா மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த பரந்த உலகில் பலவகையான நடனங்கள் மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்றுகின்றன. அவற்றில் ஒரு சில நடனங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
பாலே : மறுமலர்ச்சி காலத்தில் இத்தாலிய அரச சபையில் ஆரம்பித்த இந்த நடனம், தற்போதைய புது யுகத்திற்குத் தேவையான மாறுதலை ஏற்றுக் கொண்டு பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாட்டின் நடனமாக விளங்குகிறது. நயம், வலிமை, கட்டுக்கோப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பாலே, தொழில் நுட்பம் கொண்ட செம்மைப்படுத்தப்பட்ட நடனமாக மிளிருகிறது.
சல்சா : க்யூபாவின் பிரபலமான நடனம். இதனை ஆப்ரிக்க மற்றும் கரீபிய நடனங்களின் கலவை என்பார்கள். கேட்பவர்களை சுண்டி இழுக்கும் வகையிலான இசை, நடனமாடுபவர்களின் அதிவேகமான பாத அசைவுகள் இந்த நடனத்தின் சிறப்பு. உலகின் பல பாகங்களில், பண்டிகைகள் மற்றும் பொழுது போக்கு மன்றங்களில் அதிகமாகக் காணப்படும் நடனம்.
ஃபிளமெங்கோ : ஸ்பெயின் நாட்டின் நடன வகை. கிதார் இசை, மனதை மயக்கும் பாடல், இசைக்கேற்ப ரசிகர்கள் எழுப்பும் கரவொலிகள், கொண்டது இந்த நடனம். சோக ரசம் முதல் மகிழ்ச்சி வரை பல பாவங்களை வெளிப்படுத்தி ஆடுவது இதன் சிறப்பு அம்சம்.
ஐரிஷ் நடனம் : அயர்லாந்தின் நடன வகை. நளினமான மற்றும் வேகமான பாத அசைவுகளை இந்த நடனத்தில் காணலாம். பாதம் வேகமாக அசைந்தாலும், நடனமாடுபவர் உடலின் மேற்பகுதியை அசைக்காமல் ஆடுவது இந்த நடனத்தின் சிறப்பு.
டாங்கோ : ஆர்ஜைன்டீனாவின் நடன வகை. ஆண், பெண் ஜோடியாக ஆடும் நடனம். நடனமாடும் ஜோடிகளிடையே உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தும் தழுவல், துல்லியமான ஆனால் வேகமான அசைவுகள், தம்பதியர் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக பாவம் ஆகியவற்றை இதில் காணலாம்.
கே.பாப் நடனம் : தற்போது உலகனைத்தும் இளைஞர்களை ஈர்க்கும் இந்த நடனம் கொரியாவைச் சேர்ந்தது. உள்ளம் கவரும் கவர்ச்சியான இசை, ஒன்றிணைக்கப்பட்ட வேகமான நடன அசைவுகள் இதனுடைய தனித் தன்மை.
ப்ரேக் டான்ஸ் : இதனை ஹிப் ஹாப் நடன வகை என்றும் கூறுவார்கள். இந்த நடனம் ஆப்ரிக்க அமெரிக்க மற்றும் போர்ட்டோரிக்கொ இளைஞர்கள் 1980ஆவது வருடம் நியூயார்க் நகரில் உருவாக்கியது. இந்த நடனம் உலகெங்கும் பல நாடுகளில் பரவி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நடனம் பொழுது போக்கு வழங்கும் கலை அம்சம் மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு உதவுகிறது. இதயத்தை சீராக வைத்துக் கொள்ள, உடலின் சமநிலை, நெகிழ்வுத்தன்மை, அவயவங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு நடனம் உதவுகிறது. பாடலுக்கேற்றபடி உடலை அசைத்துச் செய்யும் தேகப் பயிற்சி உடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மக்களை, சமுதாயத்தை ஒன்று சேர்க்கும் இணைப்புப் பாலம் நடனம். சர்வதேச நடன தினத்தில், இதனை அறிமுகப்படுத்திய நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கூறுவதுடன், நடனக் கலை அழியாமல் பாதுகாத்து, அதனை மற்றவர்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்களை வாழ்த்துவோம். உடல் நலம் பேணுவதற்குத் தேவையான சில நடன அசைவுகளையாவது அறிந்து கொள்வோம்.