
இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. பர்பிள் கேப் என்பது ஐபிஎல் போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருது. இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்களுக்கு பர்பிள் கேப் (Purple Cap) வழங்கப்படுகிறது. 2008-ல் ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து பர்பிள் கேப் வழங்கப்பட்டு வருகிறது. 2008 முதல் 2024 வரை ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் கேப் வென்றவர்களின் முழு விவரத்தை பார்க்கலாம்.
2008: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர், ஐபிஎல் லீக்கின் தொடக்க சீசனின் 11 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் பர்பிள் கேப்பை வென்றார்.
2009: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.
2010: டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றினார்.
2011: இலங்கையின் லசித் மலிங்கா இந்திய டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.
2012: தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்க்கேல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பிள் கேப்பை வென்றார். சிறந்த பந்துவீச்சு மூலம் இந்த விருதை வென்ற முதல் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ஆவார்.
2013: மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ, இந்திய டி20 லீக்கில் முழு ஃபார்மில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். இதுவரை எந்தப் போட்டியிலும் எந்தவொரு பந்து வீச்சாளரும் வீழ்த்தாத அதிகபட்ச விக்கெட்டு இதுவாகும். பிராவோவின் சாதனை எட்டு சீசன்களாக முறியடிக்கப்படாமல் இருந்தது.
2014: சிஎஸ்கே வீரர் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா 16 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.
2015: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடிய பிராவோ 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். பிராவோ இரண்டு முறை பர்பிள் தொப்பியை வென்ற முதல் பந்து வீச்சாளர் ஆனார்.
2016: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஸ்விங் பவுலர் புவனேஷ்வர் குமார் 17 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது அணியை வெற்றிக்கு கூட்டிச் சென்றதுடன் பர்பிள் கேப்பை வென்றார்.
2017: புவனேஷ்வர் குமார் இந்திய டி20 லீக் வரலாற்றை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பர்பிள் கேப்பை வென்ற முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் 14 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.
2018: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ டை பஞ்சாப் அணிக்காக 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். இந்த விருதை வென்ற ஒரே ஆஸ்திரேலியர் இவர்தான்.
2019: தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது 40 வயதில் இந்திய டி20 லீக் பர்பிள் கேப்பை வென்றதன் மூலம் வயது வெறும் எண் என்பதை நிரூபித்தார். அந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
2020: டெல்லி அணியின் தென்னாப்பிரிக்க வலது கை வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, 17 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.
2021: பிராவோவின் சாதனையை சமன் செய்து, வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல், இந்திய டி20 லீக்கில் ஆர்.சி.பி அணிக்காக 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.
2022: வலது கை லெக் பிரேக் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 27 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார்.
2023: குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பிள் கேப்பை வென்றார்.
2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்சல் பட்டேல் 24 விக்கெட் வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றார். வெறும் 14 போட்டிகளில், ஹர்ஷல் 19.88 சராசரியுடன் மொத்தம் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஆனார்.
இதுவரை புவனேஷ்வர் குமார், பிராவோ மற்றும் ஹர்ஷல் படேல் மட்டுமே இரண்டு முறை பர்பிள் தொப்பியை வென்றுள்ளனர். ஹர்ஷல் படேல் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் ஒரே ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையைப் படைத்துள்ளனர் (32). 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு வெவ்வேறு அணிகளுக்கு ஐபிஎல் பர்பிள் தொப்பியை வென்ற ஒரே வீரர் ஹர்ஷல் படேல் ஆவார். ஹர்ஷல் படேல் மற்றும் பிராவோவைத் தவிர, தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா மட்டுமே 30 விக்கெட்டுகளை எட்டிய ஒரே பந்து வீச்சாளர்கள்.