
ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் நாளன்று ‘உலக கிளி நாள்’ (World Parrot Day) கொண்டாடப்படுகிறது. உலகளவில் கிளி இனங்களைப் பாதுகாப்பதற்காகவும், காடுகளில் கிளிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களைத் தணிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக கிளி அறக்கட்டளை (World Parrot Trust) எனும் அமைப்பு இந்த நாளை 2004-ம் ஆண்டு நிறுவியதுடன், முதன் முதலாக உலக கிளிகள் நாளையும் கொண்டாடியது. கிளிகளின் வாழ்விடம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்நாள் நினைவூட்டுகிறது. அழிந்து வரும் இந்த உயிரினங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் பொதுமக்களை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
கிளிகள் இருந்ததற்கான முதல் எழுத்துப்பூர்வச் சான்று கிமு 1000 ஆம் ஆண்டிலேயேக் கிடைக்கிறது. கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. கிளிகளில் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் இருக்கின்றன. கிளிகள் 40 முதல் 80 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட நீண்ட ஆயுட்காலம் கொண்டவை.
கிளியின் சராசரி ஆயுட்காலத்தைக் கணிப்பது மிகவும் கடினம். பொதுவாக, கிளி எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. ஆப்பிரிக்கச் சாம்பல் கிளிகள் 40 முதல் 60 ஆண்டுகள் வரை வாழலாம்; அதே நேரத்தில் நடுத்தர அளவிலான கிளிகள் பொதுவாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. காகடூக்கள் மற்றும் மக்காக்கள் 70 அல்லது 80 ஆண்டுகள் வரை வாழலாம்.
உலகின் மிகப் பழமையான கிளி 2016-ம் ஆண்டில் இறந்த காக்டூ எனும் கிளியாகும். இக்கிளி இறக்கும் போது, அதன் வயது 83.
செல்லப்பிராணியாக வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகள், காட்டிலிருக்கும் கிளிகளை விட நீண்ட காலம் வாழ்கின்றன.
உலகின் மிகப்பெரிய கிளி இனமான காகபோ கிளிகள் ஒன்பது பவுண்டு எடையும், இரண்டு அடி நீளமும் வளரக் கூடியவை. இக்கிளியால் பறக்க முடியாது என்றாலும், மரங்களில் குதித்து ஏறுவதில் வல்லமை கொண்டவை. இக்கிளிகளின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 80 ஆண்டுகளாகும். காகபோ வகை கிளி நியூசிலாந்தில் மட்டுமே அதிக அளவில் இருக்கின்றன.
பொதுவாக, இவை மரப்பொந்துகளில் வாழக்கூடியவை. கிளிகளுக்கு ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்களும் ஒரு வளைந்த அலகும் இருக்கும். அனைத்துக் கிளிகளுக்கும் இரண்டு விரல்கள் முன்னோக்கியும், இரண்டு பின்னோக்கியும் இருக்கும், இவை உணவளிக்க, ஏற மற்றும் கிளைகள் அல்லது பொம்மைகளைப் பிடிக்கப் பயன்படுகின்றன. இந்த ஏற்பாடு ஜிகோடாக்டிலி என்று அழைக்கப்படுகிறது.
கிளிகள் வளைந்த அலகைக் கொண்டிருக்கின்றன. இந்த அலகுகளில் மேல் அலகை மட்டுமே கிளிகள் அசைக்க முடியும். விதைகள், பழங்கள், கொட்டைகள், பூக்கள், மொட்டுக்கள் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களை கிளிகள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் கியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்னும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
பயிற்சி அளித்தால் மனிதர்கள் பேசும் வார்த்தைகளை உச்சரிக்கும் திறன் கொண்டவை கிளிகள். பேசும் கிளிகள் இருந்ததற்கான முதல் சான்று கிமு 500-ல் பெர்சியாவில் காணப்படுகிறது. ஆண் ஆப்பிரிக்கச் சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்தக் கிளிகள் சிக்கலான வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களையும் பேசும் திறன் கொண்டவை. 1995-ம் ஆண்டில், "பக்" என்ற கிளி 1,700 வார்த்தைகள் வரை அறிந்ததற்காக கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பிடித்தது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.
கிளிகள் பொதுவாக, பச்சை நிறம் கொண்டவை. ஒளிமயமான பச்சை, நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் கிளிகள் இருக்கின்றன. கிளிகள் அழகானவை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இன்றியமையாதவை.
கிளியானது, ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே இடும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மிகவும் புத்திசாலித்தனமான பறவை இனங்களில் கிளிகள் இடம் பெறுகின்றன. ஆப்பிரிக்கச் சாம்பல் கிளிகள் பகுத்தறிவு, சொற்களஞ்சியம் பெறுதல் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றில் திறன் கொண்டவை. அமேசான் கிளிகள், பல்குரல் மற்றும் சமூக நுண்ணறிவுக்காக கொண்டாடப்படுகின்றன.
இந்தியாவில் கிளிகள் வளர்ப்பது நீண்டகாலமாக இருந்து வரும் வழக்கம்தான். இருப்பினும், 1990 - 1991-ம் ஆண்டில் ஏற்பட்ட பன்னாட்டு உடன்பாடு அடிப்படையில், கிளிகளை வளர்க்க இந்திய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், இந்தத் தகவல் அறியாமல் பலர் வீடுகளில் கிளிகள் வளர்த்து வருகின்றனர். இது போன்று, வீடுகளில் வளர்க்கும் கிளிகளை விடுவிக்க வேண்டுமென்று சில இயக்கங்கள் தொடங்கப்பெற்று பல வீடுகளிலிருந்து கிளிகள் விடுவிக்கப்பட்டன. இருப்பினும், இப்படி விடுவிக்கப்பட்ட கிளிகள் வெளியில் இருக்கும் அச்சுறுத்தல்கள் அறியாமல் பாதிப்புக்குள்ளாகும், மேலும் அவற்றால் தேவையான உணவைத் தேடிக் கொள்ள முடியாமல் உயிரிழந்து விடும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, வீட்டில் வளர்க்கப்படும் கிளிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருக்கின்றன. ஆனால், அதனை இந்திய அரசு ஏற்காததால், உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி கிளி வளர்ப்பவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்துருவைக் கொண்டு உலக கிளிகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 2025-ம் ஆண்டுக்கான கருத்துருவாக, ‘சமூகமாக இருங்கள், ஒன்றாக இருங்கள், கிளியைப் போன்று அன்புடன் இருங்கள்’ (Be Social, Stick Together, Be More (Love) Parrot) அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அப்புறமென்ன, உலக கிளிகள் நாளில், கிளிகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு பரப்புரைகளைச் செய்திடுங்கள், உங்கள் இணையுடன் கிளியினைப் போல் அன்புடன் இணைந்திருங்கள்...!