
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக சொந்தமாக்கியது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்நிலையில் கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ரோகித் சர்மா 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய விராட்கோலி, சுப்மன் கில் உடன் இணைந்து, இங்கிலாந்து பந்து வீச்சை தெறிக்கவிட்டு மளமளவென ரன் சேகரித்த நிலையில், 52 ரன்கள் எடுத்த போது கோலி அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்து எல்லோருடைய பந்து வீச்சையும் அடித்து நொறுக்கினர். சுப்மன் கில் 102 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 78 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 40 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 17 ரன்னிலும் அவுட்டாகி 50 ஓவர் முடிவில் இந்திய அணி 356 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் 6.2 ஓவர்களில் தடாலடியாக 60 ரன்களை எடுத்தனர். ஆனால் அதன் பின்னர் அவர்களால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொர்ப்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். டாம் பான்டன், அட்கின்சன் ஆகியோர் எடுத்த 38 ரன்களே அந்த அணியில் அதிகபட்சமாகும். எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 24 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
34.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 214 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா, அக்ஷர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சுப்மன் கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. முன்னதாக நாக்பூர், கட்டாக்கில் நடந்த ஆட்டங்களிலும் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருந்தது. இதே போல் 20 ஓவர் தொடரையும் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது நினைவிருக்கலாம்.