

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் -2026 ஜப்பான் நாட்டின் அய்ச்சி-நகோயா நகரங்களில்செப்டம்பர் 19ல் தொடங்கி அக்டோபர் 4 ல் முடிவுறுவதை நாமனைவரும் அறிவோம். இருபதாவது ஆசியப் போட்டியான இதில் 43 விதமான விளையாட்டுக்கள், 71 துறைப் பிரிவுகளுடன்(Disciplines) விளையாடப்படுகின்றன. மொத்தமாக 469 பதக்கப் போட்டிகள் இடம் பெற்றுள்ள இதில் 45 ஆசிய நாட்டு அணிகளுடன் முதல் முறையாக ஆசிய அகதிகள் அணியும் பங்கேற்று அணிகளின் எண்ணிக்கையை 46 ஆக உயர்த்தியுள்ளது.
மக்கட்தொகையில், உலகில் நம்பர் ஒன் நாடாக உயர்ந்துள்ள நமது நாட்டிலிருந்து, 500 விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி, பல சாதனைகளையும் புரிந்து வருகின்றனர்.
துப்பாக்கி சுடும் போட்டியில், தனி நபர் டிராப் பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த நீரு தண்டா, மிக அரிய சரித்திரச் சாதனையை நிகழ்த்தி அனைவரையும் அசர வைத்துள்ளார். 30ல் 28 டார்கட்டுகளில் துல்லியமாகச் சுட்டு தங்கப் பதக்கத்தைத் தட்டி வந்திருக்கிறார். இந்தச் சாதனையை 48 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இதற்கு முன்னர் 1978 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற போட்டியில் ரந்தீர் சிங் இப்பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற நீரு, குழுப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைத் தட்டி வந்து, நமக்கெல்லாம் டபுள் சந்தோஷத்தைத் தந்துள்ளார்!அவரைப் பாராட்டி வாழ்த்துவோம்!
நமது கபடி டீமும், வில்வித்தைக்காரர்களுங்கூடத் தூள் எழுப்பியுள்ளார்கள்.
செப்டம்பர் 30 நிலவரப்படி, நமது நாடு 59 மொத்தப் பதக்கங்களுடன் 7 வது இடத்தில் உள்ளது. அவற்றில் 10, தங்கப் பதக்கங்கள். துப்பாக்கிச் சுடுதலில் 3, வில் வித்தையில் 3, கபடியில் 2, கிரிக்கட்டில் 1 மற்றும் தனிநபர் விளையாட்டில் 1.
வெள்ளியில் 21,வெண்கலப் பதக்கங்கள் 27 ம் பெற்றுள்ளோம்.
அதே நேரத்தில் நம் அண்டை நாடான சீனா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது. மொத்தமாக, வாயைப் பிளக்க வேண்டாம்!-268 பதக்கங்களுடன் மகத்தான முதலிடத்தை வகிக்கிறது!
-தங்கம் - 149
-வெள்ளி - 66
-வெண்கலம்-53
பெரும்பாலான போட்டிகளில் அது இன்னொரு சிறப்பையும் தொடர்ந்து நிர்வகித்து வருகிறது. அதாவது அதிகமான தங்கப் பதக்கங்கள்; அதற்கடுத்ததாக வெள்ளி; இறுதியாக வெண்கலம். ஓர் ஒப்பீட்டிற்காக நாம் நோக்கினால், நாம் வாங்குவதில் வெண்கலப் பதக்கங்கள் அதிகமாகவும், அடுத்து வெள்ளி என்றும் கடைசியாகவே தங்கப் பதக்கங்கள் என்றும் வருகின்றன.
நாம் தற்பொழுது முன்னேறி வருவது உண்மைதான் என்றாலும், ’இது போதாதே!’ என்ற ஆதங்கமும் மனதை வருத்தத்தானே செய்கிறது. இதற்குத்தீர்வு காண வேண்டுவது நம் ஒவ்வொருவரின் கடமை.
ஏற்கெனவே விளையாட்டு வீரர்களாக உள்ளவர்களின் கடமை மிக அதிகம்;
புதிய இளைஞர்களும் கோதாவில் குதிக்கவேண்டும்;
இந்த இரண்டு விதத்தினருக்கும் இந்திய மக்கள் அனைவரும் உதவிக்கரம் நீட்டவேண்டும்.
ஆளும் அரசுகளும், அதிகாரிகளும், விளையாட்டுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.
நமக்கு முன்னால், சீனாவைத் தவிர்த்து ஐந்து நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
அவையெல்லாம் நம்மைவிடப் பலவிதத்திலும் சிறிய நாடுகளே. பஹ்ரைன், தாய்லாந்து, உஸ்பெஸ்கிஸ்தான், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவைதான் அவை.
முன்பெல்லாம் சில நல்ல திட்டச் செயலாக்கங்களைத் தெரிந்துகொள்ள, அவை சிறப்பாகச் செயல்படும் இடங்களுக்கு நேரில் சென்று, நடைபெறும் நுணுக்கங்களை நேரில் பார்த்துத் தெரிந்து வருவது வழக்கம். இப்பொழுதும் அம்முறை செயல்பாட்டில் இருந்தாலும், விஞ்ஞானம் நமக்குப் பல நவீன வசதிகளை வழங்கியுள்ளது.
இருக்கும் இடத்தில் இருந்தபடியே,இந்த நிமிடம் வரை வளர்ந்துள்ள நுணுக்கங்களை மட்டுமல்லாது, நாளை வரப்போகும் நுணுக்கங்களையும் நமது கம்ப்யூடர்கள் போதிக்கத் தயாராக உள்ளன. விரல் நுனியின் அசைவில் விபரங்கள் வந்து கொட்டுகின்றன. பயன்படுத்திக் கொள்ள நேரமும், திறமையுந்தான் தேவை.
அடுத்த 4 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்போது நாம் இன்னும் முன்னேறி இருக்கவேண்டும். இதையே இலக்காக்கி முன்னேறுவோம்!-விளையாட்டு, பொருளாதாரம் இரண்டிலும்!
இந்த ஆழமான பகுப்பாய்வை வாசிப்பதன் மூலம், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள், விளையாட்டுத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் உலகத் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடிப்பதற்கான தெளிவான தொலைநோக்குக் பார்வையைப் பெறலாம்.