
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 8 ஆம் நாளன்று ‘உலக கழுதை நாள்’ (World Donkey Day) கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக, கழுதைகள் மனிதர்களுக்கு உறுதியான உதவியாளர்களாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதர்கள், கழுதைகளை மட்டும் எப்போதும் சரியான முறையில் பராமரிப்பதில்லை.
‘உலகக் கழுதை நாள்’ என்பது பாலைவன விலங்குகள் மீது சிறப்பு அக்கறை கொண்ட அறிவியலாளர் ராஸிக் ஆர்க்கின் என்பவரது சிந்தனையாகும். 2018 ஆம் ஆண்டில் உலக கழுதை நாள் தொடங்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் தாழ்மையான கழுதையின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும் வளர்ச்சியடையாத நாடுகளில் இவை மூட்டை சுமக்கும் விலங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேலை செய்யும் கழுதைகள் பெரும்பாலும் வாழ்வாதார மட்டத்தில் அல்லது அதற்குக் கீழே வாழ்பவர்களுடன் தொடர்புடையவை. வளர்ந்த நாடுகளில் சிறிய எண்ணிக்கையிலான கழுதைகள் இனப்பெருக்கத்திற்காக அல்லது செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
தமிழர்களின் வளர்ப்பு விலங்குகளில் கழுதை முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவ்விலங்கு பொறைமலிக் கழுதை என சங்க இலக்கியங்களிலும், நெடுஞ்செவிக் கழுதை என அகநானூற்றுப் பாடல்களிலும், வெள்வாய்க் கழுதைப் புல்லினம் என புறநானூற்றுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேப் போன்று, மிளகு, உப்பு மூட்டைகளை கழுதைகளின் மீது வணிகர்கள் ஏற்றிச் சென்றதை, பொருநராற்றுப் படையும் (77-82), அகநானூறும் (207:5-6) குறிப்பிட்டுள்ளது.
தமிழில் மூத்த தேவி (மூதேவி) என்றழைக்கப்படும் இந்த தெய்வத்தின் வாகனம் கழுதையாகும். கழுதைகள் குறுக்கே செல்வதும், கனைப்பதும் நல்ல சகுனமாக நம்பப்படுகிறது.
கழுதை (Donkey) என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம்.
முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளுக்கு தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த சுமைகளைத் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.
பாண்டிய மன்னர்கள் காலத்தில் முத்து குளித்த முத்துக்களை மூட்டைகளாகக் கட்டி, பொதி சுமக்கப் பயன்படும் வாகனங்களாகக் கழுதைகளே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குக் கப்பல் போக்குவரத்து இருந்த காலகட்டத்தில் பயணிகளின் பொதிகளைச் சுமப்பதற்கு அதிகளவில் கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டன.
மனிதர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக கழுதைகள் வாழ்ந்து வந்தாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, சரக்கு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக கழுதைகள் பயன்பாடு முற்றிலும் குறைந்து போயின. தமிழகத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 1,000-க்கும் கீழே வந்து விட்டதாகக் கால்நடை மருத்துவத்துறை அண்மையில் அறிவித்ததுடன், கழுதை இனத்தைப் பாதுகாக்கவும், பெருக்கவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் புதிய திட்டத்தையும் அறிவித்து, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படுத்தியும் வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 கழுதை வளர்ப்போர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொது மேலாண்மை மற்றும் நோய் பராமரிப்பு குறித்து செயல்திறன் பயிற்சி அளிக்கப்படுவதடன் இந்தப் பயனாளிகளுக்கு குடற்புழு மருந்து, தடுப்பூசிகள், தாது உப்புக் கலவை, கட்டும் கயிறுகள், குளம்பு வெட்டும் கருவி, முதலுதவிப் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது.
நம்மோடு இணைந்து வாழ்ந்த கழுதையினால், தற்போது எந்தப் பயனுமில்லை என்று அதனை ஒதுக்கி வைத்திருக்கும் நாம், இன்றைய நாளிலாவது, எந்த எதிர்பார்ப்புமில்லாத உழைப்பிற்கு உதாரணமாகச் சொல்லப்படும் கழுதைகளைப் போற்றிடலாம்.